என் வழி செம்ம பாஸ்ட்
எக்ஸ்பிரஸ்வே என்பது வேகமான வாகன போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளாகும். இதில் பயணிக்க கார்கள், லாரிகள் மற்றும் பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சைக்கிளில் பயணிப்பவர்கள் மற்றும் நடப்பவர்களுக்கு இதில் செல்ல அனுமதி இல்லை. அதோடு வாகனம் ஒட்ட பயிலுபவர்களும், இந்த நெடுஞ்சாலையில் செல்ல முடியாது. இந்த எக்ஸ்பிரஸ்வே (அதி விரைவு பாதை) யில் எந்த குறுக்கு பாதையும் வராது; இடையூறும் தராது. அப்பொழுதுதானே அதிவிரைவாய் செல்ல முடியும். மோசமான வானிலை அல்லது ஏதாவது விபத்து ஏற்பட்டாலொழிய, சாலை எந்த இடையூறுமின்றி நெரிசலின்றி காணப்படும்.இச்சாலையில், ஏராளமான கார்கள் ஓடும். எக்ஸ்பிரஸ்வே எனப்படும் இந்த அதி விரைவு பாதை, வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. பிரிட்டனில் இது, 'மோர்டர்வே' எனப்படுகிறது.அமெரிக்காவில் ப்ரிவே, டர்ன்பைக்ஸ், த்ருவே மற்றும் சூப்பர் ஹைவே என பல பெயர்கள் உண்டு. ஜெர்மனியில் ஆட்டோபஹ்னென் என்றும் பிரான்ஸில் ஆட்டோரூட்ஸ் என்றும், இத்தாலியில் ஆட்டோஸ்டேரிட் என்றும் இந்த அதி விரைவு பாதை அழைக்கப்படுகிறது.எல்லா நாடுகளிலும் நகரங்களை இணைக்க வேகமான சாலை இணைப்புகள் என்னும் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டு இருக்கும். எக்ஸ்பிரஸ்வேயில் நீண்ட நேரான பாதை அமைந்து இருக்கும். இதனால் வாகனங்கள் அதிக வேகத்தில், பாதுகாப்பாய் பயணிக்க முடியும்.ஒவ்வொரு திசையும் தனித் தனி பாதையை கொண்டதாக இருக்கும். இதுபோல வாகனங்கள் தனித் தனி பாதையில் பிரிக்கப்படுவதால் விபத்துகள் பெரும்பாலும் ஏற்படுவதே இல்லை. ஒவ்வொரு பாதையிலும் இரு பிரிவுகள் இருக்கும். ஒன்று சற்று மெதுவாய் போகும் வாகனங்களுக்கு, மற்றது மிக வேகமாய் செல்லும் வாகனங்களுக்கு. ஒவ்வொரு பாதைக்கும் சில இடங்களில் மத்தியில் நிறுத்தி வைக்க வசதியான துண்டு சாலைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதோடு இந்த இடத்தில் குத்துச்செடிகள் அல்லது தடைகள் வைக்கப்பட்டிருக்கும். இது எதிர்வரும் வாகனங்களால் அவை வெளிப்படுத்தும் விளக்கு வெளிச்சதால், பாதையை தெளிவாக பார்க்க முடியாத நிலையை தவிர்க்க உதவும். அதோடு இந்த இணைப்பு மைய துண்டு சாலையை பயன்படுத்தி, ஒரு பாதையிலிருந்து மற்ற பாதைக்கு மாறுவதை தடுக்க செய்வர். பாதை தடைகள் வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான எக்ஸ்பிரஸ்வேக்களில் சுங்க வரி வசூலிக்கும் நிலையங்கள் இருக்கும். அந்த பாதையை பயன்படுத்த பணம் கொடுக்க வேண்டும். இந்த பணம் அந்த பாதையை பராமரிக்க உதவும்.எக்ஸ்பிரஸ்வேயில் குறுக்கே கடக்க முடியாது. எக்ஸ்பிரஸ்வேயை குறுக்கே கடக்க எந்த சாலைக்கும் அனுமதி இல்லை. குறுக்கே கடக்க வேண்டிய சாலை எக்ஸ்பிரஸ்வேக்கு மேலேயோ, கீழேயோ அல்லது பூமிக்கு அடியிலோ அமைக்கப்படும். வாகன ஓட்டிகள் இந்த எக்ஸ்பிரஸ்வேயை பயன்படுத்த அதனுள் நுழையும்போது வெகு கட்டுப்பாடான தடம் மாறும் இடத்தில்தான் நுழைய வேண்டும். இஷ்டத்துக்கு நுழைய முடியாது; கூடாது.ஒரு எக்ஸ்பிரஸ்வேயிலிருந்து மற்ற எக்ஸ்பிரஸ்வேயிற்கு மாறுவது தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல தடை செய்யப்பட்டதுமாகும். ஒரு எக்ஸ்பிரஸ்வேயில் ஆபத்து நிலையில் மட்டுமே ஒரு வாகனம் நிற்க அனுமதி உண்டு. ஏனெனில், இது போன்ற எக்பிரஸ்வேயில் வாகனங்களை நிறுத்தவென குறிப்பிட்ட இடமிருக்கும். அவசர கால உதவிக்கான தொலைபேசி மையங்கள் ஆங்காங்கே காணப்படும். இந்த காலத்தில் செல்போன்கள் உதவுகின்றன. அவசர கால உதவி எண்களை அழைத்து உதவி பெறலாம்.