கடல் கன்னி நகரம்! (10)
மிகிரனையும், சிற்பிகாவையும் வேடிக்கை ஜந்துகளாக பார்த்தார் பயிற்சியாளர்.மிகிரனை, 'கறுப்பன்' என்றும், சிற்பிகாவை, 'சுண்டெலி' எனவும் அழைத்து, ''சாய் வேலுக்காஸ் நல்லா ஏமாந்திருச்சு... ஒண்ணுத்துக்கும் ஆகாத, உங்களுக்கு எல்லாம் முட்டாள் தனமாக, 'ஸ்பான்சர்' செய்யுதே...'' என்றார்.கோபம் கொள்ளாமல், கிண்டல்களை வெகுவாக ரசித்த மிகிரன், ''கோச்... இன்னும் எங்க இதயத்துல ரத்தம் பீறிட்டு வரமாதிரி கிண்டல் செய்யுங்க. அந்த ரணம் தான், எங்களை வெற்றியை நோக்கி நகரச் செய்யும்...'' என்றான்.சக வீரர்களின் நீச்சல் உபகரணங்களை நீச்சல்குள பகுதிக்கு எடுத்து வந்து, முடிவுற்றதும், மீண்டும் திருப்பி எடுத்துச் சென்று சேர்க்கும் பணியை மிகிரனுக்கு அளித்தார் பயிற்சியாளர்.நீச்சல் புத்தகத்தில், வீரர்களின் தினசரி வேக செயல்பாடுகளை ஒப்பிட ஆரம்பித்தார் பயிற்சியாளர். ஒரு மாதத்துக்கு பின், மிகிரனின், 100 மீட்டர், 'ப்ரீ ஸ்டைல்' நீச்சல் நேரத்தைப் பார்த்தார்.ஜன., 08, 2022 - 54:00 நொடி.ஜன., 15, 2022 - 52:00 நொடி.ஜன., 22, 2022 - 51:00 நொடி.ஜன., 29, 2022 - 49:50 நொடி.புத்தகத்தை எட்டி பார்த்தபடி, ''என்ன கோச்... என் பயிற்சியில் ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...'' என்றான் மிகிரன்.''எட்டி பார்க்காதே... தள்ளி நில்லு...'' ''முன்னேற்றம் இருக்கா... இல்லையா...''''வரும் கோடை ஒலிம்பிக்ஸ், பிரான்ஸ் நாட்டில், 2024ல் நடக்க இருக்கிறது. இதே வேகத்தில், நீ நீந்தினால், ஒலிம்பிக் சமயத்தில், 46:00 நொடியில், 100 மீட்டர், 'ப்ரீ ஸ்டைல்' நீச்சலை கடப்பாய். இது போதாது...''''இன்னும், ஆறே மாதத்தில், 45:00 நொடியில் இலக்கை எட்டுவேன். எனக்காக இல்லா விட்டாலும், உங்கள் கடின உழைப்புக்காவது நான் ஜெயிக்க வேண்டும்...''அதை கேட்டதும், சற்று மனம் இளகினார் பயிற்சியாளர்.''நீ ஜெயித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்டா...''பையில் இருந்து, எதையோ எடுத்தான் மிகிரன்.''என்னடா... பைக்குள், துப்பாக்கி ஒளிச்சு வெச்சுருக்கீயா... எப்போ பார்த்தாலும், கிண்டல் செய்றேன்னு, சுடப் போறீயா...''பைக்குள் இருந்ததை எடுத்து பயிற்சியாளர் முன், நீட்டினான் மிகிரன்.''என்னடா... இது...''''கோவில்பட்டி கடலை மிட்டாய்; கணேசன் மாஸ்டர் அனுப்பி வெச்சுருக்காரு; இதை சாப்பிட்டு பாருங்க. சுவையா இருக்கும்...''''இதை போயா நான் தின்பேன்...''''சென்னையில் விற்கப்படும் எந்த இனிப்பும், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு ஈடாகாது. வேண்டுமென்றால், ஒரு கடி கடிச்சுப் பாருங்களேன்...''ஒரே துண்டை மட்டும் எடுத்து, வேண்டா வெறுப்பாய் வாய்க்குள் போட்டார் பயிற்சியாளர். தேனாய் கரைந்தது.''ஆமாம்... நல்லா தான் இருக்கு...''''அப்படியா... நீங்களே சாப்பிடுங்க கோச்...''''உங்க இருவருக்கும் வேண்டாமா...''''நீங்க சாப்பிட்டால், நாங்க சாப்பிட்ட மாதிரி...''கடலை மிட்டாய்களை விரும்பி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தபடி, ''கடலை மிட்டாய் கொடுத்ததற்காக, உன்னை கொஞ்ச மாட்டேன்...'' என்றார் பயிற்சியாளர்.''உங்க கேலியும், கிண்டலும் எனக்கான கிரியா ஊக்கிகள்...'' என்றான் மிகிரன்.தினமும், ஆறு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொண்டான். வாரத்தில், நான்கு நாட்கள், நள்ளிரவில், தன்னந்தனியாக நீச்சல் பயிற்சியும், கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்தான். அதைப் பார்த்து, கிண்டலடித்த சிற்பிகா, ''என்னடா... பிசாசு மாதிரி, நடுராத்திரியில் நீச்சல் அடிக்குற... ஏதாவது, ஏடா கூடம் ஆகிடப் போகுது...'' என்றாள்.''ஒண்ணும் ஆகாது... எல்லாமே நல்லதுக்கு தான்...''நான்கு மாதங்களுக்கு பின் -பயிற்சியாளரிடம் சென்றான் மிகிரன்.''என்னடா மிகிரன்...''''உங்களிடம் ஒன்று கேக்கணும்...''''என்ன விஷயம்...''''இன்று, என்னை மட்டும் தனியா, 100 மீட்டர் நீச்சல் செய்ய அனுமதிங்க. எவ்வளவு நேரம், எடுத்துக்குறேன்னு பாருங்க...''தலையசைத்தார் பயிற்சியாளர்.அவர் பாதம் தொட்டு ஆசி பெற்றான்.சக வீரர்கள், நீச்சல் குளத்தை சுற்றி நின்றனர்.''அசத்துடா...'' என மிகிரனை கை குலுக்கி வாழ்த்தினாள் சிற்பிகா.நிறுத்தல் கடிகாரத்துடன் தயாரானார் பயிற்சியாளர்.நீச்சலை ஆரம்பித்தான் மிகிரன்.நிறுத்தல் கடிகாரம் இயங்கியது.நொடிகள் கரைய ஆரம்பித்தன. மிகிரனின் நீண்ட கைகளும், உரமேறிய கால்களும் அதிவேகமாக செயல்பட்டன. மிகத்துல்லியமாக, 44:94 நொடிகளில், 100 மீட்டர் நீச்சலை முடித்தான் மிகிரன். பயிற்சியாளரும், சக வீரர்களும் கை தட்டி பாராட்டினர். மிகிரனின் நீச்சலைப் பார்த்து, கடல் கன்னியர் கை தட்டி ஆரவாரித்தனர்.- தொடரும்...- ஆர்னிகா நாசர்