உள்ளூர் செய்திகள்

மாய விழிகள்! (2)

முன்கதை: உதவும் மனம் உடைய சிறுமி தியா பள்ளியில் இருந்து மாலை வீடு திரும்பியதும், அம்மா சோகமாக இருப்பதை கண்டாள். உரிய காரணத்தை கேட்டாள். இனி - ''அப்பாவுக்கு, திடீரென பதவி உயர்வு கிடைத்துள்ளது. கூடவே, டில்லிக்கு இடம் மாற்றம். மும்பையில், மூணு மாதம் பயிற்சி இருக்கு. அதை முடித்து, டில்லிக்கு போகணும்...''அம்மா கூறியதை கேட்டதும், அதிர்ச்சியில் உறைந்தாள் தியா.''அப்போ என் படிப்பு...'' இந்த கேள்விதான் பூதாகரமாய் இருந்தது. இரவு, 9:00 மணிக்கு, அப்பா வீடு திரும்பியதும் அதற்கு பதில் கிடைத்தது.''தியா... சூழ்நிலையை புரிஞ்சிப்பேன்னு நினைக்குறேன். உன் படிப்புக்கு பாதிப்பு வந்துடக்கூடாது என்பதற்காக தான், இந்த முடிவு எடுத்திருக்கிறேன்...''திருநெல்வேலியில், மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருக்கும் ரெசிடென்ஷியல் பள்ளியில் உன்னை சேர்க்குறேன். மிகவும் நல்ல பள்ளி அது. பக்கத்துலே வசிக்கிற ஆழ்வார்குறிச்சி தாத்தாவும், பாட்டியும் பாதுகாவலராக இருப்பர். உன்னை அடிக்கடி வந்து பார்ப்பாங்க. விடுமுறை நாட்களில், நீ பாட்டி வீட்டுக்கு போகலாம். நானும், அம்மாவும் ரெண்டு மாதத்துக்கு ஒருமுறை வந்து, உன்னை பார்த்துக் கொள்வோம்...'' என்றார் அப்பா.''உன்னோட படிப்ப மனசுல வெச்சு தான், இந்த முடிவு எடுத்திருக்கிறோம்...''அம்மாவின் குரலில் சங்கடம் தெரிந்தது.''இரண்டாண்டுகள் அங்க படிம்மா. 10ம் வகுப்புக்கு, நான் வேலை செய்ற இடத்துக்கு பக்கத்தில், நல்ல பள்ளியில் சேர்த்து விடுகிறேன்...''அப்பா கூறியதை கேட்டு, ஒப்புதலாக தலையாட்டினாள் தியா. அவளை அணைத்தாள் அம்மா.''கவலை படாதீங்கப்பா... உங்க சூழ்நிலை புரிகிறது. இரண்டாண்டுகள் தானே, பறந்து விடும்...'' என சிரித்தாள் தியா.ஆழ்வார்குறிச்சியில் தங்கி, வேலைகளை முடித்தனர். தியாவை பள்ளியில் சேர்த்து, புறப்பட்டனர் பெற்றோர்.வார விடுமுறையில் தாத்தா வீட்டுக்கு வந்தாள் தியா. தாத்தா, ஏதோ விஷயமாக கடையத்திற்கு சென்றிருந்தார். பாட்டி, சமையலில் மும்முரமாக இருந்தார்.நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஊர் ஆழ்வார்குறிச்சி. ஊருக்கு தெற்கு பக்கம், கடனா நதியும், வடக்கில், ராம நதியும் பாய்கின்றன.அவற்றை ஒட்டி வயல் காடும், நடுவில் ஊருமாய் பசுமையாக இருந்தது. பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, திருமண மண்டபம் என வசதிகளுடன் அமைந்திருந்தது.அங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலை.தாத்தா வீடு, சிவசைலம் சாலையில் இருந்தது. அங்கிருந்து தெற்கில், பெருமாள் கோவில் வழியாக நடந்தால், படித்துறை வரும்; அங்கு, தென்னந்தோப்பு இருந்தது.அந்தப் படித்துறை, தியாவுக்கு மிகவும் பிடித்தமானது. வாய்க்காலின் மேல் படியில் அமர்ந்து, கீழ்ப்படியில் காலை அசையாமல் வைத்திருந்தால், நக இடுக்கில் சின்ன மீன்கள் கடிக்கும். அப்போது ஏற்படும் குறுகுறுப்பு சுகமான அனுபவம்.''பாட்டி... சிறிது துாரம் நடந்துட்டு வரவா...''''என்ன படித்துறைக்கு போகணுமா...''சிரித்தார் பாட்டி.''போயிட்டு உடனே வந்து விடுவேன்...''''சரி பார்த்து போ. தண்ணீரில் இறங்காதே... அந்த தோப்பு கிணறு பக்கம் போகாதே...''எச்சரிக்கும் குரலில் கூறினார் பாட்டி.'