குரங்கின் பந்தாட்டம்! (1)
செங்கழனி என்ற ஊரில், கணியன் என்ற குரங்குக்குட்டியும், ஆனந்தி என்ற கன்றுக்குட்டியும், நீலம், மணி என்ற முயல் குட்டிகளும், இணைபிரியாத நண்பர்களாக, ஒரே வீட்டில் வசித்து வந்தன.அன்று, அழகாக ஆடை உடுத்தி, வெளியே புறப்பட்டது கணியன் குரங்கு. காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கன்றுக்குட்டி ஆனந்தி, 'எங்கே கிளம்பிட்டே...' என்றது.'கால்பந்து விளையாட, ஆள் எடுக்கிறாங்க; அங்கு தான் போறேன்...' என்றது கணியன். 'பந்து விளையாட போறியா... பொங்கல் பண்டிகைக்கே வீட்டை சுத்தம் செய்ய திட்டமிட்டிருந்ததை மறந்துட்டியா.... இன்னிக்கு கட்டாயம் வீட்டு சுவர்ல வண்ண தாள் ஒட்டியாகணும்...' என்றது ஆனந்தி. கண்டிப்பான குரலை கேட்டதும், கணியன் முகம் சுண்டியது; வருத்தத்துடன் மாடிக்கு திரும்பி சென்றது.'பாவம் கணியன்... விளையாடிட்டு தான் வரட்டுமே... வீட்டு வேலைய இன்னொரு நாள் செய்யலாமே...' என்றது நீலம் என்ற முயல். 'ரெம்ப அழகு தான் போங்க... அன்னிக்கு என்னடான்னா, நீச்சல் போட்டின்னு ஓடிட்டீங்க. முந்தா நாள், கிரிக்கெட்டுன்னு போயிட்டீங்க. இப்படியே போயிட்டிருந்தா... எப்ப தான் வீட்டு வேலைய முடிக்கிறதாம்; இன்னிக்கு முடிச்சே ஆகணும்...' என்ற ஆனந்தியின் கண்டிப்பான உத்தரவால், வாயை மூடின முயல்குட்டிகள். எதிர்த்துப் பேசினால், வயிறை காயபோட வேண்டியது தான். சகல பொறுப்பையும், கையில் வைத்திருக்கும் வீட்டு நிர்வாகி, ஆனந்தி தான்.அந்த வீடு, மரத்தால் ஆனது. உள்பக்க சுவருக்கு வண்ணம் பூசியிருக்கவில்லை; அழகிய வண்ணத் தாள்களை ஒட்டி, உள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதட்டலுக்கு பணிந்து, பழைய டிராயரையும், துண்டையும் அணிந்து வந்தது கணியன். அதைக் கண்ட ஆனந்தி, 'சரி... வேலையை ஆரம்பியுங்க... முதலில், சுவரில் இருக்கும் அழுக்கேறிய, பழைய வண்ண காகிதங்களைக் கிழித்து சுத்தப்படுத்துங்க...' என்று கட்டளையிட்டது. பணியை பொறுப்பாக செய்ய, ஆளுக்கு ஒரு அறையை ஒதுக்கி, 'வேலையை சீக்கிரம் முடித்தால், பந்து விளையாடவோ, பூப்பந்தாட்டம் ஆடவோ போங்க. நான் தடுக்கவில்லை...' என்று கூறி, வண்ண தாள் ஒட்டும், பசை காய்ச்ச சென்றது ஆனந்தி. கணியன் ஆத்திரத்தோடு, 'டார்... டார்...' என, சுவரில் ஒட்டியிருந்த, பழைய காகிதங்களை கிழித்துக் கொண்டிருந்தபோது, 'முயல்குட்டீங்களா... இதைப் பாருங்க... என்ன ஆச்சரியம்...' என்று குதுாகலித்தது. அதன் குரல் கேட்க, அங்கு யாருமில்லை; வண்ணத் தாள் வாங்க, முயல்குட்டிகளை கடைக்கு அனுப்பியிருந்தது ஆனந்தி.கணியனின் மகிழ்ச்சிக்கு காரணம் தெரியுமா...சுவரை சுத்தப்படுத்த, பழைய காகிதத்தை கிழித்த போது, மர்மக் கதவு ஒன்றை கண்டது. அந்த கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது. உடனே கதவு, 'கிரீச்' என்ற சத்தத்துடன், மூடிக் கொண்டது. இருள் சூழந்திருந்ததால், டிராயரில் வைத்திருந்த, தீக்குச்சிகளை கிழித்து, ஒளி ஏற்றி, அடிமேல் அடி வைத்து, முன்னேறியது கணியன். என்ன ஆச்சரியம்... சுரங்கம் வெகுதுாரம் போய் கொண்டேயிருந்தது. கணியன் உடல், வியர்வையால், தொப்பலாக நனைந்து விட்டது. அப்பாடா... ஒரு வழியாக, சுரங்க வழி முடிந்து, படிக்கட்டு தெரிந்தது. அதன் வழியாக, திறந்த வெளிக்கு வந்தது.'அம்மாடியோவ்... வீட்டிற்குள் சுரங்க வழி இருப்பதை, இத்தனை நாளா தெரியாமலிருந்திருக்கிறோமே; நான், இப்போது எங்கிருக்கிறேன்...' என எண்ணியபடி, சுற்றும் முற்றும் பார்த்தது. நகருக்கு வெளியே, ஒரு தோப்பில் நிற்பதை கண்ட கணியின், 'உடனே, இதை ஆனந்திக்கு தெரியப்படுத்த வேண்டும். மர்மக் கதையில் வருவது போலல்லவா சுரங்கம் இருக்கு...' என, திரும்பிய கணியனுக்கு, திடீரென ஒரு யோசனை தோன்றியது.'நான், வீட்டுக்கு வெளியே வந்திருப்பது யாருக்கும் தெரியாது; இப்போது, பந்து விளையாடும் இடத்துக்குச் சென்றால் என்ன...' என்று, மரத்தில் தாவிய கணியன், மறு நிமிடம், கால் பந்தாட்ட மைதானத்துக்கு வந்தது.மர்மக் கதவைத் திறந்து, கணியன் வெளியேறியபின், ஒரு வாளி நிறைய பசையைக் காய்ச்சி எடுத்து வந்தது ஆனந்தி. அதன் பின்னால், நீலமும், மணியும் பல வண்ணக் காகிதச் சுருள்களைச் சுமந்தபடி வந்தன. கணியனை காணாமல் அவை திடுக்கிட்டன.'கணியன்... எங்கே இருக்க...' என, அழைத்த ஆனந்தி, பதில் குரல் வராததால் தவித்தது. நீலமும், மணியும் வீடு முழுக்க தேடின. ஊஹும்... எங்கும் காணவில்லை.கணியன் அணியும் உடைகள் எல்லாம் கூட, அறையில் அப்படியே இருந்தன. 'கிழிசல் டிராயர் அணிந்து, கணியன் பந்து விளையாடப் போயிருக்காது...' என்றது மணி.'எங்கே போய் தொலைந்தானோ... உங்க வேலையைப் பாருங்க...' என்ற ஆனந்தியின் கட்டளையை ஏற்று, புதிய வண்ணக் காகிதத்தை சுவரில் ஒட்ட துவங்கின முயல்குட்டிகள். சுவரில் இருந்த மர்மக்கதவு மீதும், வண்ணக்காகிதங்களை ஒட்டியதால் மறைந்தது.வெகுநேரத்துக்குப் பின்னும், கணியனைக் காணாததால், கவலையில் மூழ்கியது ஆனந்தி. தேடும் முயற்சியில் ஈடுபட்டன. மெல்லிய விசில் அடித்தபடி, 'கணி... கூ கூ...' என, சத்தமிட்டு அழைத்தன முயல்குட்டிகள். எந்த பதிலும் கிடைக்காததால் திகைத்தன.- தொடரும்...