இளவரசன் ப்ருத்திவி! (10)
சென்றவாரம்-: பட்டுதுணியை விரித்து, சுருக்குப் பையில் உள்ளவற்றை கொட்டினாள் மைத்ரேயி. பணக்குவியலுடன், பெரிய வைர மோதிரம் ஒன்றும் விழுந்தது! இனி -அப்படியே அந்த மோதிரத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்ட மைத்ரேயி, “இது தான் மகாராஜாவின் அரச லச்சினை... இதை அணியும் உரிமை மன்னருக்கு மட்டுமே உண்டு. வேறு எவரும் இதை அணியக்கூடாது. நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் லச்சினை இது; மன்னரின் அதிமுக்கிய பொக்கிஷம்.“சின்னி, யோசித்து பார். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த லச்சினை மோதிரத்தை, மன்னர் வேண்டுமென்றே, உன் சுருக்குப்பையில் போடுவாரா... ஒரு காலும் போட மாட்டார். உங்க வீடு தேடி வந்திருக்கும், தெய்வீக இந்த பொக்கிஷத்தை காப்பாற்று வது உங்கள் இருவரின் கடமையாகும். ''இது உங்கள் வசம் இருப்பது, நம்மைத் தவிர வேறு யாருக்குமே தெரியக்கூடாது. இதை உங்களிடம் விளக்கி சொல்லத்தான் மன்னரும், மந்திரியும் என்னை அனுப்பினர். 'இந்த மோதிரத்தின் சொந்தகாரனுக்கு இதை அணியும் நேரம் வரும்வரை, அந்த சுபிட்சமான நேரத்தில், இதை அவன் விரலில் தேவ கோஷங்களினிடையே அணிவிப்பேன். இது சத்தியம்!' என்று இருவரும் சபதம் ஏற்று கொள்ளுங்கள்,” என்று மைத்ரேயி சொன்னதும், இருவரும் அப்படியே செய்தனர்.மைத்ரேயி, அந்த ரூபாய் நோட்டுக்களை தனியே பிரித்து எடுக்க முயலுகையில், “வேண்டாம் அக்கா! அதை தனியே பிரிக்காதீர்கள். மோதிரத்தின் கூடவே இருக்கட்டும்,” என்றாள் சின்னி.இப்போது மூவர் மனதிலும் ஒரே நிம்மதி; படுத்து உறங்க ஆரம்பித்தனர். படுத்த சிறிது நேரத்தில், மைத்ரேயிக்கு, உடல் எல்லாம் ஒரே நடுக்கம். கடும் காய்ச்சல் வாட்டி எடுக்க தன்னையும் மீறி, 'அம்மா... அம்மா என்று முனக ஆரம்பித்தாள். குரல் கேட்டு கண் விழித்த சின்னி பதறினாள்.“மாமா மாமா... அக்கா உடல் அனலாய் கொதிக்குது,” என்றாள்.“சின்னி, அக்காவை விட்டு நகராதே... நான் ஐந்து நிமிடத்தில் நல்ல மூலிகை கஷாயம் தயாரிச்சுட்டு வர்றேன். ஒரு நேரம் குடிச்சா போதும், காய்ச்சல் சட்டென்று ஓடிவிடும். வீட்டு கொல்லையிலிருந்து, சில பச்சிலைகளை பறித்து வந்து, கஷாயம் தயாரித்து மைத்ரேயிக்கு கொடுத்தான்.கஷாயத்தை குடித்ததும், நன்றாக உறங்கி போனாள் மைத்ரேயி. அவள் விழித்தபோது, சூரியனின், 'சுள்' வெயில் வீட்டினுள் புக ஆரம்பித்தது.சட்டென்று கண் விழித்தவள், “சின்னி! இத்தனை நேரமா தூங்கிவிட்டேன். என்னை எழுப்பக் கூடாதா...” என்று கேட்டாள்.“அக்கா, தயவு செய்து நான் சொல்றத கேளுங்கள். இன்னும் காய்ச்சல் விடவில்லை. நீ எழுந்திருந்து அலையக்கூடாதுன்னு, மாமா கண்டிப்பா சொல்லிட்டாரு,” என்றாள் சின்னி.கையில் ஆவி பறக்கும் கஷாயத்துடன் வந்த இம்புலி, “தாயி, தயவு செய்து நாங்க சொல்றதை கேளு... மொதல்ல இந்த கஷாயத்தை குடி. நான் போயி அரண்மனைக்கு விபரம் சொல்லிட்டு வர்றேன்,” என்றான்.“அண்ணா, அரண்மனை வாசல்ல நீல நிற உடை, சிவப்பு குல்லாய் தலையுடன், கபிலன்னு ஒரு ஆள் நிற்பான். அவன் கிட்டே, 'மகாராணி அம்மாவோட வளர்ப்பு மகள், அவங்க வந்த காரியத்தை நல்லபடியாக முடிச்சுட்டாங்களாம். ''உடம்பு சொகமில்லாததால சின்னி வீட்டில் இன்னைக்கு தங்கிட்டு, நாளை காலையிலே வந்துருவாங்களாம். கவலைப் படவேணாம்னு செய்தி அனுப்பினார்கள்னு, மகாராணி அம்மா கிட்ட விபரம் சொல்லிடுங்கள்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விடு அண்ணே,” என்றாள் மைத்ரேயி.அரண்மனை நோக்கி புறப்பட்டான் இம்புலி.அரண்மனை வாயிலில் நின்றிருந்த மனிதனை, “ஏம்பா... நீ தானே கபிலன்,” என்றான் இம்புலி.“ஆமாம், நீங்கள் யார்?” என்று கேட்டான்.“என் பெயர் இம்புலி,” என்று கூறி, மைத்ரேயி சொன்ன விஷயத்தை எல்லாம் கபிலனிடம் கூறி விட்டு திரும்பினான்.மறுநாள் -இரட்டை காளைகள் பூட்டிய வண்டியை இம்புலி ஓட்ட, சின்னியின் விசேஷ தயாரிப்புகளான கம்பங்கூழும், கெட்டித்தயிரும், வெஞ்சனமும் நிறைந்த பாத்திரங்கள் வண்டியின் பாதி இடத்தை நிரப்பி விட, சின்னியும், மைத்ரேயியும், படு ஜாலியாக அரண்மனை நோக்கி சென்றனர்.அவர்கள் கொண்டு வந்த அனைத்தும் சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டன.இவர்களை கண்ட மன்னரும், ராணியும் அன்புடன் வரவேற்றனர்.“எங்களை மன்னித்து விடுங்கள். நேற்று யார் என்று தெரியாததால் உங்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்க முடியவில்லை,” என்று கூறி அவர்கள் காலில் வணங்கி எழுந்தனர் சின்னியும், இம்புலியும்.வைத்த கண் வாங்காமல், சின்னியை உற்று பார்த்தாள் மகாராணி இந்துஜா.“சின்னி! ஒரு சாதாரண நூல் புடவையில், செதுக்கி வைத்த சிலையாக நீ எத்தனை அழகாக இருக்கிறாய் தெரியுமா...” என்று கூறி, அவளை இழுத்து அணைத்து, தன் பக்கத்தில் அமர்த்தினாள்.“ஏம்மா தங்கச்சி! நேற்று காலை, உன் இருப்பிடம் தேடி வந்த அந்த வழிப்போக்கர் களிடம், மகாராணியை பார்க்க ஆசையாக இருக்கிறது என்றாயே... இப்போது உன் ஆசை தீர்ந்துவிட்டதா?” என்று மன்னர் கேட்க, வெட்கம் கலந்த புன்சிரிப்பை உதிர்த்தாள் சின்னி.மகாராணிக்கு, சின்னியிடம் அப்படியொரு ஈர்ப்பு.ஒரு பெரிய தட்டு நிறைய பூக்களும், பழங்களும், மற்றொரு தட்டு நிறைய புடவைகளும், நகைகளும் வைத்து சின்னிக்கு கொடுத்தாள் ராணி.“சின்னி, இது என் அன்பளிப்பு. நீ மாட்டேன் என்று சொல்லி என்னை அவமானப்படுத்த கூடாது!” என்றாள் ராணி.மறுப்பு ஏதும் கூறாமல், வாங்கி கொண்டாள் சின்னி.அதேபோல், மகாராஜாவும், இம்புலிக்கு அன்பளிப்பு என்ற பெயரில் பட்டு வேஷ்டிகள், கழுத்துக்கு மெலிதாக ஒரு செயின், கைக்கு காப்பு, மோதிரங்கள், போன்றவற்றை கொடுத்தார்.இம்புலியும், சின்னியும் அவர்களை வணங்கி விடை பெற்ற போது, நிஜமாகவே கண் கலங்கி விட்டார் மகாராணி.“சின்னி... அடுத்த வாரம், நான் உங்கள் ஊருக்கு வரப்போகிறேன்... உன் சினேகித பட்டாளங்களிடம் எல்லாம் சொல்லி வை...” என்றாள் மகாராணி.மகாராணி இந்துஜா, தான் வாக்குகொடுத்த படி அடிக்கடி சமஷ்டிப்பூருக்கு வந்து, அந்த மக்களின் அன்பு மழையில் குளித்து, திக்குமுக்காடி போனாள்.ஷிப்ரா நதிக்கரையை நோக்கி நடந்தார், மாமுனி திருக்கால ஞானி.வயல்களின் வரப்பின் மேல் ரசித்து நடந்தவர், தெய்வீக சூழலில் அமைந்த சின்னியின் வீட்டை அடைந்தார்.அவரை வரவேற்று, உள்ளே அழைத்து சென்றாள் சின்னி.அப்போது வெளியே சென்று விட்டு திரும்பிய இம்புலி, முனிவரை கண்டு வணங்கினான்.“நீங்கள் இவ்வளவு பெரிய மகான். நீங்கள் வரப்போவது தெரியாமல், பஞ்சாரமலைகுகை கோவிலுக்கு போய் விட்டேன். தயவு செய்து, என்னை மன்னித்து விடுங்கள்,” என்று அவர் காலில் விழுந்து வணங்கினான் இம்புலி.“கவலைப்படாதே இம்புலி. எனக்கே இன்று இங்கு வரப்போவது தெரியாது... இறைவனின் திருஉள்ளம் தான் என்னை இந்த தெய்வீக பூந்தோட்டத்திற்கு, அழைத்து வந்தது,” என்றார் மாமுனி.'தன் பெயர் இவருக்கு எப்படி தெரிந்தது' என்ற ஆச்சர்யத்தை தன்னுள் அடக்கிக் கொண்டான் இம்புலி.அதற்குள் ஒரு பெரிய தட்டில், சூடான பொங்கல், பழங்கள், பாலுடன் எடுத்து வந்து, அவர் முன் வைத்து, “அய்யா... இதை நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்,” என்று கரம் கூப்பி மன்றாடினாள் சின்னி.“எங்களை போன்ற சந்நியாசிகள், விதவிதமாக சாப்பிடுவது, எங்கள் கொள்கைக்கு எதிரானவை. ஆனால், இன்று ஏனோ உன் மனதை புண்படுத்த விரும்பவில்லை,” என்று கூறி, சிறிது பொங்கலை தட்டின் வலது மூலையில் வைத்து, இறைவனை வழிபட்டுவிட்டு சாப்பிட்டார்.“இம்புலி! புறப்படு... நாம் காலாற சிறிது தூரம் நடந்து விட்டு வரலாம்,” என்றார் முனிவர்.முனிவருடன் புறப்பட்டான் இம்புலி.- தொடரும்...