குறும்புக்கார குரங்கு!
விவசாயி மாடசாமி வீட்டின் கொல்லையில், பெரிய மாமரம் இருந்தது. பருவ காலத்தில் ஏராளமான பழங்களை தந்தது. அவற்றை பறித்து சந்தையில் விற்று வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருவார்.கடன் இல்லாமல், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் மாடசாமி. அந்த ஆண்டு மாமரம் பூத்து பிஞ்சு விட ஆரம்பித்தது. அதை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தது குடும்பம்.அப்போது, திடீரென வந்த குரங்கு, மாமரத்தில் ஏறி கிளைக்கு கிளை தாவியது.'விளையாடிய பின், வேறு இடத்துக்கு சென்றுவிடும்' என நினைத்தார் விவசாயி.ஆனால் மரத்தில் இருந்த பறவை கூடுகளை துாக்கி வீசியது; பூக்களையும், பிஞ்சுகளையும் உதிர்த்து எறிந்தது.'ஏய்! அப்படி செய்யாதே... அது தவறு...'எடுத்து கூறினார் விவசாயி.'அப்படி தான் செய்வேன். எனக்கு புத்தி சொல்லாதே...'மரக்கிளையில் அமர்ந்தபடி இறுமாப்புடன் சொன்னது குரங்கு.குறும்புக்கார குரங்கை விரட்ட வழி தெரியாமல், சோகத்தோடு அமர்ந்திருந்தார் விவசாயி. அதைக் கண்ட அணில், 'அண்ணே... ஏன் சோகமாக இருக்கிறீர்...' என்று கேட்டது.குரங்கின் அட்டுழியத்தை எடுத்து கூறினார் விவசாயி.'கவலைப்படாதீர்... குரங்கை ஓட வைக்கிறேன்...'துணிச்சலோடு சபதம் செய்தது அணில்.'ஆறறிவு படைத்த என்னாலே குரங்கை விரட்ட முடியவில்லை. இந்த குட்டி அணில் என்ன செய்ய போகிறது' என எண்ணினார் விவசாயி.குறும்புக்கார குரங்கை வம்புக்கு இழுத்தது அணில்.'என்னுடன் போட்டிக்கு வர்றீயா...'அழைத்தது அணில்.'ஓ... தாராளமாக...'தலையாட்டியது குரங்கு.'நான் காட்டும் மரத்தில் உச்சி கிளைக்கு வர வேண்டும். அது தான் போட்டி...'அறிவித்தது அணில்.'விதவிதமான மரங்களில் எல்லாம் உச்சாணி கிளை வரை தாவி ஏறி இருக்கிறேன். இந்த போட்டியெல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி...' என்றபடி சம்மதித்தது குரங்கு.குறிப்பிட்ட மரத்தை காட்டி அதில், விறுவிறுப்புடன் ஏறியது அணில்.பன்மடங்கு எடையுள்ள குரங்கும் பின் தொடர்ந்து ஏறியது.அணில் கிளை விட்டு கிளை தாவியது.குரங்கும் அது போல் செய்ய முயன்றது.வலுவில்லாத முருங்கை மரத்தில் தாவியபோது கிளை ஒடிந்து விழுந்து காலில் காயம்பட்டு துடிதுடித்தது. வெட்கத்துடன் தலையை தொங்க போட்டது.நிம்மதி பெருமூச்சு விட்டு மாமரத்தை ஏறிட்டு பார்த்தார் விவசாயி.மாம்பூக்கள் மகிழ்ந்து சிரித்தன.குழந்தைகளே... முன், பின் யோசிக்காமல் எதையும் செய்யக் கூடாது; எதையும் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.எஸ்.டேனியல் ஜூலியட்