பொங்கலோ பொங்கல்!
'பொங்கல்' தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை! அது விவசாயிகளின் விவசாயத்திற்கு உதவியவர்களின் பண்டிகை. உலகம் தோன்றிய நாள் முதல் அனைத்து ஜீவராசிகளையும் கண்டவர் என்பதாலே சூரியனே உலகில் மூத்தவர் என்ற பெருமை பெறுகிறார். சூரியனுக்கு சூடான சர்க்கரை பொங்கலும், மிளகு அதிகமில்லாத வெண் பொங்கலும் படைப்பது பண்டைய வழக்கம்.பொங்கலுக்கு பொங்கல்தான்!கர்நாடகத்தில் மங்களூர் நகரில் கத்ரிமலைப் பகுதியில் கத்ரி மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கதலி தான் கத்ரியாக மாறிவிட்டது. கதலி என்றால் வாழைத் தோப்பு எனப் பொருள். இங்குள்ள சிவலிங்கம், கிணற்றிலிருந்து சுயம்பு லிங்கமாக எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கோவிலில் அன்னப்பா, மலைராயா என இரு தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன.வருடத்தில் ஒருநாள் மகாசங்கராந்தி (ஜனவரி 15ம் தேதி) மட்டும் இந்த சன்னதிகளின் கதவுகள் திறக்கப்பட்டு தீபாராதனை நடக்கும். பிறகு, மீண்டும் அடுத்த மகாசங்கராந்தியின் போதுதான் திறக்கப்படும்.போகுது - பெருகுது, நீடித்து நிற்குது!போகிப் பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கள் போகின்றன. பொங்கல் பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கி பெருக ஆரம்பிக்கின்றன. காணும் பொங்கல், எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.சிக்க - கஜக்!உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 'மகர சங்ராந்தி நாள்' - நம் பாவங்கள் தீர்ந்து, மோட்சம் கிடைக்கும் நாள்' என்கிற நம்பிக்கை நிலவுகிறது.சூரியன் தெற்கு திசையிலிருந்து (தக்ஷிணாயணம்) வடக்கு நோக்கி (உத்ராயணம்) நகர துவங்கும் நாள் என்பதால், பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் துவங்குகின்றன. இந்த நாளில் கங்கை, யமுனை, நர்மதா என அருகிலிருக்கும் புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதை தலையாய கடமையாக கருதுகின்றனர். குளித்தபின், தானியங்களை தானமாக வழங்கி, இனிப்புகளை செய்து சாப்பிடுகின்றனர். உடலுக்கு சூட்டை தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம் பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கிய காரணம். இத்துடன் கேழ்வரகில் கிச்சடியும் செய்து சாப்பிடுகின்றனர். இந்த பண்டிகைக்காக செய்யப்படும் இனிப்புகளில் முக்கியமானவை... சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்) கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்).வேண்டுதலோடு பொங்கல் வை!'தமிழர் திருநாள்' அல்லது 'உழவர் திருநாள்' என்றழைக்கப்படும் பொங்கல் திருவிழா, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலில் உதவிய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மாடு, ஆடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாதான் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்று வீட்டுப் பெண்கள் 'காக்கா பிடி... கண்ணு பிடி...!' என்று காக்கைகளை அழைத்து உணவு வைப்பர். காக்கைகள் ஒன்று கூடி இருப்பது போல் குடும்பங்களும் என்றென்றும் ஒற்றுமையை காக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பொங்கல் உணவை வைப்பதுதான் இதன் தாத்பர்யம்.ப்ரூட் பொங்கல்!ஒரே மாதிரி பொங்கல் சாப்பிட்டு போர் அடிக்குதா? வித்தியாசமான பொங்கலை இந்த பொங்கலில் செய்து உண்ணலாமா...தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1கப், கடலைப் பருப்பு - 1/2 கப், மாம்பழம், பாப்பாளி, வாழைப் பழம், அன்னாசிப் பழம், அத்திப் பழம், (அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்) - தலா 1/2 கப். டூட்டி ப்ரூட்டி - 2 கரண்டி, நெய்-2 தேக்கரண்டி, சர்க்கரை சேர்க்காத கோவா - 4 கரண்டி.செய்முறை: பச்சரிசி, கடலைப் பருப்பை ஒன்றாக மிக்ஸியில் போட்டு ரவையாக உடைத்து கொள்ளவும். இத்துடன் 4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நறுக்கிய பழங்களை ஒன்றாக போட்டு மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும். அடி கனமான வாணலியில் நெய் ஊற்றி பழக் கூழை சேர்க்கவும். அத்துடன் கோவா சேர்த்து கிளறவும். பின்னர் அதில் வேக வைத்த அரிசி கலவையை சேர்த்து, நன்கு கிளறி டூட்டி ப்ரூட்டியால் அலங்கரித்து பரிமாறவும். சூப்பர் ப்ரூட் பொங்கல் ரெடி!