மல்லன் மாறப்பன்! (6)
சென்றவாரம்: வம்புச் சண்டைக்க இழுத்த பொறாமைக்காரர்களை அடித்து வீழ்த்தினான் மாறப்பன். ரதம் மோதி பாத்ஷாகான் உயிரிழந்தான். பாத்ஷாகானின் மரணத்துக்கு மாறப்பன் தான் காரணம் என திருமலை நீதிபதியிடம் கூறினான். இதை அறியாது மாறப்பனும் திம்மராயனும் பேசிக் கொண்டிருந்தனர். இனி-''மன்னர் மகாராயர் இப்போது தலை நகரில் இல்லை. எல்லைப் பகுதியைப் பார்வையிடப் போயிருக்கிறார். விஜயதசமி விழாவிற்கு எப்படியும் தலைநகருக்கு வந்து விடுவார். அப்போது நீ மன்னரைச் சந்திக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை நான் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து செய்கிறேன். அதற்குமுன் இந்தப் போட்டியில் பங்கு கொள்ள நாம் நாளையே தலைநகருக்குக் கிளம்புகிறோம்,'' என்றான் திம்மராயன்.மாறப்பனுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி. கிருஷ்ண தேவராயரைக் காண வேண்டுமென்ற தன் கனவு நிறைவேறப்போவதை எண்ணிக் குதூகலப்பட்டான்.''மன்னரின் பிரதிநிதி சாளுவ நரசிம்மருக்கு பறங்கியர்களைக் கண்டாலே பிடிக்காது. குத்துச் சண்டையிலே தாங்கள் மகாசூரர்கள் என்று கர்வம் கொண்டிருக்கும் அவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பது அவர் விருப்பம். நடக்க இருக்கும் போட்டிக்கு அவர்தான் தலைமை வகிக்கிறார். அந்தப் பந்தயச் சண்டையில் நீ வெற்றி பெற்றாயானால் மகாராயரைச் சந்திப்பதும் சுலபமாகிவிடும். சாளுவ நரசிம்மரே உன்னை மன்னருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்!'' என்றான் திம்மராயன்.பயணத்தில் உற்சாகமூட்டும் பல தகவல்களை மாறப்பனுக்கு கூறினான் திம்மராயன்.தலைநகருக்குப் போனதும் திம்மராயன் சாளுவ நரசிம்மரைச் சந்தித்தான்.திம்மனைக் கண்ட சாளுவர், ''என்ன, திம்மா! நீ குத்துச் சண்டை போடுவதை நிறுத்தி விட்டதாகக் கேள்விப்பட்டேனே... ஏன்?'' என்று விசாரித்தார்.''பறங்கியர்களின் கர்வத்தை அடக்க வேண்டுமென்ற உங்கள் ஆசையை நிறைவேற்றவே, இதோ இந்த இளைஞனைத் தயார் செய்திருக்கிறேன். மின்னல் வேகத்தில் செயல்படும் இவனது குத்துக்கள் இடியைப் போலத் தாக்கக் கூடியவை. தமிழகத்தைச் சேர்ந்தவன். பெயர் மாறப்பன்,'' என்று அறிமுகப்படுத்தினான்.''வாலிபனே! உன் திரண்ட தோள்களே திம்மனின் பேச்சை உறுதி செய்கின்றன. குத்துச் சண்டையிலே இந்தப் பறங்கியர்களைப் பதறி ஓடச் செய்வாயானால் விஜய தசமி விழாவிலே, மகாராயரால் நீ கவுரவிக்கப்படுவாய்,'' என்றார் சாளுவர்.¬ஜயநகரத்திலே ஆண்டு தோறும் நடைபெறும் மகத்தான விழா விஜயதசமிப் பெருவிழா. நவராத்திரி ஒன்பது நாளும் கொண்டாடப்படும் தேசிய விழா அது. பல வீர விளையாட்டுக்கள் அந்தப் பெருவிழா விலே இடம் பெறும். நாட்டு மக்கள் அனைவரும், ஆவலோடு எதிர்ப்பார்க்கும் கோலாகலமான விழா அது. அதில் குத்துச் சண்டைப் போட்டிக்கும் இடமுண்டு. அந்தப் போட்டியில் போர்த்துக்கீசிய வீரனோடு மோதுவதற்குத் தகுதியுடைய வீரனைத் தேர்ந்தெடுக்கவே இப்போது நடைபெறுகிறது இந்தப் போட்டி.''