தோப்பு கிணறு' என அழைப்பதை ஒவ்வொரு முறையும் கேள்விப்படுகிறாளே தவிர, இதுவரை பார்த்ததில்லை.''சரி பாட்டி...'' துள்ளிக் குதித்து வெளியில் வந்தாள் தியா. எதிரே வந்த பெண், அவளை உற்று பார்த்தாள்.''பாப்பா... நீ மெட்ராஸ்கார பொண்ணு தானே...''''ஆமா... நீங்க...''''ஞாபகம் இல்லையா... உங்கள் வீட்டுக்கு கை முறுக்கு எடுத்து வருவேனே...'''டக்'கென நினைவுக்கு வந்தது.''ஆமாம் ஆன்டி... ஞாபகம் இருக்கு...''''என்ன இந்த பக்கம் போற... படித்துறைக்கா...''''ஆமா ஆன்டி...''''பார்த்துப் போ. தண்ணீர் நிறைய இருக்கு. நீச்சல் தெரியுமா...''''ம்... தெரியும் ஆன்டி. சென்னையில், 'ஸ்விம்மிங் கிளாஸ்' போயிருக்கேன்...''''சரி... தோப்பு கிணறு பக்கம் போகாதே...''எச்சரித்தாள் முறுக்கு விற்கும் ஆன்டி.எல்லாரும் தோப்பு கிணறு பக்கம் போகாதே என்றதால், 'பார்த்து விட வேண்டும்' என எண்ணினாள் தியா.பெருமாள் கோவில் தெருவை தாண்டி, படித்துறை நோக்கி நடந்தாள்.ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.தோப்பை ஒட்டி, ஒற்றையடி பாதை தெரிந்தது. அதில் நடந்தாள். மிக அமைதி நிலவியது. பூச்சிகளின் ரீங்காரமும், குருவிகளின், 'கீச்... கீச்...' சத்தமும் கேட்டது. அமைதி அச்சம் தருவதாக இருந்தது.தோப்புக் கிணறு என அழைக்கப் பட்டாலும், படித்துறை வாய்க்காலுக்கும், தென்னந்தோப்புக்கும் நடுவில், ஒத்தையடி பாதை முடிவில் அமைந்திருந்தது.இடுப்பு உயரத்திற்கு, சிமென்டால் கட்டப்பட்டு, சிதிலமடைந்த பழைய சுற்றுச்சுவர் தெரிந்தது. அதை சுற்றி முற்றம் போன்ற அமைப்பும் சிதிலமாகி இருந்தது. எப்போதோ பதித்திருந்த துணி துவைக்கும் கல்லின் திண்டு உடைந்து கிடந்தது.தோப்புக்கிணற்றை நெருங்கி வந்தாள் தியா; கயிறு கட்டிய வாளி இருந்தது. படித்துறைக்கு வந்த போதெல்லாம், காலை தண்ணீரில் நனைத்து, நேரத்தை செலவழித்து, வீட்டுக்கு அழைத்து சென்று விடுவார் பாட்டி. ஒருமுறை கூட தோப்பு கிணறு பக்கம் அழைத்து சென்றது இல்லை. இம்முறை பாட்டியும், முறுக்கு விற்கும் ஆன்டியும் எச்சரித்தது ஆர்வத்தை துாண்டியது.கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தாள். தண்ணீரில் முகம் தெரிந்தது.அவ்வளவு சுத்தமான தண்ணீர். சுற்றும் முற்றும் பார்த்தாள்; யாரும் இல்லை.வாளியை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்ந்தினாள். துாய்மையாக இருந்தது; கையால் அள்ளி குடித்துப் பார்த்தாள். அப்படி ஒரு இயற்கை சுவை. குடிக்க வேண்டும் போல தோன்றியது; மேலும், மேலும் அள்ளிப் பருகினாள். தண்ணீர் அமிர்தமாய் இருந்தது.''ஏய்! யாரது...''அதட்டல் குரல் கேட்டு திரும்பி பார்த்து அதிர்ந்தாள் தியா.முகம் முழுதும் சுருக்கங்கள்; எண்ணெய் பார்க்காத பரட்டை தலை; ஜாக்கெட் போடாமல் உடலை சுற்றிய சேலை; கையில் குச்சி என, திகிலுாட்டும் தோற்றத்தில் முதிர்ந்த கூன் முதுகு மூதாட்டி அங்கே நின்றிருந்தார்.மயான அமைதி நிலவிய இடத்தில், மூதாட்டியை பார்த்ததும் பயந்தாள் தியா.''இங்கே எல்லாம் வரக்கூடாது. ஓடிப்போ...''கடுமையான குரலில் எச்சரித்தார் மூதாட்டி.வேகமாக திரும்பி நடந்தாள் தியா.படித்துறைக்கு போகாமல், பாட்டி வீட்டை நோக்கி நடந்தாள். அங்கு, அதிர்ச்சியும், குழப்பமும் காத்திருந்தது.- தொடரும்...ஜே.டி.ஆர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !