உள்ளூர் செய்திகள்

ஒன்பது நாள் தீபாவளியாம்!

இந்தியாவிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், தென் அமெரிக்காவின் அருகே உள்ள கரீபியன் தீவுகளில், தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது ஆச்சரியமான செய்தி. அதுவும் நம் நாட்டில் கூட இப்பண்டிகை ஐந்து நாட்களுக்குத்தான் கொண்டாடப் படுகிறது. ஆனால், கரீபியன் தீவுகளில் உள்ள ட்ரினிடாட்டில் தீபாவளி ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.'லாண்ட் ஆப் ஹம்மிங் பேர்ட்' என்றழைக்கப்படும் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நகரங்களில், இப்பண்டிகையை இத்தனை முக்கியத்துவத்துடன் கொண்டாடக் காரணம் என்ன? கரீபியன் தீவுகளின் மொத்த ஜனத்தொகையான ஒன்றரை மில்லியன் மக்களில், நாற்பத்தி மூன்று சதவீதத்தினர் இந்தியர்களே! இந்தத் தீவுகளில் உள்ள கரும்புப் பண்ணைகளில் வேலை செய்ய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சென்ற இந்தியர்கள் அங்கேயே குடியேறிவிட்டனர். அவர்கள் பரம்பரையில் வந்த மக்களே இப்படி ஆரவாரமாக கொண்டாடுகின்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு ஒன்பது நாட்களுக்கு முன் பிருந்தே ட்ரினிடாட் நகரின் நடுவில், தீபாவளி நகர் திருவிழா தொடங்குகிறது. தீவுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் பாரம்பரிய இந்திய உடைகள் அணிந்து, திருவிழா திடலுக்குக் கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கின்றனர். இங்கு இந்திய கலாசாரப்படி, பாரம்பரிய நடனங்கள், இசை, பஜனைகள் நடப்பதோடு, வித்தியாசமாக மிஸ் இண்டியா, கரீபியன் போட்டியும் நடைபெறுகிறது.திருவிழாவின் நடுப்பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெறும். அதில் ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு கண்காட்சி அமைக்கப்படுகிறது. வேதங்கள், வழிபாட்டு முறை, இந்தியத் திருமணங்கள், விஞ்ஞானமும் மெய்ஞானமும், மகாத்மா காந்தி, யோகா, இந்தியக் கலை என பல கண்காட்சிகள் இதுவரை நடந்துள்ளன. இதன் முக்கியக் குறிக்கோள் அந்நிய நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், இந்திய நாட்டின் கலாசாரப் பாரம்பரியம், அடுத்த தலைமுறையினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே!தீபாவளிப் பண்டிகை உருவானதற்கு நரகாசுர வதம், ராவண வதம், மகாபலியை வாமனராக பூமிக்குக் கீழ் தள்ளியது போன்ற பின்னணிக் கதைகள் நாடகமாக, நாட்டியமாக தீபாவளி நகரில் மட்டுமல்ல, நகரின் பல தெருக்களிலும், கிராமங்களிலும் நடித்துக் காட்டப்படுகிறது. இந்த அந்நிய மண்ணில் தீபாவளி அன்று பொது விடுமுறை விடப்படுகிறது. பட்டாசுகளும், வாண வேடிக்கைகளும் விண்ணைப் பிளக்கின்றன. உச்சக்கட்டமாக, மாலையில் இருட்டத் தொடங்கும் போது மூங்கில்களில் ஆன கூடை போன்ற வடிவங்களில் , மண் அகல்கள் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு வீட்டி லும் வாசல்களில், பால்கனிகளில், திண்ணை களில், படிகளில் தெருவோரங்களில்... என ஊரெங்கும் விளக்கேற்றி, லஷ்மி தேவியை ஆராதிக்கின்றனர்.தீபாவளி இல்லாத கிராமங்கள்!சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது மாம்பட்டி கிராமம். இந்த கிராமத்திலும், இதை சுற்றியுள்ள ஒப்பிலான் பட்டி, தும்பைபட்டி, சந்திரப்பட்டி, எம்.வலையபட்டி, கச்சப்பட்டி, தேப்பு பட்டி, கிலுகிலுப்பை பட்டி, இடையபட்டி, திருப்பதி பட்டி, கலுங்கு பட்டி, இந்திரா நகர், வாககரைப்பட்டி ஆகிய கிராமங் களிலும், கடந்த 54 ஆண்டுகளுக்கு மேலாக, தீபாவளியை கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர்.கிட்டத்தட்ட தீபாவளியும், விவசாய பணிகளும் ஒரே காலகட்டத்தில் வருவதால் தீபாவளிக்கு வட்டிக்கு கடன் வாங்குவதோடு, விவசாயத்திற்கும் கடன் வாங்குவர். அறுவடையின் போது இரண்டு கடனுக்காக விளைந்த நெல்லை முழுவதையும் விற்று வெறுங்கையுடன் வீடு திரும்புவர். 54 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் இப்படி அல்லல்பட்டுதான் வந்தனர்.அந்த காலகட்டத்தில் இந்த 13 கிராமங்களிலும் பெரும்பான்மையானவர்கள் வறுமை நிலையில் இருந்ததால், ஊர் பெரியவர்கள் கூடி நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவை எடுத்தனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்த கிராமங்களில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஏன் வறுமை நிலையில் வாடியவர்கள் வசதியான நிலைக்கு வந்திருந்தாலும் தீபாவளி கொண்டாடுவதில்லை என்ற அந்த முடிவில் மட்டும் உறுதியாக நிற்கின்றனர்.இந்த கிராமத்தை பொறுத்தவரை வெளியூரிலிருந்து திருமணமாகி வரும் பெண்களுக்கு தலைதீபாவளி மட்டுமல்ல, தொடர்ச்சியாக வரும் எந்த தீபாவளியும் கிடையாது. தீபாவளி கொண்டாடுவதற்காக பிறந்த வீட்டிற்கும் செல்லக்கூடாது. அதே நேரம் இந்த கிராமங்களில் பிறந்து வளர்ந்து வெளியூர்களுக்கு திருமணமாகி செல்லும் பெண்கள், தங்கள் கணவன் வீட்டில் தீபாவளி கொண்டாடிக் கொள்ளலாம். தீபாவளி வர ஒருமாதம் இருக்கும் முன்பே நாள் காட்டியை புரட்டி புரட்டி தீபாவளியை எதிர்நோக்கும் சிறுவர், சிறுமியர்கள் மத்தியில் மாம்பட்டி பகுதி குழந்தைகள் தீபாவளியை நாட்காட்டியில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவர்கள். அதே நேரம் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் மாம்பட்டி கிராம குழந்தைகளுக்கு மட்டுமல்ல, யாருக்கும் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !