உள்ளூர் செய்திகள்

இளவரசன் ப்ருத்திவி! (12)

சென்றவாரம்-: அதிகாலையில் மகாராணி தேவியிடம் இருந்து, மைத்ரேயிக்கு அழைப்பு வந்தது. இதனால் குழப்பம் அடைந்தாள் மைத்ரோயி. இனி -அமைச்சரை சந்தித்து, விபரத்தை கூறினாள் மைத்ரேயி.''ஜாக்கிரதை மைத்ரேயி... அவளை பற்றி உனக்கு நன்றாக தெரியும். தான் நினைத்ததை சாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அவளுக்கு இணக்கமாகவே பேசிவிட்டு வா...'' என்றார் அமைச்சர்.அவரிடம் விடை பெற்று, மகாராணி தேவியின் அரண்மனைக்கு சென்றாள் மைத்ரேயி.அவளை பார்த்ததும், ஓடிச்சென்று கட்டி அணைத்து, வரவேற்றாள் மகாராணி தேவி.''அம்மாடி! உன்னை பார்த்ததும், கவலைகள் அனைத்தும் பஞ்சாக பறந்து விட்டன. மகாராஜாவின் மறைவிற்கு பின், வெளியில் செல்ல காலே வரவில்லை. அப்பாவின் பிரிவை தாங்க இயலாமல், சித்ரசேனனும் செயலிழந்து போயிருக்கிறான்...'' என்று பேசி கொண்டிருக்கும் போது, ஒன்றுமே அறியாதவனை போல, அங்கே வந்தான் சித்ரசேனன்.''அடடே மைத்ரேயியா! என்ன அதிசயம்... எங்களை மதித்து, இருப்பிடம் வந்திருக்கிறாய். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா...''அம்மா... மைத்ரேயிக்கு சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா...'' என்று சொல்லி, உள்ளே போய், தட்டு நிறைய தின்பண்டங்களை கொடுத்து உபசரித்தான்.மகாராணி தேவிக்கு பெருமை தாங்கவில்லை.'பரவாயில்லை, என் பிள்ளை தேறி விட்டான். சொல்லி கொடுத்ததை அப்படியே நினைவில் வைத்து, என்னமா நடிக்கிறான்...' என மகிழ்ந்தாள் தேவி.''தினமும், ஒரு மணி நேரமாவது இங்கே வந்து தான் போக வேண்டும்,'' என்று மகாராணி தேவி மிக உரிமையுடன் கோரிக்கை விட, புன்சிரிப்புடன் அங்கிருந்து புறப்பட்டாள் மைத்ரேயி.''ஒரு நிமிடம் மைத்ரேயி... முதன் முதலாக வீட்டிற்கு வந்திருக்கிறாய்... எங்கள் அன்பளிப்பை மறுக்காமல் ஏற்க வேண்டும்...'' என்று சொல்லி, ஒரு பட்டு புடவையும், தங்க வளையல்களையும் கொடுத்தாள்.வேறு வழியின்றி, அவற்றை ஏற்றுக் கொண்டாள்.மைத்ரேயியின் வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார் அமைச்சர்.''இத்தனை ஆண்டுகள் இல்லாமல், இன்று, இப்படி தடபுடலான வரவேற்பு, பரிசுப் பொருட்கள்... உன்னை தன் கைவசப்படுத்திக் கொள்ள, தேவி செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று! ''அவளுக்கு நீ மிகவும் இணக்கமானவளைப் போலவே நடக்க வேண்டும். அப்போது தான் நம்மை சூழ்ந்திருக்கும் இருளை கிழித்து, நம் ராஜ்ஜியம் சேதம் ஏதுமின்றி காப்பற்றப்படும்!''''கவலைப்படாதீர்கள் அமைச்சரே... உங்கள் அறிவுரைப்படி நடப்பேன்... மன்னரிடம் சொல்லி விடுங்கள். இனி எனக்கு அடிக்கடி தேவியிடமிருந்து அழைப்பு வரும். அரசி இந்துஜாவை தனியே விட்டுவிட்டு செல்வதில், எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. அவருக்கு துணையாக, கபிலனின் சகோதரியை நியமிக்க வேண்டும்.''படுசுட்டிப் பெண்... மன்னருக்காகவும், உங்களுக்காகவும் தன் உயிரையும் கொடுப்பாள். இவளை தவிர, வேறு யாரும் அரசியின் அறைக்குள் நுழைய கூடாது என்று கபிலனிடம் சொல்லிவிடுங்கள்,'' என்று சொல்லிவிட்டு சென்றாள் மைத்ரேயி.நாட்கள் வேகமெடுத்தன. அதையும் விட தேவி மனதும் மிக மிக துரித கதியில் ஓட ஆரம்பித்தது.ஒருநாள்- -ஜோதிடர்களை வரவழைத்தாள், மகாராணி தேவி.''மகாராஜா என்னை இப்படி தவிக்கவிட்டு விட்டு சென்ற பின், செயலிழந்து விட்டேன். என் மருமகள், அதாவது, துஷ்யந்தனின் மனைவி இந்துஜாவின் உடல்நலம், எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. அவள் சரியாகவே சாப்பிடுவதில்லை. ஒரு குழந்தைக்கு அம்மாவாக போகிறவள். ஒரு குழந்தையை போல சாப்பிட அடம் பிடிக்கிறாள். ''இவள் நன்றாக சாப்பிட்டால் தானே, பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். தயவு செய்து சொல்லுங்கள்... இவள் எனக்கு பெற்று தரப்போவது, இளவரசியையா அல்லது இளவரசனையா... எதுவாக இருந்தாலும் சரி... எனக்கு மகிழ்ச்சி தான்,'' என்று குழைந்தாள் தேவி.''மகாராணி தேவி... வீணாக கவலைப்பட வேண்டாம். இன்னும் இரண்டே மாதம் தான். உங்கள் கையில் தவழப்போவது நிச்சயமாக இளவரசர் தான்! மிக மிக ஆரோக்கியமாக, அழகு விக்ரகமாக, உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கப் போகிறான். இளவரசன் தன், 18வது வயதிலேயே அரியணை ஏறுவார். அந்த திருநாளை நீங்கள் காணத்தான் போகிறீர்கள்,'' என்றார் ஜோதிடர்.'நிறுத்துடா அயோக்ய பதரே' என்று அவனை அதட்ட துடித்த நாக்கை, கஷ்டப்பட்டு அடக்கி, ''அப்பாடி! உங்களின் கணிப்பை கேட்க கேட்க, மனதிற்கு எத்தனை தெம்பாக, இருக்கிறது தெரியுமா...'' என்று கூறி, பழங்களும், தின்பண்டங்களும் நிறைந்த தட்டில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை வைத்து, அவரிடம் கொடுத்து, ''உங்கள் கணிப்பு பலிக்கட்டும். அதற்கு தனியாக மரியாதை செய்கிறேன். ''தயவு செய்து இது பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள். ஒருவர் கண் போல் ஒருவர் கண் இருக்குமா... எதற்கு வீண் வம்பு?'' என்றாள் தேவி.''மகாராணி... என் வாக்கு நிச்சயம் பலிக்கும்; நான் இங்கு வந்ததை பற்றி யாரிடமும் மூச்சு விடவே மாட்டேன். உங்கள் பேரன் பிறந்ததும், சொல்லி அனுப்புங்கள். இளவரசன் பிறந்த நேரத்திற்கு பொருத்தமாக என்ன பெயர் வைக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கலாம்... நானும், இன்றிலிருந்து உங்கள் பேரனுக்காக சில விசேஷ பூஜைகளை செய்கிறேன்,'' என்றார் ஜோதிடர்.''தயவு செய்து அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள்... நல்லவேளை என்னிடம் சொன்னீர்கள். எங்கள் அரச குடும்ப வழக்கப்படி, தனித்து பூஜை செய்வதெல்லாம் ஒத்து வராது. தனி பூஜைகள் செய்யும் அதிகாரம் என் மகன் துஷ்யந்தனுக்கு மட்டும் தான் உண்டு. புரிகிறதா,'' என்றாள்.''என்னை மன்னித்துவிடுங்கள் மகாராணி; உங்கள் விருப்பத்துக்கு விரோதமாக நான் எதுவும் செய்யமாட்டேன்,'' என்று சொல்லி விடைபெற்றார் ஜோதிடர்.ஜோதிடர் கூறியதை நினைத்து பொறாமையால் துடித்தாள் தேவி.அன்று இரவே, மிகுந்த பயபக்தியுடன் பூஜையை ஆரம்பித்தாள்.மறுநாள் -தன் அருமை மகனை கூப்பிட்டு, ''கண்ணா! உனக்கு அரியணையில் அமரும் ஆசை இருந்தால், நான் சொல்வதை கேள்... இல்லையென்றால், அது வெறும் கனவு தான் என்பதை நினைவில் வைத்துக் கொள். மைத்ரேயியின் தயவு இருந்தால் தான், நாம் நினைத்ததை சாதிக்க முடியும். ஆதலால், அவளுடன் மிக பக்குவமாக பேசி, நம் பக்கம் அவளை இழுக்க வேண்டும்.''அவள் இங்கே வந்ததும், உங்கள் இருவரையும் தனியே விட்டு விட்டு உள்ளே சென்றுவிடுவேன். நீ அவளிடம் சொல்ல வேண்டியது இது தான்,'' என்று அவன் காதில் கிசுகிசுத்தாள் மகாராணி தேவி.சிறிது நேரத்திற்கு பின், மைத்ரேயி அங்கு வந்தாள்.''மைத்ரேயி... 'இந்த ஆண்டிற்குள் நான் மன்னன் ஆகிவிடுவேன்...' என்று, அனைத்து ஜோதிடர்களும் சொல்லிவிட்டனர். அவர்களின் வாக்கு பொய்த்ததே இல்லை. சொல்வதை கவனமாக கேள்... நான் தான் இந்நாட்டு மன்னன் என்ற அறிவிப்புடன், அரியணையில் அமர்த்தி, பெரியவர்கள் ஆசீர்வதிக்கும் போது, 'இவள் தான் இந்நாட்டு மகாராணி' என்று அறிவித்து, உன்னை என் அருகில் அமர்த்திக் கொள்வேன்...'' என்றான் சித்ரசேனன்.''என்னது... நான் உங்கள் மகாராணியா... அது எப்படி சாத்தியம்?'' என்று, திடுக்கிட்டவளை போல் கேட்டாள் மைத்ரேயி.''உன் அறிவு, அழகு, நேர்மை இவற்றிற்கு தெய்வம் கொடுக்கும் கூலி இது... மனம் நொந்து சொல்கிறேன். இத்தனை ஆண்டுகளாக, அந்த நன்றி கெட்ட துஷ்யந்தனுக்கு ஓடாக உழைத்தாய். அதற்கு உனக்கு என்ன செய்தார்?'' என்று கேட்டான் சித்ரசேனன்.''என்ன இப்படி கேட்கிறீர்கள்... இருக்க இடமளித்து, மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டாரே... இதை விட வேறு என்ன வேணும்?'' என்று கேட்டாள் மைத்ரேயி.அப்போது தான் அங்கு வந்தவளைப் போல், மறைவிடத்திலிருந்து வெளிப் பட்டாள் மகாராணி தேவி.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !