ஒளி வாங்கும் கிராமம்!
குளிர் காலத்தில் தட்ப வெப்ப நிலையை சீராக்கி காத்துக் கொள்ள மறையாத சூரியனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது ஒரு கிராமம். பூமியில் உயிரினங்கள் வாழ்வுக்கு சூரிய ஒளி மிக முக்கியம். குளிர் காலத்தில் வெப்பத்தை எதிர்பார்ப்பது இயல்பு. கடும் குளிர் காலத்தில் தப்பிக்க தீர்வை கண்டுபிடித்துள்ளது விக்னெல்லா கிராமம். இது ஐரோப்பிய நாடான இத்தாலியில், சுவிட்சர்லாந்து நாட்டின் அருகே உள்ளது. இங்கு, 13ம் நுாற்றாண்டில் குடியேற ஆரம்பித்தனர் மக்கள். நவம்பர் 11 முதல், பிப்ரவரி 2ம் தேதி வரை, சூரிய ஒளி மிகக் குறைவாக இருக்கும். அண்டார்டிகாவில் வசிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதனால் வாழ்வது மிகவும் சிரமமாக இருந்தது. இதற்கு தீர்வு காண வழி தேடினர் மக்கள். ஊர் அருகே உள்ள மலையில் பிரமாண்ட கண்ணாடி அமைக்கலாம் என்ற திட்டம் உருவானது. அதன்படி, 2005ல் பணி துவங்கியது.கிராமத்தின் அருகே மலையில், 1,100 மீட்டர் உயரத்தில், 40 சதுர மீட்டர் அளவுள்ள கண்ணாடி நிறுவப்பட்டது. குறைந்த அளவிலான சூரிய ஒளி அந்த கண்ணாடி மீது பட்டு கிராமத்தில் எதிரொளிக்கிறது. இதனால் முழுமையாக சூரிய ஒளி விழுகிறது. பிரச்னைக்கு தீர்வு கண்ட விதம், உலகுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.- வி.பரணிதா