உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (284)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 17; அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படிக்கும் மாணவன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. உணவு பொருட்களை விற்கும் பேக்கரியிலோ, வகுப்பறையில் தோழியர் டிபன் பாக்சிலோ, வீட்டில் டைனிங் டேபிளிலோ, 'பிரட்' உணவைப் பார்த்தால் வெறுப்பு ஏற்படுகிறது. எங்கு அதைக் கண்டாலும், 'உச்' கொட்டி வெறுப்புணர்வை வெளிப்படுத்துவேன். நோயாளிகளின் பத்திய உணவு தான், பிரட் என்ற எண்ணமே என்னிடம் மேலோங்கியுள்ளது. அரிசி சோற்றில் கருவாட்டுக் குழம்பு ஊற்றி, உருண்டை பிடித்து வாய்க்குள் தள்ளினால், செம ருசியாக இருக்கும். அரிசி உணவின் கால் துாசிக்கும் பெறாது பிரட் என்கிறேன். என் கருத்துக்கு சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.இப்படிக்கு,ஆர்.ராவணகுமார்.அன்பு மகனே...புளிப்பு ஊட்டப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகிறது, 'பிரட்' உணவு. இதை ரொட்டி என்றும் அழைப்பர். ரொட்டி உணவு தயாரிக்கும் பேக்கரி, துாய தமிழில் அடுமனை எனப்படுகிறது. நீ எண்ணுவது போல, 'ஏப்பை சாப்பை' உணவுப்பொருளல்ல பிரட். இதை, 14 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய கிழக்கில் உள்ள ஜோர்டான் வடகிழக்கு பாலைவன பகுதியில் தயாரித்ததற்கு தக்க ஆதாரம் கிடைத்துள்ளது. ஆதி காலத்தில் மக்கள் உண்டது தொல்லியல் சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மெருகூட்டப்பட்ட கற்கருவிகள் பயன்படுத்திய, 'நியோலித்திக்' காலத்தில் மக்களின் பிரதான உணவாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆப்ரிக்க கண்ட பகுதியில் எகிப்தியர் தான், தானிய மாவில், 'ஈஸ்ட்' கலந்து நொதிக்க வைக்கும் உத்தியை கண்டறிந்தனர். எகிப்து, கிரேக்கம், ரோம நாகரிகங்களில், அடுமனையில் ரொட்டி தயாரிக்கும் கலை சிறந்து விளங்கியதாக தொல்லியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளில் பிரதான உணவாக தற்போது திகழ்கிறது. தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில், அரிசியும், நுாடுஸ்சும் பிரதான உணவுகள். கோதுமை, மென்மா கோதுமை, அமர்த்தானியம், காட்டு கோதுமை, காமுத், கம்பு, வாற்கோதுமை, சோளம், இருங்கு, தினை மற்றும் அரிசி மாவில் பிரட் தயாரிக்கப்படுகிறது. இதில், இருவகை புரதசத்துக்கள் உள்ளன. சிலருக்கு இதுபோன்ற உணவை சாப்பிட்டால், மயக்கம், மலச்சிக்கல், வயிற்று போக்கு, குடல் பாதிப்புகள், நினைவு திறனில் சிக்கல் மற்றும் தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வாமை ஏற்பட்டால், பாதாம், அரிசி, மக்காசோளம், பீன்ஸ், இருங்கு, மரவள்ளிக்கிழங்கு மாவில் தயாரித்த, பிரட் தின்னலாம்.உணவுப் பொருளை நொதிக்க வைப்பதில், இரண்டு முறைகள் உள்ளன.சர்க்கரையை, எதனாலாகவும், கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றும் ஆல்கஹால் நொதிப்பு ஒரு முறை. உணவுப் பொருளில் குளுக்கோசை, லாக்டேட்டாக மாற்றும் அமில நொதிப்பு மற்றொரு முறை. மனிதனுக்கு, மூன்று முக்கிய தேவைகள் உள்ளன. அவை, உணவு, உடை, இருப்பிடம். இவற்றில் முக்கியமானது உணவு. ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்தலைவனை, 'பிரட் வின்னர்' என்று அழைப்பது வழக்கம்.எந்த பண்பாட்டில் உருவாக்கப்பட்ட உணவையும் தரக்குறைவாக எண்ணக்கூடாது. பிடிக்கவில்லை என்றால் அந்த உணவை சாப்பிட வேண்டாம்; அடுத்தவர் சாப்பிடுவதை எள்ளி நகையாடக்கூடாது. உணவு தான் உயிரை வளர்க்கிறது என்பதை புரிந்து கொள்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !