மாஜிக் மந்த்ரா! (20)
சென்ற வாரம்: மந்த்ரா போட்ட மந்திரங்கள் வழக்கம்போல சொதப்பலானது. இனி-அவள்தான் சின்னவளாகச் சுருங்கி இருந்தாள். பூனை தாத்தா அப்படியே தான் இருந்தார். ஆனால், அவள் மந்திரம் போடும்போது 'நான்' என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். நாங்கள் என்று தாத்தா வையும் சேர்த்துக் கொண்டு விட்டாள். அது விபரீதமாகி விட்டது. எப்படித் தெரியுமா?மங்காத்தா ரங்கனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.''பத்து ரூபாய்க்கு குறையாது!'' என்ற மங்காத்தாவிடம், ''பூனையை பார்த்தப் புறம் தான் விலை பேசுவேன்!'' என்று ரங்கன் கூண்டிடம் நெருங்கும் போது, 'படார்' என்ற சத்தம் கேட்டது. மூவரும் திடுக்கிட்டுத் திரும்பினர்.கருப்புப் பூனை இருந்த பெட்டி தூள் தூளாகச் சிதறிப் பறந்து கொண்டிருந்தது. பெட்டி இருந்த இடத்தில் மந்த்ரா உட்கார்ந் திருந்தாள்.''ஏய்! இவ எப்படி இங்கே வந்தாள்?'' என்று குழறினர் மங்காத்தாவும், வடிவும்.அதே சமயம், மந்த்ராவின் அருகிலிருந்த 'கரேல்' என்ற உருவத்தை பார்த்த ரங்கன் அலறினான்.''அந்தப் பொண்ணு எப்படி வந்தாங்கறது இருக்கட்டும். அவ அருகில் இருக்கே அது தான் நீங்க விற்கக் கொண்டு வந்த பூனையா? பூனையா இது... ஐய்யய்யோ பூதம், இல்லே, கருஞ்சிறுத்தை, வேங்கை, புலிகளை நான் வாங்கறதில்லே பொண்ணுங்களா... ஆளை விடுங்க!'' என்று கூறி ஓட முற்பட்டான்.மந்த்ராவின் மந்திரம் கருப்புப் பூனையை சேர்த்து வளரச் செய்துவிட்டது. கருப்புப் பூனை அவள் அளவுக்கு கருஞ்சிறுத்தையாகி இருந்தது. நல்ல வேளை மயக்கத்தில் இருந்தார் தாத்தா.'ஐயையோ! நான் தாத்தாவை இவ்வளவு பெரிசாக்கணும்னு நினைக்கல்லியே! நான்தான் வளரணும்னு...' சட்டென்று தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.''தாத்தா என்னை மன்னிச்சுடுங்க. மறுபடியும் தப்புப் பண்ணிட்டேன்... நீங்க எங்கே இருக்கணுமோ அப்படி பண்ணிடறேன்... '' என்று மந்திரம் போட்டாள். அந்தப் பரபரப்பில், அவசரத்தில் இப்போதும் வார்த்தை குழறி விட்டது.'எப்படி' என்பதற்கு பதில், எங்கே என்று சொல்லி விட்டாள். கருஞ்சிறுத்தை எங்கே இருக்கும் காட்டில்! மந்த்ராவின் மந்திரம் பலித்து விட்டது. அந்தப் பகுதி அமேசான் காடு போலாயிற்று. மரங்களும், கொடிகளும், செம்மிக் கிடந்தன. பெரிய, பெரிய மலைப் பாம்புகள் மரக்கிளைகளைச் சுற்றிக் கொண்டு தங்கள் நாக்கை அடிக்கடி நீட்டிக் கொண்டு இருந்தன. இருண்டு அடர்ந்த கானகத்தின் நடுவே, தாங்கள் இருப்பதைக் கண்ட மங்காத்தாவும், வடிவும் 'வீல்' என்று பீதியுடன் கத்தினர்.அவர்களுடைய அலறலைக் கேட்ட, காட்டுப் பறவைகள் பயந்து, பட படவென்று சிறகடித்துப் பறந்து ஓடின. குரங்குகள் 'கீச் கீச்' என்று கத்தியபடி கிளைக்குக் கிளை தாவின.மந்த்ரா தன் தலையில் தானே, 'நறுக் நறுக்'கென்று குட்டிக் கொண்டாள்.''தாத்தா, என்னை மன்னிச்சுடுங்க... உங்க பேத்தி இப்படித் தப்புத் தப்பா மாஜிக் செய்யறதைப் பாத்து உங்க மனசு உடைந்து போகும். எதுவுமே நடக்காத மாதிரி எல்லாம் அதன் அதன் இடத்துக்குப் போகும்படி செய்துடறேன்,'' என்று குரல் தழுதழுக்க, துக்கம் தொண்டையை அடைக்கக் கூறிக் கொண்டே மந்திரங்களைக் கூறலானாள்.அடுத்த வினாடி, 'பாப்' என்று ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. காடு இல்லை. கருஞ் சிறுத்தை இல்லை. மலைப் பாம்பைக் கண்டு அலறிய மங்காத்தாவும் இல்லை. சிலந்திக் குரங்கைக் கண்டு நடுங்கிய வடிவு இல்லை. எல்லாம் மாயமாகத் தோன்றியது போலவே மறைந்து போயிற்று.'அப்பாடா! குழப்படிகளை ஒரு தினுசா சரி செய்துட்டேன்!' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மந்த்ரா.அப்போது...''மந்த்ராக் குட்டி! இங்கேயா இருக்கே?'' என்று கேட்டுக் கொண்டே பூனை நடை நடந்து வந்தார் கேசவன் குட்டி. ''கொஞ்சம் கண்ணை மூடினேன் நல்ல தூக்கம்! அது சரி நான் கண் அசந்திருந்த போது, நீ மாஜிக் செய்து தொல்லை எதிலும் மாட்டிக் கொள்ள வில்லையே?'' என்று மந்த்ராவின் கால்களில் தன் வெல்வெட் உடலை உரசியபடி சோம்பல் முறித்து கொட்டாவி விட்டது கருப்புப் பூனை.மந்த்ராவுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி. தாத்தா தன் தப்புத் தாளங்கள் எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.''எதுவும் இல்லே தாத்தா... நான் ஒரு மாஜிக் செய்தேன். அது சரியா பலிச்சுட்டுது. அப்படி சொன்னா நீங்க எவ்வளவு சந்தோஷப் படுவீங்க?'' என்று கூறியபடி பூனையைத் தூக்கி அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள்.தான் குள்ளியாகிப் போனதும், அடர்ந்த கானகத்தை உருவாக்கி மங்காத்தாவை அலற வைத்ததும், பிறகு காட்டை மறையச் செய்ததும் அவள் மனத்திரையில் நிழலாடின.'தாத்தாவுக்கு நான் செய்த குழப்படிகள் ஏதும் தெரியாது!'' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். தாத்தா கேசவன் குட்டியும் தன் பூனைக் கண்களைச் சிமிட்டி சிரித்துக் கொண்டார்!மந்த்ரா ஹாஸ்டல் அறைக்கு போனபோது மங்காத்தாவின் கட்டில் காலியாக இருந்தது.''எங்கே போய் விட்டாள்?'' என்று கவலைப்படலானாள் மந்த்ரா. அமேசான் காட்டிலே, அனகோண்டா மலைப் பாம்பைக் கண்டு அலறிய மங்காத்தாவின் முகம் மந்த்ராவின் கண் முன் தோன்றியது. ''நான்தான் அந்த மாயக் காட்சிகளை எல்லாம் மறையச் செய்து விட்டேனே! அவளுக்கு நடந்தது எதுவும் நினைவி லிருக்காது. என் மாஜிக்கின் ரகசியம் அது. அவள் வழக்கம் போல என்னோடு மோத ஹாஸ்டலுக்கு வந்திருக்கணுமே. ஏன் காணோம்? எங்கே போனாள்? ஒரு வேளை குட்டிச் சாத்தான் அமேசான் கானகத்தோடு அவளையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு போய் விட்டதோ?'' என்று குழம்பித் தவித்தாள் மந்த்ரா.மங்காத்தாவின் படுக்கைக்கு அருகே உள்ள மற்றொரு படுக்கையில் வடிவும் கிட்டத் தட்ட மந்த்ராவைப் போலவே, தவிப்புடன் இங்கும், அங்கும் பார்த்துக் கொண்டும், நகத்தைக் கடித்துக் கொண்டும் தவிப்பதைக் கண்டாள் மந்த்ரா.''வடிவை விட்டு விட்டு, இவள் மட்டும் எங்கே போனாள்? இன்னும் சற்று நேரத்தில் ஹாஸ்டல் வார்டன் ஒவ்வொரு அறையாக சோதனைக்கு வருவார். பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு அவரவர் அவரவர்களுடைய படுக்கையில் இருக்கிறார்களா என்பதை செக் செய்துவிட்டு விளக்கை அணைத்து, அறைக் கதவை சாத்திக் கொண்டு போவார். அறையில் உள்ளவர்களை சரிபார்க்கும்போது மங்காத்தா இல்லை என்று தெரிந்தால் ஏகக் குழப்பமாகி விடுமோ,'' என்று கவலைப்பட்டாள் மந்த்ரா.மங்காத்தாவை கண்டால் மந்த்ராவுக்கு பிடிக்காதுதான். அவள் பிறருக்குத் தொல்லை கொடுத்தாலும், அவளுக்கு தொல்லை ஏற்படுவதை விரும்பவில்லை மந்த்ரா.என்ன செய்யலாம் என்ற யோசித்துக் கொண்டிருக்கும்போது, அறைக் கதவு டொக் டொக் என்று தட்டப்பட்டது. வார்டன் வந்து விட்டார், எல்லாரும் இருக்கிறார்களா... என்று சரிபார்க்க.''எல்லாம் அவங்க, அவங்க படுக்கையிலே போய் உட்காருங்க. அட்டண்டென்ஸ் எடுக்கப் போறேன்!'' என்று கட்டைக் குரலில் கூறியபடி, தன் மூக்குக் கண்ணாடியை கழற்றி துடைத்து விட்டு, மீண்டும் அதை அணிந்து கொண்டார் ஹாஸ்டல் வார்டன் அன்னக்கிளி.தவித்துப் போன மந்த்ரா, அவசர அவசர மாக குட்டிச் சாத்தானைக் கூப்பிட்டாள்.'மங்காத்தா அங்கு இல்லாதிருப்பதை வார்டன் அன்னக்கிளி பார்க்காதிருக்க ஏதாவது செய்' என்று கட்டளையிட்டாள் குட்டிச் சாத்தானுக்கு.பட்டியலை கையில் ஏந்தியபடி பெயர் களைக் கூப்பிட்டு 'டிக்' செய்யப் பேனாவுடன் தயாராக இருந்த வார்டன் அன்னக்கிளியின் கை திடீரென்று அவளை அறியாமல் உதறியது. யார் தட்டி விட்டார்கள்? பேனாவி லிருந்து மை சளக்கென்று அவள் அணிந் திருந்த மூக்குக் கண்ணாடியில் தெளித்து, அவள் எதையும் பார்க்க முடியாதபடி செய்தது.மந்த்ரா உத்தரவுப்படி குட்டிச் சாத்தான் செய்த வேலைத்தனம்தான் அது!''ஓவ்... என்ன? பேனாவை எழுதச் செய்ய கீழே உதறாமல், தவறுதலாக மேல் நோக்கி உதறி விட்டேன். ச்சே...! மூக்குக் கண்ணாடி பூரா இங்க். மோசமான பேனா!'' என்று தன் பேனா மீது குற்றம் சாட்டிய வார்டன், ''எல்லாரும் படுங்க. நான் போய் மூக்குக் கண்ணாடியை சுத்தம் செய்யணும்... விளக்கை மறக்காமல் அணையுங்கள்,'' என்று இங்க் கரை படிந்த மூக்குக் கண்ணாடியுடன் தட்டுத் தடுமாறியபடி குளியலறையை நோக்கி நடந்தார் வார்டன் அன்னக்கிளி.'நல்லவேளை! என் மாஜிக் இந்தத் தடவை சரியாக பலித்து விட்டது. மங்காத்தா இங்கு இல்லாததை வார்டன் பார்க்க முடியாதபடி செய்து விட்டது என் மாஜிக்' என்று மங்காத்தா வின் காலிப் படுக்கையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் மந்த்ரா.அப்போது...வடிவுக்கரசியின் படுக்கையை ஒட்டியிருந்த ஜன்னல் வழியே, இரண்டு கால்கள் உள்ளே நுழைந்தன. -மாஜிக் தொடரும்.