இளவரசன் ப்ருத்திவி! (2)
சென்றவாரம்: வயலில் வேலை செய்துகொண்டிருந்த இம்புலியையும், சின்னியையும் இரு பெரிய மனிதர்கள் சந்தித்தனர். பின் புறப்படும் போது... இனி -'தங்கச்சி இந்த பணம் உனக்கல்ல... உன் வயிற்றில் வளரும் என் மருமகனுக்கு!' என்று குண்டை தூக்கி போட்டனர்.''அப்போ என்கிட்ட ஏன் கொடுக்கறீங்க... உங்க மருமகன் பொறந்ததும், அவனிடமே கொடுத்திருங்க; அது தான் முறை... ஐயா, எங்க துஷ்யந்த மகாராஜாவை பாத்துட்டு தானே ஊருக்கு போவீங்க...'' என்றாள் சின்னி.'இதென்னடா வம்பா போச்சு... உங்க மகாராஜா உங்களுக்கு உசத்தீனா... அந்த ஆளை, வேலை மெனக்கெட்டு நாங்க போய் பாக்கணுமா... அதெல்லாம் நடக்குற காரியம் இல்லை!' என்றனர்.''ஐயா! ஏன் இப்படியெல்லாம் கண்டபடி பேசுறீங்க... எங்க மகாராஜாவை பார்த்தா, உங்கள அறியாமலேயே கரம் கூப்பி, அவர் காலில் விழுந்து வணங்குவீங்க; நான் பொய் சொல்லல, நிஜமாவே அப்படி தான் நடக்கும்!''''சரி சரி... உனக்காக அந்த மனுஷனை பாத்து தொலைக்கிறோம். மாசமா இருக்குற பொண்ணுங்க ஆசைப்பட்டா, உடனே அதை நிறைவேற்றி வைக்கணும்னு, எங்க ஊர் பெரியவங்க சொல்லுவாங்க...''சரி... உங்க அரசனை பார்த்து என்ன கேட்கணும்... தயங்காம சொல்லு தங்கச்சி... உனக்காக எங்க கவுரவத்த பாக்காம அந்த மனிதனை பார்த்து, உன் விருப்பத்தை தெரிவிக்கிறோம்,'' என்றார் வந்தவரில் ஒருவர்.''ரொம்ப நன்றி ஐயா... வேற ஒண்ணுமில்ல, மகாராஜா கிட்ட சொல்லி, மகாராணியை பார்க்க அனுமதி வாங்கி தரணும்,'' என்றாள் சின்னி.'தெரியாம தான் கேக்குறேன்... உங்க ஊர் மகாராணியை பாக்குறதுக்கு சிபாரிசு எதுக்கு... நீங்களே அரண்மனைக்கு போய் பார்க்க வேண்டியது தானே' என்றனர்.''உங்கள போல பெரிய மனிதர்கள் சிபாரிசு இல்லாம, நாங்க எப்படி அரண்மனைக்குள் நுழைய முடியும்... எதற்கும் கொடுப்பினை வேண்டாமா...'' என்று வருத்தத்துடன் கூறினாள்.'கட்டாயம் அரசனை சந்தித்து, உன் விருப்பத்தை தெரிவிக்கிறேன். உனக்கு கொடுப்பினை இருந்தால், அரசி இந்துஜாவே இங்கு வரலாம் அல்லவா...' என்று கூறி விடை பெற்றனர்.துஷ்யந்த மகாராஜாவும், மந்திரி ராஜேந்திரனும் தான் மாறுவேடமணிந்து வந்திருந்தனர். தங்கள் ராஜ்ஜியத்திலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று, மக்களின் குறைகளை கேட்டு அறிந்து, உரிய நிவாரணம் அளிப்பர். இந்த மாறுவேஷ நபர்களை யாரென்றே அறியாத அம்மக்கள் மனம் திறந்து தங்கள் நிறை, குறைகளை கூறுவர்.சிறிது தூரம் சென்றதும், ''மன்னா! ஏன்னென்று புரியவில்லை. சற்றும் யோசிக்காமல், எப்படி இந்த கிராமத்திற்கு வந்தோம்... அதுவும், என்ன ஒரு அரச பக்தி! இதை போன்ற மாசற்ற குடிமகன்களை ஆள்வதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த பெண்ணை நினைத்து என் மனம் மிகவும் கலங்குகிறது!'' என்றார் மந்திரி.''என்ன சொல்கிறாய் ராஜேந்திரா...'' அதிர்ந்தார் மன்னர்.''ஆம் மன்னா! இன்று காலை அந்தப்பெண்ணை சந்தித்த நேரம்; நாம் அமர்ந்திருந்த இடம்; திசை அனைத்துமே, ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்பது, என் முன்னோரின் கருத்து, ''நம்மை நல்லவிதத்தில் உபசரித்து, நல்ல உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், வயல் வரப்புகளை தாண்டி குதித்தபோது, ஓரத்திலிருந்த பாம்பு முட்டைகளை அவள் கவனிக்கவில்லை. அழுத்தமான கால்கள் பட்டு, அத்தனை முட்டைகளும் உடைந்துவிட்டன. ''அவள் அவசரம் அவளுக்கு, அந்த அம்மா பாம்புக்கு தெரியவா போகிறது... 'என் குடும்பத்தை முற்றிலுமாக அழித்தாய் அதற்கு உண்டான கூலியை, நீ கட்டாயம் கொடுக்க தான் வேண்டும்; நான் கொடுக்க வைப்பேன்...' என்று சாபம் விட்டது அந்த நாகம்.''''ராஜேந்திரா... நீ சொல்வதை கேட்க மனது மிகவும் கஷ்டப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், திடீரென இன்று நாம் செல்ல வேண்டிய கிராமத்திற்கு செல்லாமல், ஏன் இங்கே வந்தோம்... எனக்கும் ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக இது விதி செய்த சதி தான்,'' என்று சொல்லி, தன் மேலங்கியை சரி செய்ய முயன்ற போது தான், இடது கை விரலில் அணிந்திருந்த, ராஜ லச்சினை மோதிரத்தை காணோம் என்பதை கவனித்தார் மன்னர்.'என் மோதிரத்தை காணவில்லையே' என்று பதறினார்.''மன்னா! அந்த பெண்ணின் சுறுக்கு பையில், ஒரு கட்டு பணத்தை வைத்து, மூடினீர்கள் அல்லவா... அப்போது, அந்த மோதிரம் அப்பையில் தஞ்சமடைந்திருக்கும்!''''ஏன் அலட்சியமாக பேசுகிறாய் ராஜேந்திரா... ராஜ லச்சினை பதித்த மோதிரம், அவளிடம் இருப்பது நல்லதல்ல என்பது உனக்கு தெரியாதா?''''என்ன கேள்வி மன்னா கேட்கிறீர்கள்... மிக முக்கியமான லச்சினை மோதிரம், தன்னிச்சையாக இடம் பெயர்ந்து இருக்கிறதென்றால், ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில், இந்த அரண்மனை மிகப்பெரிய கொடூர சிக்கலில் மூழ்கி தவிக்க போகிறது. ''அந்த இருண்ட நேரத்தில், அந்த மோதிரம் இங்கு இல்லாமல் இருப்பதே நலம் அல்லவா... ஆகையால் தான், இந்த லச்சினை மோதிரத்தின் உரியவன் யாரோ, அவன் வசிக்கப்போகும் இடத்திற்கு, முன் கூட்டியே போய் சேர்ந்து விட்டது மன்னா... இதுவும் ஒரு நல்ல சக்திக்கு அறிகுறி அல்லவா...''''எதிர் காலத்தை மிக துல்லியமாக கணிப்பதில், நீர் நிபுணன் என்பது எனக்கு தெரியும். உன் கணக்கு தப்பவே தப்பாது. ஆயினும், இந்த நேரத்தில், என்னை நீ மிகவும் குழப்புகிறாய். உண்மையை சற்று விளக்கமாக கூறு,'' என்று, இருவரும் பேசிக்கொண்டே சென்றதில், அரண்மனை வாயிலை, நெருங்கி விட்டதை அப்போது தான் உணர்ந்தனர்.சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு, அரண்மனைக்குள் நுழைய முற்பட்ட போது, ''யாரப்பா நீங்கள், என் உத்தரவின்றி உள்ளே நுழைகிறீர்கள்?'' என்று அதட்டினான் காவல் காரன்.சட்டென்று கரம் கூப்பி, 'ஐயா காவற்காரரே! தயவு செய்து மன்னித்து விடுங்கள். நாங்கள் பக்கத்து நகரத்திலிருந்து வருகிறோம். எங்கள் தலைவன், மன்னருக்கு மிக அவசரமான செய்தி ஒன்று அனுப்பி உள்ளார். தயவு செய்து எங்களை உள்ளே அனுமதியுங்கள்...' என்று, மிக கனிவாக கேட்டனர் இருவரும்.''சரி... நீங்கள் யார்; உங்கள் பெயர் மற்றும் விவரம் சொல்லுங்கள்...'' என்று கேட்டான் காவல்காரன்.'இது என்னடா தர்மசங்கடம்... என்ன சொல்லி இவனை சமாளிப்பது' என்று குழம்பி கொண்டிருக்கையில், இவர் களின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களை கண்டு ஓடி வந்தாள் மைத்ரேயி.- 2 தொடரும் ...