தங்கையைத் தேடி!
கேரள நாட்டில் நாராயண நம்பூதிரி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரும் பணக்காரர். கடல் வாணிபம் செய்து மதிப்போடு வாழ்ந்தார். அவருக்கு மகேஷ், வினோதினி என இரு குழந்தைகள். இருவரின் மீதும் அவர் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.மகேஷ் தன் தங்கைமீது உயிரையே வைத்திருந்தான். அண்ணாவுக்கு மட்டுமல்லாமல், அப்பாவுக்கும் வினோதினி செல்லம். அவள் எதை விரும்பினாலும் உடனே அவள் அண்ணாவும், அப்பாவும், நிறைவேற்றி வைப்பர்.வினோதினிக்கு பிறந்தநாள் வந்தது. அவள் தோழிகளுடன் அதைக் கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டாள். தடை ஏதும் சொல்லவில்லை மகேஷ்.அன்று மாலை வினோதினி தோழிகள் சிலரையும் ஏற்றிக்கொண்டு தங்களுக்கு சொந்தமான படகில் உல்லாசமாக பயணம் போயினர். படகை மகேஷ் ஓட்டினான். ஒரே கோலாகலம், கும்மாளம், சிரிப்பு. நாலைந்து பெண்கள் சேர்ந்து விட்டால் கேட்கவா வேண்டும்?உப்பங்கழியிலிருந்து கடலுக்கு வந்து விட்டது படகு. ''இதற்குமேல் போக வேண்டாம் திரும்பிவிடலாம்,'' என்றான் மகேஷ்.ஆனால் பெண்கள் உற்சாக மிகுதியால், ''இன்னும் கொஞ்ச தூரம் போகலாம். மேலைக் கடலுக்குள் விழும் சூரியனின் அழகை ரசிக்க வேண்டும்'' என்று, விரும்பினர்.அவர்கள் ஆசைக்கு இணங்கினான். படகு முன்னேறியது.திடீரென மந்திரத்தினால் உருவானது போல தூரத்தில் ஒரு கப்பல் தோன்றியது. மகேஷுக்கு பகீரென்றது. அது கொள்ளைக் கப்பல்! இவர்கள் படகை நோக்கித்தான் வெகு வேகமாக வந்து கொண்டிருந்தது. துடுப்புப் போட அந்தக் கப்பலில் நிறையபேர் இருந்தனர். ஆனால், மகேஷின் சின்னப் படகிலோ, அவனையும் இருபடகோட்டிகளையும் தவிர வேறு ஆண்களே கிடையாது.ஆபத்தை உணர்ந்த பெண்கள் பீதியினால் அலறினர். படகில் ஒரு பக்கமாகப் போய் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். இதனால் அந்தச் சின்னப் படகு நிலை குலைந்து தடுமாறியது.அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறினான் மகேஷ். ஆனால், அது பயன்படவில்லை. கொள்ளையர்களின் கப்பலோ சமீபித்துக் கொண்டிருந்தது.இதற்குள் பீதியடைந்த பெண்களின் கூச்சலைக் கேட்டோ அல்லது தற்செயலாகவோ மீன்பிடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த செம்படவர்கள் தங்கள் கட்டு மரத்தை, படகின் பக்கமாகத் திருப்பினர். அவர்களுமே கொள்ளைக் கப்பலைக் கண்டு கலங்கித்தான் போயினர். கிலிகொண்ட பெண்கள் படகிலிருந்து கடலில் குதித்து விட்டனர். ஒரு பீரங்கி வெடியுடன் கொள்ளைக் கப்பல் கடலில் விழுந்து தத்தளித்த பெண்களில் சிலரைத் தூக்கிப் போட்டுக் கொண்டு, வந்த வேகத்துடனேயே திரும்பிவிட்டது.மகேஷ் மீனவர்களின் உதவியுடன் நீரில் விழுந்த பெண்களைப் படகில் ஏற்றினான். ஆனால், அவனுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. அவன் அன்புத் தங்கையும், அவன் உயிர்த் தோழி அம்பிகாவையும் காணவில்லை. அப்படியே இடிந்து போனான் மகேஷ்.அப்போது கட்டுமரத்து மீனவர்களில் சிலர் ஒரு மனிதனைப் பிடித்துவந்து மகேஷிடம் ஒப்படைத்தனர். கொள்ளைக் கப்பலில் வந்தவர்களில் ஒருவன் அந்த மனிதர்.படகிலிருந்து பெண்களைக் கடத்துவதற்காக ஏவப்பட்டவரில் ஒருவன். என்ன காரணமோ இவன் அவர்களோடு திரும்பிப் போகவில்லை அல்லது தவறுதலாக அவசரத்தில் அவர்கள்தான் இவனை மறந்து விட்டுப் போனார்களோ தெரியவில்லை. அவனைக் கரைக்குக் கொண்டுவந்து விசாரித்த போது, தான் கொள்ளைக் கப்பல் ஆள்தான் என்பதை ஒப்புக்கொண்டான். குடி போதையில் இருந்ததால் தன் சகாக்களோடு ஓடிப்போவதற்கான நிதானமிழந்து போனதால் மாட்டிக் கொண்டிருக்கிறான். இரண்டு அழகிகளைக் கப்பலில் கடத்துவதற்குத் தான் உதவியதாகவும் ஒப்புக் கொண்டான் அவன்.நாராயண நம்பூதிரி நடந்ததைக் கேள்விப் பட்டு அப்படியே மூர்ச்சையானார். மகேஷின் நிலைமையோ சொல்லவேண்டியதில்லை. அருமைத் தங்கையோடு கடத்தப்பட்ட அம்பிகா, அவன் வருங்கால மனைவியாக வேண்டியவள். இதை அவன் தன் தந்தையிடம் கூறவில்லை. காரணம், அம்பிகா கவுரவமான குடும்பத்துப் பெண்ணானாலும் ஏழை. தன் தந்தை அம்பிகாவை ஏற்கமட்டார் என்று மகேஷுக்கு தெரியும். தக்க சமயம் பார்த்து அவர் மனதை மாற்றி சம்மதிக்கச் செய்ய நினைத்திருந்தான். அதற்குள் இப்படியாகி விட்டது.நாராயண நம்பூதிரி மயக்கம் தெளிந்து எழுந்ததும் மகேஷை அழைத்தார். அவன் நடுங்கிக் கொண்டே அவர் முன் குனிந்த தலையோடு போய் நின்றான் .''உன்னுடைய அஜாக்கிரதையினால்தான் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் சொன்னால் நீ கடலில் அவ்வளவு தூரம் போகலாமா? வயதான காலத்தில் என் அமைதியையும், மகிழ்ச்சியையும் பாழாக்கி விட்டாயே... என் பார்வையில் படாதே போய்விடு. என் முகத்திலேயே விழிக்காதே. வினோதினியை தேடிக்கொண்டு வந்தால் தான் இந்த வீட்டுக்குள் நீ வரலாம். இல்லாவிடில், இங்கு உனக்கு இடமில்லை. நீ என் மகனுமில்லை,'' என்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.பாவம் மகேஷ் நேற்று எவ்வளவு சந்தோஷமாக இருந்தான். இன்று எத்தனை வேதனை. தந்தை கூறுவதற்கு முன்பே அவன் வினோதினியையும், அம்பிகாவையும் தேடிக் கண்டுபிடிக்க கிளம்புவதாகத் தானிருந்தான். இப்போது தந்தையின் கோபம் அவனுள் ஒரு ஆவேசத்தையே உண்டாக்கிவிட்டது.''உங்களுக்கு வினோதினி அருமை மகள். எனக்கு அருமைத் தங்கை. வேதனை துக்கம் இருவருக்கும் ஒன்றுதான். உங்கள் விருப்பப்படியே வினோதினியுடன் வருவேன். இல்லாவிடில் மடிவேன்,'' என்று கூறிவிட்டு வெளியேறினான் மகேஷ்.மகேஷோடு, நீங்கள் வினோதினியை தேடக் கிளம்பு முன், கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.இது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். அப்போது அராபியர்களும், ஐரோப்பியரும் கப்பல்களில் நம் பாரதத் துக்கு வியாபாரம் செய்ய வந்து கொண்டி ருந்த காலம். 'பைரேட்ஸ்' எனப்படும் கடற் கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் உச்ச நிலையிலிருந்த நேரம். முக்கியமாக அராபியக் கடற்கொள்ளைக் காரர்களுக்கும், டச்சு, ஸ்பானிஷ் கொள்ளைக் காரர்களுக்கும் பலத்த போட்டி இருந்த காலம்.மலபார் எனப்படும் கேரளக் கடற்கரை இவர்களது இலக்காக இருந்தது. அராபியர் களில் சிலர் கேரள நாட்டிலேயே நிரந்தர மாகத் தங்கி ஒரு புதிய பரம்பரையை உருவாக்கியது இந்தக் காலகட்டத்தில்தான். கடல் போரில் சேர நாட்டினரான கேரள மக்கள் வல்லவர்கள்.நாராயண நம்பூதிரி ஒரு குறு நில மன்னரைப் போன்றவர். பெரும் செல்வந்தர். அரண்மனை போன்ற வீடு. கடல் வாணி பத்தில் புகழ் பெற்றவர். இவருடைய சரக்குக் கப்பல்கள் பல அராபிய கடல் கொள்ளைக் காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக் கிறது. இப்போதோ அவருடைய அழகு மகளையே கடத்திக்கொண்டு போய் விட்டனர்.கைதியாகி இருந்த கொள்ளைக் கப்பலை சேர்ந்த அந்த ஆளிடம், கப்பலைப்பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக மகேஷ் போனான்.சூரத் கடற்கரைப் பட்டினத்துக்கு அந்தக் கப்பல் போய்க் கொண்டிருக்கிறதென்றும், அடிமைச் சந்தையில் விற்பதற்காகவே அந்தக் கப்பலில் இப்படிப் பல பெண்கள் கடத்தப் பட்டிருப்பதாகவும் கூறினான் அந்தக் கைதி.மகேஷ் அம்பிகாவின் பெற்றோரிடம் போய், ''அம்பிகாவை நான் எப்படியும் மீட்டு வருவேன். கவலைப் படாதீர்கள்,'' என்று ஆறுதல் கூறிவிட்டுத் தன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யக் கிளம்பினான்.-1 தொடரும்.