உள்ளூர் செய்திகள்

பாண்டவலினி குகை!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரிலிருந்து, 80வது கிலோமீட்டரில் பாண்டவலினி குகைகள் உள்ளன. இவற்றை, திரிரஷ்மி லேனி எனவும் அழைக்கின்றனர். மராட்டிய மொழியில், 'லேனி' என்றால் குகை என பொருள். இங்கு, 24 குகைகள் உள்ளன.திரிரஷ்மி மலை அடிவாரத்தில் இருந்து, குகைகளை சென்றடைய படிகட்டுகள் உள்ளன. கி.மு., 1 முதல் கி.பி., 5ம் நுாற்றாண்டுக்குள் இவை உருவாக்கப் பட்டிருக்கலாம் என, வல்லுனர்கள் கணித்துள்ளனர்.புத்தமதத்தில் ஹீனயான பிரிவு வலுவாக இருந்த காலத்தில், புத்த பிக்குகள், 18வது குகையை பிரார்த்தனைக்காகவும், மற்றவற்றை வசிப்பிடமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.சில குகைகளில், புத்தர் மற்றும் போதிச் சத்துவர் சிலைகள் உள்ளன. குகைகள் ஒன்றுடன் ஒன்று கல் ஏணியால் இணைக்கப் பட்டுள்ளன. நாசிக் என்றதும் இரு இடங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, ஜோதிர்லிங்க திரிம்பகேஸ்வரர் கோவில். அங்கிருந்து, 27 கிலோ மீட்டரில் இந்த குகைகள் உள்ளன.மற்றொன்று பஞ்சவடி. இது, ராமாயணத்தில், ராமர், சீதை, லட்சுமணன் தங்கிய இடமாக கருதப்படுகிறது. அங்கிருந்து, 40 கிலோ மீட்டரில், இந்த குகைகள் உள்ளன. - திலிப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !