புகையை பகையாக்கு!
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1957ல், 7ம் வகுப்பு படித்தேன்.அன்று காலை கணக்கு வகுப்பு துவங்கும் முன், ஆசிரியர் எட்வர்ட், 'சிகரெட் வாங்கி வா...' என, 'ஒரு அணா' கொடுத்தார். அதை வாங்கி வர பள்ளி அருகே பெட்டிக்கடையில் நின்றிருந்தேன்.அந்த வழியாக வந்த தமிழாசிரியை சண்முகவடிவு, 'இந்த வயதிலே சிகரெட் பிடிக்கிறாயா... உன் அப்பாவிடம் சொல்கிறேன்...' என கண்டிப்பை காட்டினார். பயத்துடன் உண்மையை எடுத்துக் கூறினேன். ஆசிரியர்களின் ஓய்வு அறைக்கு என்னை அழைத்து சென்று விசாரித்து அதை உறுதி செய்து கொண்டார்.பின், அந்த ஆசிரியரிடம் நிதானமாக, 'சொல்வதை தப்பா நினைக்காதீங்க. சிறுவர்களை சிகரெட் வாங்க அனுப்பினால், காலப்போக்கில் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவர்...' என்று மென்மையாக எடுத்துரைத்தார். தவறை உணர்ந்து, அந்த செயலை கைவிடுவதாக உறுதி கூறினார் கணித ஆசிரியர்.அன்று மதிய வகுப்பு முடிந்ததும், என்னை அழைத்து, புகைப்பிடிப்பதால் வரும் தீமைகளை எடுத்துரைத்தார் தமிழாசிரியை. விளாத்திகுளத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் பற்றி, பேச வாய்ப்பு அளித்து, குறிப்புகளை தந்தார். அதை மனப்பாடம் செய்து மேடையில் பேசினேன். தொடர்ந்து பள்ளி சுதந்திர தின விழாவில் பேசி முதல் பரிசு வாங்கினேன். அதுபோல் பயிற்சிகள் தந்து ஊக்குவித்தார்.என் வயது, 82; அரிசிஆலை அதிபராக உள்ளேன். பிரபல தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறேன். இதழ்களில், கவிதை, துணுக்கு, தமாசுகள் எழுதி வருகிறேன். இதுபோன்ற திறமைகள் வெளிப்பட, பயற்சி தந்த தமிழ் ஆசிரியையை போற்றி வணங்குகிறேன்.- என்.கிருபாகர், துாத்துக்குடி.தொடர்புக்கு: 86082 22025