விஜயதசமி விழாவிலே பறங்கிய வீரனோடு மோதுவதற்கு தகுதி பெற்றவனாக நீ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் மாறப்பா. அதைக் கருத்தில் கொண்டு இந்தப் போட்டி யில் சண்டையிட்டு வெற்றி வீரனாக வா,'' என்றான் திம்மராயன்.விஜயதசமி விழாப் போட்டியில் பங்கு பெறும் வீரனைத் தேர்ந்தெடுக்கும் குத்துச் சண்டையைக் காண நகர மக்கள் திரளாகக் கூடி இருந்தனர். சாளுவ நரசிம்மர், போட்டிச் சண்டையைக் கண்டு மகிழ உயர்ந்த மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.மாறப்பன் தசை நார்களில் முறுக்கேற அரங்கில் நின்று கொண்டிருந்தான். இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவன் தவிப்பை அவன் நாடி நரம்புகளெல்லாம் ஆமோதித்துத் துடிப் போடிருந்தன.திம்மராயனின் நம்பிக்கையை நான் நாசமாக்கி விடக் கூடாது என்ற உறுதி அவன் ஒவ்வொரு குத்துக்களிலும் வெளிப்பட்டது. அவனை எதிர்த்துச் சண்டையிட்ட வீரர்களை ஒவ்வொருவராக வீழ்த்தியபடி அரங்கிலே அவன் குதிபோட்டுக் கொண்டிருந்த போது, அவன் பார்வை கூட்டத்தினரின் மீது பதிந்தது. அங்கு...'அது, அந்த ஆள் ஓ அந்தப் பறங்கிய அதிகாரி...? இரவு என்னைச் சூழ்ந்து கொண்டு தாக்கியவர்களுக்குத் தலைமை தாங்கியவனல்லவா? பெர்னாண்டஸ்! அவன் இங்கே எப்படி?' மாறப்பன் வினா எழுப்பிக் கொண்டிருந்த அதே வேளையில்...மாறப்பனைக் கைது செய்யத் தேடி, எங்கும் கிடைக்காத திருமலை விசாரித்துப் பார்த்து, மாறப்பனும், திம்மராயனும் தலைநகருக்குப் போயிருக்கிறார்கள் என்று அறிந்து பெர்னாண்டஸுடன் தலைநகருக்கு வந்திருந்தான். அங்கு நடைபெறும் குத்துச் சண்டைப் போட்டியைக் காண விரும்பிய பெர்னாண்டஸ், அரங்கிலே மாறப்பனைக் கண்டதும்...''இவன் நாம் தேடிக் கொண்டிருக்கும் அந்தத் தமிழனல்லவா? கொலைக் குற்றம் சாட்டப்பட்டவன். நானும், திருமலையும் இவனைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறோம்...'' அவசரமாக அரங்கிலிருந்து வெளி யேறினான் திருமலையுடன் பெர்னாண்டஸ்.உடனே இருவரும் காவல் அதிகாரியை நோக்கி ஓடினர் . நீதிபதியின் ஆணையை அவரிடம் காட்டி, மாறப்பனைக் கைது செய்ய ஆட்களுடன் போட்டி நடக்கும் அரங்கை நோக்கி வந்தனர். மாறப்பனின் கவனம் கூட்டத் திலிருந்த பெர்னாண்டஸைப் பார்த்ததினால் சலனப்படவே, எதிரியின் குத்து மாறப்பனைத் தாக்கியது.''பராக்குப் பார்க்கும் பயலுக்குச் சண்டை அரங்கில் என்ன வேலை?'' என்று எகத்தாளமாக மேலும் தாக்கினான் பறங்கியன்.''சபாஷ்! சரியான குத்து! நிறுத்தாதே தாக்கி வீழ்த்து!'' என்று உற்சாகக் குரல் எழுப்பினர் பறங்கியர்.எதிரியின் குத்துக்களினால் மாறப்பன் திணறியபோது, ''என்ன மாறப்பா? ஏன் இப்படி?'' தவித்துப் போனான் திம்மராயன் .அப்போது-திமுதிமுவென்று வீரர்களுடன் திருமலையும், பெர்னாண்டஸும் அரங்கினுள் நுழைந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றவர்களை, ''சட்டத்தைத் தடுத்து நிறுத்த இங்கு யாருக்கும் உரிமையில்லை. நீதியின் பெயரால் இவனைக் கைது செய்ய வந்திருக்கிறேன்,'' என்று கூறி சாளுவரிடம் நீதிபதியின் ஆணையைக் காட்டினார் காவல் அதிகாரி.சூழ்ச்சிக்காரன் திருமலை, விடுபட முடியாதபடி வலை பின்னி இருந்தான்.''இவன் ஒரு கொலைக்காரன். ஓர் அப்பாவியை மூர்க்கத்தனமாக அடித்துக் கொன்றதை என் கண்களால் பார்த்தவன் நான்!'' என்று மாறப்பனைச் சுட்டிக் காட்டினான் திருமலை.''எங்கள் வட்டாரத்து நீதிமன்றம் இவன் மீதுள்ள கொலை வழக்கை விசாரிக்கக் காத்திருக்கிறது!''கூடி இருந்த கூட்டத்திலே குழப்பம். சாளுவ நரசிம்மர், நீதி மன்றத்துக்கு மேலான சக்தி இந்த நாட்டில் கிடையாது என்பதிலே நம்பிக்கை கொண்டவர். மாறப்பனைக் காவல் அதிகாரியிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவுக்கு வந்தார்.''நிரபராதியை நீதி தண்டிக்காது. விசாரணைக்குட்பட்டு குற்றமற்றவன் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியே வரட்டும்,'' என்று கூறிவிட்டார்.திம்மராயன் கலங்கிப் போனான்.''மாறப்பா என்ன இது?'' ஏன் இப்படி இடிந்துபோய் சிலையாக நிற்கிறாய்? இதெல்லாம் பொய் என்று சொல்லேன்! நீயா கொலைக்காரன்...?'' என்று நண்பனை உலுக்கினான்.''நண்பா! திம்மா... என் தாய் மீது ஆணை. நான் நிரபராதி என் வார்த்தையை யாரும் நம்பப் போவதில்லை. திருமலையும், பெர்னாண்டஸும் என்னைத் தாக்கிக் கொல்லத் திட்டமிட்டனர். அந்தக் குண்டர்களுடன் போராடி அவர்களை விரட்டி அடித்தேன். அப்போது அந்த பாத்ஷாகான் இறக்கவில்லை. அடிபட்டு அவமானப்பட்டுத் தள்ளாடியபடி நடந்து செல்வதைப் பார்த்தேன். அதன்பிறகு அவன் எப்படி மரணமடைந்தான் என்பது மர்மமாக இருக்கிறது. அவன் மரணத்துக்கு என்னைக் காரணமாக்கி வழக்கை ஜோடித்திருக் கின்றனர்!''போர்த்துக்கீசியரிடையே செல்வாக்கு உடையவன் பெர்னாண்டஸ். திருமலையோ இந்த நாட்டு அதிகாரிகளைத் தன் கைக்குள் வைத்திருப்பவன். நானோ தமிழகத்திலிருந்து வந்துள்ள நாடோடி. நான் நிரபராதி என்பது உனக்கும், கடவுளுக்குமே தெரியும். கடவுள் சாட்சி சொல்ல வரமாட்டார். உன்னால் இந்தச் சதிகாரர்களோடு எதிர்த்து நிற்கமுடியாது...'' மாறப்பன் உருக்கமாகத் தன் நிலையை விளக்கினான்.பறங்கியரிடையே விஷமமாகச் சிரித்துக் கொண்டு நிற்கும் கயவன் திருமலையின் மீது, திம்மராயன் புலியெனப் பாய்ந்தான்.- தொடரும்.