எல்லாம் நன்மைக்கே!
ஏழை குடும்பத்தில் பிறந்தான் ரகு. கூலி வேலைக்கு சென்றனர் பெற்றோர். அவனுக்கு தம்பி, தங்கை இருக்கின்றனர்.கிராமத்திலிருந்து, 2 கி.மீ., நடந்து பள்ளி சென்று வர வேண்டும். பேருந்து வசதி இல்லை.அரசு சலுகைகளால் 12ம் வகுப்பு வரை வந்து விட்டான்.குடும்ப கஷ்டம் உணர்ந்திருந்தான். பொதுத் தேர்விற்கு ஒரு மாதமே இருந்தது.அதிகாலையில் எழுந்து படிப்பான்; சிறிது நேரம் பெற்றோருக்கும் உதவுவான்.தம்பி, தங்கைக்கும் கற்பிப்பான்.வேதியியல் பாடம் என்றால் பிரியம். ஓய்வு நேரங்களில் வேதியியல் ஆசிரியருடன் தான் இருப்பான். அவ்வப்போது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவான். கல்லுாரியில் அதையே முதன்மை பாடமாக படிக்க விரும்பினான். அதேசமயம், கணக்கு பாடம் என்றால் சிறிது கஷ்டம்; அடிக்கடி அம்மாவிடம் சொல்லி புலம்புவான். நம்பிக்கை ஊட்டுவாள் அம்மா.முயற்சி செய்து கணக்குகளை பயிற்சி செய்து பார்ப்பான்.பொதுத் தேர்வு துவங்கியது.கணக்கு பாட வினாத்தாள் கடினமாக அமைந்திருந்தது. சுமாராக எழுதியிருந்தான்.அன்று குழப்பத்தில் இரவு முழுதும் சரியாக உறங்காமல் இருந்தான் ரகு.''எல்லாம் நன்மைக்கு என நினைத்து உறங்கு. முடிந்ததை எண்ணி கலங்காதே...'' ஆறுதல் கூறினாள் அம்மா.அடுத்தடுத்த தேர்வுகளை நன்றாக எழுதினான். முடிவுகள் மே கடைசி வாரத்தில் வெளி வந்தது. எதிர்பார்த்தது போல் கணக்கு பாடத்தில் மட்டும், 60 மதிப்பெண். வேதியியல் பாடத்தில், 90 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலாவதாக தேர்ச்சி பெற்றிருந்தான்.''எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கேன். ஆனால், கணக்கு பாடத்தில்...''அம்மாவிடம் கண் கலங்கினான் ரகு.''எல்லாம் நன்மைக்கு தான்...''வழக்கம்போல் கூறி தேற்றினாள் அம்மா.அரசு கல்லுாரியில், பி.எஸ்சி., சேர வேதியியல், இயற்பியல் மற்றும் கணக்கு பாடத்திற்கும் விண்ணப்பித்தான்.கணக்கு பாடத்தில் சேர அழைப்பு கடிதம் வந்தது.அம்மாவிடம் ஆலோசனை கேட்டான் ரகு.''நீ கேட்கும் பாடம் தனியார் கல்லுாரியில் உள்ளது; அங்கு சேர்ந்து படிப்பதற்கு வசதியில்லை; கணக்கில் சிறிது முயற்சி செய்து படித்தால், எல்லாம் நன்மையில் முடியும்...'' என்றாள் அம்மா.குடும்ப சூழலால், கணக்கு வகுப்பில் சேர்ந்தான் ரகு.கடினமாக உழைத்து, கல்லுாரி படிப்பை முடித்து வெளி வந்தான். வாடகை அறையில் தங்கி, மாணவர்களுக்கு காலையும், மாலையும், கணக்கு டியூஷன் கற்று கொடுத்தான். நன்றாக புரியும்படி, விளக்கமாக சொல்லி தந்ததால் நிறையப் பேர் படித்தனர்.''ஏம்ப்பா... நீ தான், கணக்கு பாடத்தை நன்றாக சொல்லி தருகிறாயே... ஏன் ஆசிரியர் பயிற்சியில் சேரக்கூடாது...'' கேட்டான் நண்பன் ஒருவன்.அது நல்ல யோசனையாக தென்பட்டது.''சரி... டியூஷன் எப்படி நடத்த முடியும்...''சந்தேகம் கேட்டான் ரகு.''டவுனில் இருக்கும் கல்லுாரியில் சேர்ந்திடு. அங்கேயே, வாடகைக்கு அறை எடுத்து தங்கு; மாணவர்களுக்கு காலை, மாலை டியூஷன் எடு; படிப்பு செலவுக்கு உதவும். வீட்டிற்கும் காசு சிறிது கொடுக்கலாம்...'' என்றான் நண்பன்.'எல்லாம் நன்மைக்கே' என்று அம்மா கூறிய வேதவாக்கு நினைவுக்கு வந்தது. அந்த வார்த்தைகள் வாழ்வில் வசந்தத்தை தந்தது.ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு பள்ளியில் கணக்கு ஆசிரியராக சேர்ந்தான். அம்மாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டான் ரகு.குழந்தைகளே... நற்செயல்கள் எப்போதும் நன்மைக்கு வழி வகுக்கும்!- ச.மணிவண்ணன்