உள்ளூர் செய்திகள்

பட்டாம்பூச்சி!

தேனீ போல் வனவளம் காக்க உதவுகிறது பட்டாம்பூச்சி. வண்ணத்து பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உயிரினம் இல்லாவிடில் பூ, காய் ஆகாது. காய் இன்றி கனி இல்லை; கனியின்றி விதையில்லை. மொத்தத்தில் வனவளமே இல்லாமல் போய்விடும். உலகில், 20 ஆயிரம் வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அண்டார்டிக் தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் வாழ்கிறது. ஒரு ஆண்டு வரை உயிர் வாழும் இனங்களும் உள்ளன. நிறம், உடலமைப்பு, அளவு அடிப்படையில் பட்டாம் பூச்சிகள், பாபிலோனிடி, பிளாரிடாவில், நும்பலிடி, லைகேனேடி, ஹஸ்பிரிடி என வகைப்படுத்தப் பட்டுள்ளன. பட்டாம் பூச்சியின் வாழ்க்கை...முட்டை இளம் புழுகூட்டுப்புழுவண்ணத்து பூச்சி என நான்கு பருவங்கள் உடையது.இறகுகள் வெளிர் நிறத்தில் மிக மெலிதாக இருக்கும்; அதன் துணையால் வேகமாக பறக்க இயலும். மலரில் உள்ள தேன் தான் உணவாக உள்ளது. இதற்கு சுவாசிக்க நுரையீரல் கிடையாது.வண்ணத்துபூச்சி 1 மணி நேரத்தில், 30 கி.மீ., துாரம் வரை பறக்கும் ஆற்றல் உடையது. இறக்கையை முதல்முறை விரிப்பதற்கு, சில மணி நேரம் எடுத்து கொள்ளும். உடலுக்குள் ரத்தம் பாய்வதற்கும், இறக்கை உலர்வதற்கும் தான் இந்த அவகாசம். வண்ணத்து பூச்சி காலை, 10:00 முதல், 11:00 மணி வரை சுறுசுறுப்பாக இயங்கும். கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சூரிய ஒளியை தடுக்கும் வகையில் சிறகுகளை ஒருவகை கோணத்தில் மாற்றி அமைத்து பறக்கும். மழைக் காலத்திற்கு முன், இருப்பிடத்தை விட்டு வெளியேறி விடும். வண்ணத்து பூச்சியின் இறக்கை நீரை கிரகிக்காது. எவ்வளவு சூரிய ஒளியையும் தாங்கும். மழை பெய்யும் போது செடிகளின் அடியில் பதுங்கிக் கொள்ளும். பனி காலத்தில் குகை, அடர்ந்த மர இலைகளின் பின் பகுதியில் வாழும்.மழை காலத்திற்கு முன், வண்ணத்து பூச்சிகள் வலசை செல்லும். அப்போது வாழ்வு ஒரு வழிப்பாதையில் முடிந்து விடும். அதன் வாரிசு, அதே பாதையில் திரும்பி புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும். உணவு, இனப்பெருக்கம், தட்ப வெப்ப நிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு வலசை பாதை அமையும். இது அற்புத நிகழ்வாக அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.உலகம் முழுதும், பல கோடி வண்ணத்து பூச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இவற்றில் மொனார்க்கோ, பெயிண்ட் லேடி என்ற இன வகைகள் நீண்ட துாரம் பறக்கும் ஆற்றல் உடையது. அதில் மொனார்க்கோ, அமெரிக்காவில் புறப்பட்டு மெக்சிகோ செல்லும். இரண்டு வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்து மற்ற உயிரினங்களுக்கு இரையாகும். பொதுவாக, பறவைகள் எந்தப் பூச்சியையும் சாப்பிடும். ஆனால், வண்ணத்து பூச்சியை வேட்டையாடுவதில்லை.மத்திய அமெரிக்காவில் மிக அரிதான கறுப்பு நிற பட்டாம்பூச்சி இனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு, 17ம் நுாற்றாண்டில் வாழ்ந்த விஞ்ஞானி மரியா சிபில்லா மெரியன் என்பவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சி பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து இரண்டு புத்தகங்கள் எழுதியவர் இந்த விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.- கோவீ.ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !