உள்ளூர் செய்திகள்

கால் வாய்ப்பாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்தேன். கணித ஆசிரியராக இருந்தார் வைத்தியநாத அய்யர். அன்று வகுப்பறைக்குள் அவர் நுழைந்ததும் வணக்கம் கூறி அமர்ந்தோம். முன் வரிசையில் ஆசிரியருக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த என்னிடம், 'ஈரரைக்கா மேல் நாமாகாணி போட்டு உட்கார்ந்திருக்கிறீரோ...' என, கோபமாக கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிருவென முழித்தேன். ஆத்திரம் பொங்க, 'எடுடா காலை...' என கடுப்புடன் கூறினார் ஆசிரியர். அப்பொழுது தான், கால் மேல் கால் போட்டு சொகுசாக அமர்ந்திருந்ததை உணர்ந்தேன். அதிர்ந்தபடி, கால்களை சமநிலைப்படுத்தி சீராக அமர்ந்தேன். பின், மூளையை கசக்கி, ஆசிரியர் கூறியதற்கு பொருள் தேடினேன். எதுவும் புரியவில்லை. வகுப்பு முடிந்தபின் தயங்கியபடி விபரம் கேட்டேன். சிரித்தபடியே, 'இரண்டு அரைக்கால் சேர்ந்தது ஒரு கால்... நான்கு மாகாணிகள் சேர்ந்ததும் ஒரு கால் என்பதை உரைக்கும் வாய்ப்பாடு அது. நீ உட்கார்ந்திருந்த விதத்தை அதன் வழியாக உணர்த்தினேன்...' என விளக்கினார் கணித ஆசிரியர். தற்போது என் வயது, 78; எல்.ஐ.சி., முகவராக பணிபுரிகிறேன். பள்ளியில் நடந்த அந்த நிகழ்வு இன்றும் சிந்தனையில் நிறைந்துள்ளது. கணித வாய்ப்பாட்டிலே ஒழுக்கம் கற்பித்த ஆசிரியர் வைத்தியநாத அய்யரை போற்றுகிறேன். - ரா.சிவப்பிரகாசம், காரைக்குடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !