மென்ஷியஸ்!
மென்ஷியஸ் என்ற சிறுவனுக்கு மூன்று வயதாக இருக்கும் போது தகப்பனார் இறந்து விட்டார். அவன் தாயார்தான் துணிகளை நெய்து சம்பாதித்து அவனை படிக்க வைத்தாள். ஆனால், மென்ஷியஸுக்குப் படிப்பில் நாட்டம் செல்லவில்லை. இனி பள்ளிக் கூடமே போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டு ஒருநாள் வீடு திரும்பினான்.அப்போது அவனுடைய தாயார் விலை உயர்ந்த துணியை நெய்து கொண்டிருந்தாள். நல்ல விலைக்குப் போகக் கூடிய விதத்தில் நேர்த்தியாக நெய்து இருந்தாள்.மென்ஷியஸ் தன் தாயாரிடம், ''அம்மா இனி நான் பள்ளிக்கூடம் போகப் போவதில்லை!'' என்றான்.இதைக் கேட்ட அவன் தாயார், ஒரு கத்தியை எடுத்து, தான் நெய்து கொண்டிருந்த அந்தத் துணியை இரண்டாகக் கிழித்தாள்.''என்னம்மா இவ்வளவு விலை உயர்ந்த துணியைப் பாழாக்கி விட்டாயே,'' என்று கேட்டான்.''விலை உயர்ந்த உன் வாழ்வையே நீ பாழ் பண்ணிக் கொண்டிருக்கும்போது, இந்தத் துணி போனால் என்ன?'' என்றாள்.'படிக்க மாட்டேன்! என்று சொன்னது எவ்வளவு பெரிய தவறு' என்பதை பையன் உணர்ந்தான்.''அம்மா, நான் மீண்டும் பள்ளிக்கூடம் போய் படிக்கப் போகிறேன்,'' என்று சொல்லி விட்டு பள்ளிக்குச் சென்றான் மென்ஷியஸ்.மகனுக்குப் புத்தி புகட்டுவதற்காக, உயர்ந்த துணியையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தாள் தாயார்.