விஞ்ஞானி (2)
ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியர் தனக்கு முன்னால் நின்ற மாணவனைப் பார்த்துக் கோபத்தோடு கேட்டார்.''ராபர்ட்! நீ லத்தின் மொழியில் மிகமிகப் பின் தங்கியிருக்கிறாய். அதைக் கற்றுக் கொள்வதில் போதிய ஆர்வமும் காட்ட வில்லை. ஏன் இப்படி இருக்கிறாய்? படிப்பில் நீ மிகவும் கெட்டிக்காரனாயிற்றே?'' என்று கேட்டார்.''சார்! நான் இனி மேலும் லத்தின் மொழியைப் படிக்க விரும்பவில்லை,'' என்றான் ராபர்ட் .''என்ன சொன்னாய்? லத்தீன் படிக்க விரும்ப வில்லையா? அது எவ்வளவு பழமையான மொழி! உயர்ந்த கருத்துக் களும், இலக்கியங்களும் அந்த மொழியில் நிறைய உண்டு. அதை ஏன் படிக்க மாட்டேன் என்கிறாய்?'' என்று மீண்டும் கேட்டார் தலைமையாசிரியர்.''இருக்கட்டுமே! அதையெல்லாம் யாராவது மொழி பெயர்த்துச் சொன்னாலே தெரிந்து கொண்டு விடுவேன். அதற்காக, வாயில் நுழையாத அந்த மொழியைச் சிரமப்பட்டுப் படிக்க வேண்டுமா என்ன?'' என்றார் ராபர்ட் துணிச்சலோடு.''லத்தீன் மொழியையே நீ வேண்டாம் என்கிறாய். ஆனால், விரைவிலேயே நீ கிரேக்க மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டி யிருக்குமே?'' என்றார் தலைமையாசிரியர்.''கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்ளவும் நான் விரும்பவில்லை,'' என்றார் ராபர்ட் மிகவும் உறுதியுடன்.அதைக் கேட்ட தலைமையாசிரியருக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. ''கிரேக்க மொழியையும் படிக்கப் போவதில்லையா? அப்படியானால் அதற்குப் பதில் வேறு எந்த மொழியைத் தான் நீ படிக்கப் போகிறாய்?'' என்றார் தலைமையாசிரியர்.''நான் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். அந்த மொழியில் தான் விஞ்ஞான நூல்களும், கணித நூல்களும் நிறைந்துள்ளன. வாழ்க்கைக்கு அவசியமானவை விஞ்ஞானமும், கணிதமும்தான். வெறும் இலக்கியமும், கவிதையும் நிறைந்துள்ள லத்தீன் மொழி யையும், கிரேக்க மொழியையும் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?'' என்று திருப்பிக் கேட்டார் ராபர்ட்.தலைமையாசிரியர் திகைத்துப் போனார்.இறுதியில் அந்த மாணவர் தான் விரும்பியபடியே ஜெர்மன் மொழியை விருப்ப பாடமாக எடுத்துப் படித்தார். வையகமே புகழக் கூடிய விஞ்ஞானியானார். அந்த விஞ்ஞானி யார் தெரியுமா குட்டீஸ்...அந்த மாணவர் தான் ராடாரைக் கண்டு பிடித்த 'ராபர்ட் அலெக்சாண்டர் வாட்ஸன் வாட்' என்ற விஞ்ஞானி.