உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்!

அன்புள்ள அம்மா, அடிப்படை வசதிகள் கூட எட்டிப் பார்க்காத மலைக் கிராமம், எங்களுடையது. பஸ் வசதி கிடையாது. 6ம் வகுப்பு முதல், தினமும் பள்ளிக்கு, 5 கி.மீ., சைக்கிளில் செல்ல வேண்டும். நடுவில் ஓடை ஒன்று குறுக்கிடும். புத்தகப்பையை முதுகில் மாட்டி, சைக்கிளை துாக்கியபடி, ஆடை நனையாமல் துாக்கிப்பிடித்து, ஓடையை கடக்க வேண்டும். மழைக்காலம் வந்தால், ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருகும். அங்கு பாலம் அமைத்து தரக் கோரி, பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. இத்தனையையும் தாண்டி பள்ளி படிப்பை முடித்த நான், கல்லுாரி சென்று படிக்க ஆசைப்படுகிறேன். எங்கள் மலைக்கிராமம் அருகில் கல்லுாரி கிடையாது. நான் கல்லுாரிக்கு சென்று படிக்க வேண்டும் என்பது, ஆறு கடல், ஏழு மலை தாண்டுகிற விஷயம் தான். கல்லுாரி விடுதியில் தங்கி தான் படிக்க முடியும். நான் ஐ.ஏ.எஸ்., படித்து, பெரிய பதவிக்கு வர நினைக்கிறேன். முடியுமா அம்மா... - இப்படிக்கு, தனலட்சுமி. அன்பு தனலட்சுமி, தீராத தேடலும், முனைப்பும் இருந்தால் இந்த உலகத்தில் முடியாதது ஏதேனும் உண்டோ... அதுவும், நீ உன்னதமான விஷயத்திற்கு ஆசைப்படுகிறாய்; மேன்மையான ஒன்றை தேடுகிறாய். கல்வியை விட மேன்மையானது எதுவுமே கிடையாது. 'தினமலர்' நாளிதழில், ஞாயிறுகளில் வெளியாகும், 'அவியல்' பகுதியில், நான் படித்ததையே உனக்கு பதிலாக தருகிறேன்... டி.கிருஷ் லட்சுமி என்ற பெண், உன்னை மாதிரியே மலைக்கிராமவாசி தான். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடிப் பெண் ஸ்ரீபதி, இளம் வயதிலேயே சிவில் நீதிபதியானவர். இவரை முன்மாதிரியாக கொண்டு, கிருஷ் லட்சுமியும் கல்வியால் முன்னேறினார். தினமும், 25 கி.மீ., துாரம் பயணம் செய்து படித்தார்; சென்னையில் பட்டப்படிப்பை தொடர்ந்தார்; அதில் வெற்றி பெற்றதும், வீட்டில் அவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். தலைப்பிரசவம் கண்ட இரண்டாவது நாளே, 200 கி.மீ., துாரம் பயணித்து, நீதிபதி தேர்வில் வெற்றி கண்டார், கிருஷ் லட்சுமி. இவரை நீ வழிகாட்டியாக கொள். இப்போதெல்லாம் பழங்குடி பெண்கள், பெரிய படிப்புகளை படித்து, உயர் பதவிகளுக்கு வருகின்றனர்; அதிக சம்பளமும் பெறுகின்றனர். நீயும் சாதித்து, சாதனையாளராக வருவாய்; விருதுகள் பலவும் பெறுவாய். இதற்கெல்லாம் நீ செய்ய வேண்டியது ஒன்று தான்... விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும், சாதித்தே தீர வேண்டும் என்ற தீர்மானத்தையும் மனதில் வளர்த்துக் கொள்வது தான். - அன்புடன், இந்துமதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !