மாயமாய் மறைந்த வசீர்! (2)
சென்றவாரம்: இஸ்கான் நாட்டு மன்னரை ஒழித்து, பதவியை பிடிக்க, முதலமைச்சர் வசீர் முயன்றுவந்தார். அதற்காக, ஒரு மந்திரம் கற்றார். இனி - ஆத்திரத்தில் குதித்த வசீர், 'இது ஒரு விளையாட்டு... சற்று நேரம் அசையாதீங்க மன்னா...' என்று குழந்தை போல் அடம் பிடித்தார்.'இந்த விளையாட்டை நான் விரும்பல...' என்றார் மன்னர்.'ஒரே ஒரு முறை... இந்த விளையாட்டுக்கு ஒத்துழையுங்க...' 'சரி... சரி... இதுல சதி, கிதி ஏதுமில்லையே...''ஒன்றுமில்லை... கொஞ்சம் நேரம் தான்...' என்றபடி, மந்திரத்தை உச்சரித்து, கண்களை திறந்தார் வசீர்; மன்னரை காணோம். 'வெற்றி... வெற்றி... காரியத்தை முடித்து விட்டேன்...' என்று, குதுாகலித்தார்.சற்று நேரத்தில், 'வசீர்... சூடான தேநீர் சாப்பிடுறீயா...' என, மன்னரின் குரல் கேட்டது.அதிர்ந்த வசீர், 'உங்கள தான் நகரக் கூடாது என்று கூறினேனே... எங்க போயிட்டீங்க...' என்றார்.களைப்பாக இருந்ததால், சூடாக தேநீர் குடிக்க போனதாக கூறிய மன்னர், 'சரி வசீர்... நீ போகலாம்... உன் விளையாட்டு தமாஷா இருக்கு; எனக்கு இப்போ நல்லா துாக்கம் வருது; சற்று கண் மூடணும்...' என்று கொட்டாவி விட்டபடி, கதவை மூடினார்.எரிச்சலுடன் கைகளைப் பின்புறம் கட்டியபடி, தன் அறைக்குச் சென்ற வசீரிடம், 'ஐயா... உருவமில்லாமல் இருக்கிறேனே... மீண்டும் என் உருவை கொடுங்க...' என்றான் ஆசாப். இரவு உணவுக்காக, அந்தரத்தில் தொங்கவிட்டிருந்த சமைத்த ஆடு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது. உருவமற்ற ஆசாப், அதை ஆவேசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.திடீர் என உற்சாகத்தில் குதித்த வசீர், 'ஆ... வழி கண்டுபிடிச்சுட்டேன்; துாங்கும் போது ஆடவோ, அசையவோ மாட்டார் மன்னர்; மந்திரத்தை பிரயோகிக்க அது தான், சரியான தருணம்' என்று முடிவு செய்தார்.'என் உருவம் மீண்டும் கிடைக்குமா' என்று, தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான் ஆசாப்.'முட்டாள் ஆசாப்... ஏன் இப்படி புலம்பற...' என, ஆசாபை அதட்டியபடி, மன்னரின் படுக்கை அறைக்குள், பூனை போல புகுந்தார் வசீர்.அது இருட்டாக இருந்தது.'இதுவும் நல்லதுக்குத்தான்' என, மன்னரின் படுக்கை முன் நின்று, மந்திரத்தை உச்சாடனம் செய்து, கண் விழித்தார்.அப்போது, 'இந்த நேரத்தில், என் படுக்கையறையில் என்ன செய்கிறாய் வசீர்...' என்ற மன்னரின் குரல் கேட்டு திடுக்கிட்டு, 'நீங்க துாங்கலயா மன்னா...' என்று குழறினார். 'மாலையில் தேநீர் அருந்தியது தப்பாகிவிட்டது... துாக்கம் வர மாட்டேங்குது; தோட்டத்தை சுத்தி வர போனேன்; அது சரி... நீ இங்கே என்ன செய்கிறாய்...' என்றார் மன்னர். திரு திரு என விழித்தார் வசீர். அவர் காதருகில், 'மன்னரின் பார்வையே சரி இல்ல... எனக்கு பயமாயிருக்கு...' என்று, கிசு கிசுத்தான் உருவமற்ற ஆசாப்.'என் படுக்கையை காணோம்...' என்று கத்தினார் மன்னர். படுக்கையில், மன்னர் இருப்பதாக எண்ணி வசீர் போட்ட மந்திரம் பலித்தது. அது மாயமாகிவிட்டது. இதையடுத்து, அங்கு பீதி குடியேறியது.மறுநாள் காலை -கண்ணாடியில், முக அழகை ரசித்துக் கொண்டிருந்த மன்னர் முன் வந்த வசீர், 'நகராதீங்க... அசையாதீங்க...' என்றபடி, உருவை மறைக்கும் மந்திரத்தை, கண்களை மூடி உச்சரிக்க ஆரம்பித்தார்.'இங்க பாரப்பா... இதென்ன தமாஷ்...' என்றபடி வசீரின் முகத்தின் முன், கண்ணாடியை நீட்டியபடி நின்றார் மன்னர்.கண் விழித்த வசீர் திகிலுடன், 'நல்வேளை, மந்திரத்தை சரியாக உச்சரிக்கவில்லை; உச்சரித்து கண்ணாடியில் என் பிம்பத்தை பார்த்திருந்ததால், நான் மாயமாய் மறைந்திருப்பேன்' என கலங்கி நின்றார். அவருக்கு, வியர்த்து கொட்டியது. 'மன்னரை தீர்த்துக்கட்ட வேறு மார்க்கமே இல்லையா' என, யோசித்தபடி நடந்த வசீர், உடலற்ற ஆசாப் மீது மோதி, 'தொபுக்கடீர்' என, விழுந்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.உடனே ஆசாபை அழைத்து, 'மன்னர் உடலை நீ தான் மறைக்க முடியும்; அந்த மந்திரத்தை, உன்னால் பயன்படுத்த முடியும்; உடலற்ற உன்னை, யாரும் பார்க்க முடியாதே...' என்றார்.'நான் என்ன செய்யணும்...' என்ற ஆசாபுக்கு, அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார் வசீர். மன்னருக்கு படைக்கப் பட்டிருந்த காலை உணவு மேஜை முன் நின்று அந்த மந்திரத்தை, உச்சரித்தான் ஆசாப். மேஜை மாயமாகியது; அதில் வைத்திருந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் அந்தரத்தில் நின்றன.'மந்திரம் புரிந்ததா ஆசாப்...' என்றார் வசீர்.'புரிந்தது... ஆனாலும், மேலும் ஒருமுறை சொல்லி பயிற்சி செய்து கொள்கிறேன்...' என்றபடி, வசீரின் முன்னால் வந்த உருவமற்ற ஆசாப், மந்திரத்தை சுத்தமாக உச்சரித்தான்.'சரி... ரொம்ப கச்சிதமா சொல்ற...' என்று பாராட்டிய வசீரை தேடினான்.'ஐயா... நீங்க எங்கே இருக்கிறீங்க...' அலறினான் ஆசாப்.'எ... என்ன... இங்கே தானே...' என்று, வசீரின் குரல் கேட்டது. உருவத்தைக் காணவில்லை.ஆசாப் உச்சரித்த மந்திரத்தால், வசீர் உடல் மாயமானது. அரண்மனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நடக்கும் மர்மம் குறித்து விசாரிக்க மன்னர் உத்தரவிட்டார்.சிறிது நேரத்தில் காவலர்கள் அங்கு வந்தனர். அந்த அறைக் கதவையும், ஜன்னல்களையும் நன்றாக மூடி, பலகைகள் வைத்து ஆணி அடித்து மூடினர்.அறை உள்ளிருந்து, 'நிறுத்து... ஆணி அடிக்காதே... திறந்து விடு... என்னை தெரியலயா...' என்று கத்திக்கொண்டிருந்தார் உடலற்ற வசீர்.அப்போது, மன்னரிடம் பவ்யமாக, 'இந்த அறையில் ஆவிகள் நடமாட்டமிருக்கிறது; பொருட்கள், அந்தரத்தில் மிதக்கின்றன. பேச்சு சத்தம் கேட்கிறது... ஆனால், ஆட்கள் யாருமில்லை...' என்றான் சேனாதிபதி.'நல்லவேளை... இந்த அறையை, அடைத்து மூடியது சரியான முன்னேற்பாடு தான். வசீர் இங்கேயில்லை; அவரது குரல் மட்டும் கேக்கிறது; அவருக்கு, மந்திர தந்திரமெல்லாம் நன்கு தெரியும். எப்படியாவது, ஆவிகளிடம் இருந்து தப்பி வந்துடுவார்...' என்றார் மன்னர்.கண்மணிகளே... பிறருக்கு தீமை செய்ய நினைத்தால், நமக்கே திரும்பி வரும். யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ பழகுங்கள்.முற்றும்