உள்ளூர் செய்திகள்

ரோசாப்பூ!

சிலமலை என்ற ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு என்று சொந்தமாக இருந்தது கோவணமும், ஒரு பிச்சைப் பாத்திரமும்தான். அவர் குடிசை ஒன்றில் தங்கி இருந்தார்.அந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் காண வருவர். கண்ணீர் மல்க அவர் திருவடிகளைத் தொட்டு வழிபடுவர். அவரும், அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்து வந்தது.துறவிக்குக் கிடைத்த மரியாதையைக் காண அந்நாட்டு படைத் தலைவருக்குப் பொறுக்கவில்லை.'என் கீழ் ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளனர். எல்லாருமே இந்நாட்டைக் காப்பதற்காக உயிரை இழக்கத் திண்ணமாக உள்ளனர். மாவீரனான எனக்குக் கிடைக்காத மரியாதையை, பிச்சை எடுத்து உண்ணும் ஒரு துறவிக்குக் கிடைப்பதா' என்று நினைத்தான்.ஒருநாள் மாலை நேரம் துறவியைச் சந்தித்த அவன் தன் உள்ளக் குமுறலை அவரிடம் கொட்டினான். ''நாட்டு மக்கள் உமக்கு அதிக மதிப்புத் தருகிறார்களே இது நியாயமா?'' என்று கோபமாக கேட்டான்.புன்முறுவல் பூத்த துறவி அவனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பல வகையான வண்ணப் பூக்கள் பூத்திருந்தன. வானத்தில் முழு வெண்ணிலா ஒளி வீசிக் கொண்டிருந்தது.நிலாவை அவனிடம் காட்டிய அவர், ''அது என்ன?'' என்று கேட்டார்.''நிலா!'' என்று சொன்னான் அவன்.செந்நிறமாகப் பூத்திருந்த ரோசாப் பூவைக் காட்டி, ''இது என்ன?'' என்று கேட்டார்.''ரோசாப்பூ,'' என்றான்.''அன்பனே! இந்த ரோசாப்பூ எப்போதாவது அந்த நிலவைப் போலத் தன்னால் ஒளி வீச முடியவில்லை என்று வருந்தியது உண்டா அல்லது அந்த நிலாதான் இந்தப் பூவைப் போல இனிய மணம் தனக்கு இல்லையே? என்று வருந்தியது உண்டா? அடுத்தவரோடு ஒப்பிட்டு, நம் மகிழ்ச்சியை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.கண் கலங்கிய படைத் தலைவன், ''துறவியாரே! என்னை மன்னியுங்கள். என் அறிவுக் கண்கள் திறந்து விட்டீர்கள்,'' என்று சொல்லி அவரிடம் விடை பெற்றான்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !