உள்ளூர் செய்திகள்

மாய மோதிரம் (24) - இருகூர் இளவரசன்

ஆஞ்சநேயரைக் கட்டிப் பிடித்து கொண்டிருக்கும் முகுந்தன் மீது, குட்டிச்சாத்தான் பாய்ந்ததும் எதிர்புறமாகத் தெறித்து விழுந்தது குட்டிச்சாத்தான்.முகுந்தனுக்கு மோதிரத்தைக் கொடுத்து தைரியம் ஊட்டி வழியனுப்பி வைத்த அந்தப் பெரியவர் அங்கே வந்தார். முகுந்தன் அவரைக் கண்டதும், ஓடிச்சென்று கட்டிக் கொண்டான்.''ஐயா... இதோ இந்த நாய் என்னைத் துரத்தி வந்தது. ஆனால், இது சாதாரண நாய் அல்ல, இந்த நாயிடமும் ஏதோ சக்தி இருக்கிறது,'' என்றான்.''இந்த நாயினுள் இருப்பது தீய சக்தி! தீய சக்திக்கு என்றும் அழிவு உண்டு. இப்போது பார்... உன்னிடம் நான் தந்த அந்த மோதிரத்தை என்னிடம் கொடு,'' என்றார் பெரியவர்.முகுந்தன் உடனே கழட்டிக் கொடுத்தான்.அந்த மோதிரத்தை சுருண்டு விழந்து கிடந்த நாயின் மீது வீசினார்.அந்த நாய் சுருண்டு பிரண்டது. ஏதோ தாங்க முடியாத வலியால் துடித்தது போன்று உருண்டு, எழுந்து தலை தெறிக்க ஓடியது. சுவாமிஜியும், ராஜமாணிக்கமும், நம்பூதிரியுடன் கடுமையான பூஜையில் இருந்தனர்.ஓடி வந்த நாய் ஆசிரமத்தின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி நின்றது.நம்பூதிரி பார்த்து விட்டார்.குட்டிச்சாத்தான் வந்துவிட்டது; மோதிரம் கொண்டு வந்திருக்கும்; குட்டிச்சாத்தானே சீக்கிரமாய் அந்த மோதிரத்தைக் கொடு,'' எனக் கேட்டார்.அது கேட்டதுதான் தாமதம், ஒரே பாய்ச்சலாய் நம்பூதிரியின் மீது பாய்ந்தது. நம்பூதிரியின் குரல்வளையைப் பிடித்துக் கடித்துக் குதறியது. ரத்த வெள்ளத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் மந்திரத்தை சொல்ல முடியாமல் தவித்தார். இதைக் கண்ட சுவாமிஜியும், ராஜமாணிக்கமும் ஓடினர்.நம்பூதிரியை கடித்துக் கொன்றது சாத்தான். பிறகு சுவாமிஜியைத் தேடி ஓடியது. சுவாமிஜி ஒரு அறைக்குள் ஓடி கதவை மூடிக்கொண்டார்.கதவின் அருகே வந்து நின்ற குட்டிச் சாத்தான், கதவை இடித்தது. கதவு நொறுங்கி விழுந்தது. நாயின் உருவத்தில் இருக்கும் குட்டிச்சாத்தான் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, சுவாமிஜியைப் பார்த்தது.''குட்டிச் சாத்தான் நமஹ... குட்டிச்சாத்தானே என் தெய்வம்... இந்த உலகத்தில் சாத்தானின் ராஜ்யம் அலைய நான் பக்தர்களைத் திரட்டுவேன்,'' என்று அந்த பதற்றத்திலும் சொன்னார் சுவாமிஜி.சுவாமிஜியின் மீது, ஒரே தாவு தாவியது நாய். நம்பூதிரியின் கழுத்தைக் கவ்வியது போலவே சுவாமிஜியின் கழுத்தையும் கவ்வியது, போட்டுப் புரட்டிப் புரட்டி கடித்தது. உடலெங்கும் நாய்க்கடி, அறையெங்கும் ரத்தம். சுவாமிஜி கண்களைத் திறந்தபடி செத்து மடிந்தான்.பிறகு குட்டிச்சாத்தான் யோசித்தது.ராஜமாணிக்கம் தனது காரை எடுத்துக் கொண்டு ஆசிரம காம்பவுண்டை விட்டு, வேகமாகச் சென்று கொண்டிருந்தான்.'எப்படியோ அங்கிருந்து தான் தப்பித்துவிட்டோம். என, நினைத்து காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.கார் கண்ணாடியில் ஏதோ ஒன்று தெரிந்தது. சற்று உற்றுப் பார்த்தான்.காரைத் துரத்திக்கொண்டு வந்து கொண்டிருந்தது அந்த நாய்.முடிந்தவரையில், காரை வேகமாக ஓட்டினான். நாய் விட்ட பாடில்லை. ஓடி வந்து கொண்டிருந்தது.கார் செல்லச் செல்ல காரின்மீது பாய்ந்தது நாய். வேகக்கட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் ஒரு மின் கம்பத்தின் மீது பயங்கரமான சப்தத்துடன் மோதிய கார் வெடித்தது. நெருப்பு பெரிய அளவில் எரிந்தது. காருக்குள் இருந்த ராஜமாணிக்கமும், காருக்கு மேல் இருந்த குட்டிச்சாத்தானும் நெருப்பில் சிக்கி அழிந்தனர்.தவறான வழியில் பாவங்களைச் செய்த ராஜமாணிக்கமும், கடவுளின் பெயரைச் சொல்லி சமூக விரோதம் செய்து கொண்டிருந்த சுவாமிஜியும், தீய சக்தியைப் பயன்படுத்தி உலகத்தை அழிக்க நினைத்த நம்பூதிரியும் அவர்கள் உருவாக்கிய சக்தியாலேயே அழிந்து போயினர்.முகுந்தனிடம் பெரியவர் பேசிக் கொண்டிருந்தார்.''தம்பி, உன் மீது அன்பு இல்லாமலும், உன்னை எவரும் கவனிக்காமலும், நண்பர்கள் இல்லாமலும், உனக்கு விரக்தி ஏற்பட்டதோடு தைரியத்தையும் இழந்து உயிரை விடுவதற்காக இந்த இடத்திற்கு வந்தாய்!''எதற்கெல்லாம் ஏங்கினாயோ அதெல்லாம் உனக்கு இப்போது கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா?'' எனக் கேட்டார் பெரியவர்.''ஐயா, என் சித்தியால் நான் மிகவும் சிரமப்பட்டேன். அன்பும் அரவணைப்பும் இல்லாமல் தவித்தேன். இப்போது என் சித்தி பெற்ற மகனைப் போல் கவனித்துக் கொள்கிறார்.''அடுத்து, நான் குடியிருக்கும் பகுதியில் உள்ள பிள்ளைகள் என்னிடம் பேசக்கூட மாட்டனர். என்னிடம் பழகுவதையே கேவலமாக நினைப்பர். அவர்கள் விளையாட என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இப்போது அனைவருமே என்னுடன் பேசுகின்றனர்; பழகு கின்றனர்; விளையாட அழைக்கின்றனர்.''மேலும், பள்ளிக்கூடத்திலும் நான் நன்றாகப் படிக்கிறேன்; ஆசிரியர்கள் என் மீது கவனம் செலுத்தி கற்றுத் தருகின்றனர். மேலும், யாரைக் கண்டாலும் பயப் படுவேன். இருட்டைப் பார்த்தால் கூட பயப்படுவேன். இப்போது அந்த பயமும் போய் விட்டது,'' என்றான்.''பேதமின்றிப் பழக வேண்டும், உதவும் குணம் வளர வேண்டும், இறைவன் மீது பக்தியுள்ளவர்களுக்கு பயம் வரக்கூடாது. இதெல்லாம் ஒரு மனிதனுக்குள் இருந்தால் இந்த உலகத்தில் நாம் எதற்காக பிறவி எடுத்தோமோ அதை நிறைவேற்றுகிற வரையில் வாழ்ந்து கொள்ளலாம். இனிமேல் உனக்கு இந்த மோதிரம் தேவையில்லை. ஒருவனிடம் அதிக சக்தி இருக்கிறது என்று பிறருக்கு தெரிந்தால், அதை தவறான பாதைக்கு பயன்படுத்த நினைக்கின்றனர். அப்படி உன்னிடமிருந்து மோதிரத்தைக் கவர நினைத்தவர்கள் அழிந்துவிட்டனர். இனிமேல் நீ நன்றாக படித்து, பலருக்குப் பயன்படும்படியாக வாழ்ந்து காட்டு!'' என்றார் பெரியவர்.''அப்படியே ஆகட்டும் ஐயா!'' எனக் கூறி முகுந்தன் பெரியவரின் காலைத் தொட்டு வணங்கி நின்றான்.''இப்போது இருட்டாக இருக்கிறது, தனியாக சென்று விடுவாயா?'' என்று பெரியவர் கேட்டார்.''நான் தனியாகச் செல்லவில்லையே,'' என்றான் முகுந்தன்.பெரியவர் வியப்போடு பார்த்தார்.''என்னுடன் எப்போதும் கடவுள் இருக்கிறார், நான் தனியாக இல்லை,'' எனக் கூறி அங்கிருந்து நடந்தான்.அன்றிலிருந்து முகுந்தன் முறையே பள்ளிக்குச் சென்றான். சுசீந்திரன் காது குணமாகி மீண்டும் விளையாட ஆரம்பித்தான். முகுந்தனைச் சேர்த்துக் கொள்ளாமல் விளையாடுவதே இல்லை.சித்தி வள்ளியம்மாள் தாயைக் காட்டிலும் முகுந்தனிடம் அன்பு செலுத்தி கவனித்தாள்.முகுந்தன் ஒரு தெய்வக்குழந்தை என்றே அங்கிருந்தோர் நினைத்து அவனிடம் பிரியமாக நடந்து கொண்டனர்.ஆனால், அந்த மாயமோதிரம் என்ன ஆயிற்று?வயதான பெரியவராக வந்தவர் யார்? பெரியவராக வந்தவர் கடவுள்தான்.மோதிரத்தைக் குட்டிச்சாத்தான் மீது வீசியதும், அதை குட்டிச்சாத்தான் வாயில் கவ்வியது. வாயில் கவ்விய மோதிரத்துடன் அங்கிருந்து ஓடியது. தீயவர்களை அழித்தது. ராஜமாணிக்கத்தின் கார் வெடித்துச் சிதறிய போது, நாயும் தீயில் கருகிச் செத்தது. நாயின் உடலில் இருந்த குட்டிச்சாத்தானும் அழிந்தது.ஆனால், அந்த மாயமோதிரம் நாயின் வயிற்றுக்குள் உள்ள சதைப் பகுதியில் இருந்தது.மறுநாள் ரோடு துப்புறவு செய்யும் ஆட்கள் வந்து தீயில் கருகியிருந்த நாயை ஒரு தள்ளு வண்டியில் தூக்கிப் போட்டு அதை அப்புறப்படுத்தச் சென்றனர்.நாயை வெளியே போட்டால், துர்நாற்றம் அடிக்கும் என்று ரோட்டு ஓரமாக ஒரு குழியை வெட்டி நாயைப் புதைத்து விட்டு வந்தனர்.நாயின் வயிற்றுக்குள் சக்திவாய்ந்த மாய மோதிரம் இருக்கிறது என்று புதைத்தவர்களுக்கு எப்படித் தெரியும்?-முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !