மினி ஸ்டோரி! - தலைகீழாக!
அது கி.பி. 1937ம் ஆண்டு. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக, அப்போது பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.ஒருசமயம் அவருடைய உதவியாளரை அழைத்து, தன் கையில் இருந்த ஒரு தபால் கவரைக் கொடுத்தார்.அதில், தபால் தலையை ஒட்டும்படி கூறித் தபால் தலையையும் அவரிடம் கொடுத்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கினார். உதவியாளர் தபால் கவரை எடுத்துச் சென்று தன் மேஜையின் மேல் வைத்துத் தபால் தலையையும் அதன் மேல் ஒட்டினார்.அப்படி ஒட்டும்போது அந்தத் தபால் தலையைத் தலைகீழாக ஒட்டி விட்டார். இந்தத் தவறை அவர் கவனிக்கவில்லை. பின் நேராக ராஜாஜியிடம் சென்று ஒட்டப்பட்ட தபால் கவரை கொடுத்தார்.தபால் தலை சரியாக ஒட்டப்பட்டிருக் கிறதா என்று ராஜாஜி கண்ணோட்டமிட்டார். அவருக்குத் திடுக்கென்றது என்றாலும் ஒரு பக்கம் சிரிப்புத்தான் வந்தது.உதவியாளரை அழைத்துச் சொன்னார்.''தபால் தலையை நன்றாக ஒட்டி இருக்கிறீர். நாங்களும் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைக் கவிழ்த்து விட வேண்டுமென்று எவ்வளவோ வருடங்களாக கடுமையாகப் போராடி வருகிறோம்.''நாங்கள் செய்ய முடியாத ஒன்றை நீங்கள் செய்து விட்டீர்கள். தபால் தலையைப் பாருங்கள். நீங்கள் எப்படி ஒரே விநாடியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து விட்டீர்கள்!'' என்றார்.இதைக் கேட்டவுடன் அருகிலிருந்த எல்லாரும் சிரித்துக் கொண்டே அந்தத் தபால் கவரைப் பார்த்தனர்.இங்கிலாந்து நாட்டு மன்னரான ஜார்ஜ் தபால்தலையில் தலைகீழாக ஒட்டப்பட்டிருந்தார்.***