அலை ஓசை!
சென்னை, திருவல்லிக்கேணி, ஹிந்து உயர்நிலைப்பள்ளியில், 1963ல், 9ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியராக இருந்தார் பாஷ்யம் அய்யங்கார். வகுப்பறையில் கடைசி பெஞ்சில் தான் உட்கார்ந்திருப்பேன். பாடம் நடத்துவதை கவனிக்காமல் மனம்போன போக்கில் விளையாடி கொண்டிருப்பேன். என்னை திருத்த பல்வேறு வகையில் முயற்சிகள் எடுத்தார் வகுப்பாசிரியர். அவற்றுக்கு பயனில்லாதபோது கோபத்தில், 'சத்தியமா சொல்றேன்... நீ மட்டும் இந்த வருடம் பாஸ் பண்ணிட்டே, அந்த சமுத்திரமே இங்கே வந்து கரையேறிடும்...' என்றார். அந்த சொற்கள் மனதை உறுத்தியது. கவனம் செலுத்தி கற்று ஆண்டு இறுதித்தேர்வை எழுதினேன்.கோடை விடுமுறையில் அன்று தெருவில், 'ஏழாங்கல்' விளையாடிக்கொண்டிருந்தேன். உடன்படித்த ராஜசேகர் அரக்கப் பரக்க என் முன்னே வந்தான். மூச்சிறைக்க, 'நான் பாசாயிட்டேன்... உன்னோட ரிசல்டை பார்க்கல...' என்று கூறி ஓடிவிட்டான். ஒரு கணம் நின்ற இதயம் மறுபடி வேலை செய்ய மறந்தது. தலை தெறிக்க ஓடி பள்ளி வளாகத்தில் நுழைந்து, இரண்டாம் மாடியில் ஏறினேன். தேர்வு முடிவு ஒட்டியிருந்த அறிவிப்பு பலகையை சுற்றி நின்ற கும்பலை, முழங்கையால் இடித்து விலக்கி, பரபரப்புடன் தேடிப்பார்த்தேன். தேர்வு பட்டியலில் என் பெயரை கண்டதும் தான், மூச்சு முறையாக வர ஆரம்பித்தது. தற்போது என் வயது, 76; தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். பின், சொந்தமாக சிறுதொழில் நிறுவனம் நடத்தி, 10 பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளேன். தற்போது கடற்கரையில் நடைபயிற்சிக்கு பேத்தியுடன் தவறாமல் செல்கிறேன். அங்கு அலைகளை காணும் போது, வகுப்பாசிரியர் பாஷ்யம் அய்யங்கார் எனக்கு விடுத்த சவால் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்களை எண்ணி குழந்தை போல் சிரித்து மகிழ்கிறேன். - ஜி.சுவேதாரண்யம், சென்னை.தொடர்புக்கு: 98416 67942