உள்ளூர் செய்திகள்

செய்தித்தாள் பாட்டி!

திருச்சி, சாவித்ரி வித்யாசாலா பள்ளியில், 1957ல், 6ம் வகுப்பு படித்த போது, எங்கள் தமிழ் ஆசிரியர் ஜானகிராமன், மிகவும் உற்சாகமாக பாடம் நடத்துவார்.அன்றாடம் செய்தித்தாள் வாசித்த பின் தான், வகுப்புக்குள் நுழைய அனுமதிப்பார். அன்றைய நாளிதழ் செய்திகளில் இருந்து, கேள்விகள் கேட்பார்; விடை சொல்பவரை பாராட்டுவார். முக்கிய செய்திகளை தொகுத்து, ஒரு மாணவியை வாசிக்க வைப்பார். அவரது கண்டிப்பால், நாளிதழ் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு, 74 வயதாகிறது. பேரன், பேத்தியோடு வசிக்கிறேன். எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில், சிறுவர், சிறுமியரை அழைத்து செய்திகளை வாசிக்க வைக்கிறேன். வினாடி - வினா போட்டி நடத்தி உற்சாகப்படுத்துகிறேன். இதனால், படிக்கும் பழக்கம் வளர்ந்துள்ளது. அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்கின்றனர். பள்ளியில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வெல்கின்றனர்.நாளிதழ் வாசிப்பு பழக்கம், அலைபேசி, கணினி, 'டிவி' போன்றவற்றிலிருந்து, மாணவ, மாணவியரை விலக்கி பாதுகாக்கிறது. எங்கள் குடியிருப்பில், 'செய்திதாள் பாட்டி' என்றே என்னைப் பாராட்டுகின்றனர். இந்த நல்ல பழக்கத்தை, மனதில் வேரூன்ற வைத்த, நல்லாசிரியரை நினைத்து நெகிழ்கிறேன்.- ஆர்.சகுந்தலா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !