உள்ளூர் செய்திகள்

வினோத தீவு! (9)

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் விடுமுறையில் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற போது, குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து திரும்பினர். பள்ளி ஆசிரியை ஜான்வி உதவியுடன் அவர்களை மீட்கும் திட்டம் வகுத்து அந்த வினோத தீவுக்கு சென்றனர். இனி - ல ட்சத்தீவு கூட்டத்தில் உள்ள வினோத தீவிற்கு சிறுமியருடன் சென்ற போது அதன் எழில் தோற்றம் ஆசிரியை ஜான்வியை ஈர்த்தது. ''சூப்பர் லொகேஷன்...'' வியந்தார் ஜான்வி. மூவரும் வினோத தீவி ன் கரையில் இறங்கினர். படகோட்டியை இரண்டு மணி நேரம் காத்திருக்க சொல்லி, மரங்கள் அடர்ந்திருந்த பகுதியை நோக்கி நடந்தனர். அவர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏமாற்றம் தராமல் வந்தான் லியோ. அவன் தோற்றத்தையும், மரக்கிளையில் குரங்கு போல தாவியதையும் வியப்புடன் பார்த்தார் ஜான்வி. ''ரொம்ப சிறிய உருவத்துடன் இருக்கிறானே...'' ''ஆம்.. . இவர்கள் கூட்டத்தில் ஆண்கள் எல்லாருமே குட்டி மனுஷங்கதானாம் மிஸ்...'' ரீனாவையும், மாலினியையும் பார்த்ததும் முகம் மலர்ந்தான் லியோ. ஜான்வியை பார்த்ததும் தயங்கினான். ''இது எங்கள் ஆசிரியை ஜான்வி மிஸ்...'' அதை கேட்டபின்னும் தயங்கினான். ''நீ பயப்படத்தேவையில்லை. உங்களுக்கு உதவ மிஸ் தான் எங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறார்...'' ரீனா சொன்னதும் சமாதானமானான் லியோ. தின்பண்டங்களை அவனிடம் கொடுத்தனர். வாங்கி கொண்டான். நேரமின்மையால் சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வந்தனர். ''நாங்கள் இங்கு ஒரு வாரகாலம் தான் தங்கியிருப்போம். அதற்குள் உங்களை மீட்கும் முயற்சியில் இறங்க வேண்டும். எங்களுக்கு சில தகவல்கள் தேவை. சொல்ல முடியுமா...'' ''அது என்ன பிரமாதம்... கண்டிப்பாக சொல்கிறேன்...'' லியோ முகத்தில் தெளிவு வந்தது. சற்று தயக்கத்துடன், ''நான் உங்களை எப்படி அழைப்பது...'' என்றான். ''எங்களை பெயர் சொல்லி கூப்பிடலாம். இவங்களை, மிஸ்னே கூப்பிடு...'' தலையசைத்தான் லியோ. ''அந்த சுரங்கம் எப்படி இருக்கும்...'' ''என் போன்று ஒரு ஆள் நுழையும் அளவிற்கு மட்டுமே இருக்கும். எங்கள் இன ஆண்கள் உருவத்தில் சிறிதாக இருப்பதால் அதனுள் சென்று அங்கிருக்கும் ரத்தினங்களை எடுத்து வருவர்...'' ''சுரங்கம் எவ்வளவு ஆழம் இருக்கும்...'' ' 'அதைப் பற்றி முழுமையாக தெரியாது. ஆனால், சுவாசிக்க ஏற்ற காற்று உருளையை முதுகில் சுமந்து, மூக்கில் குழாயை மாட்டிக் கொண்டு தான் ஆட்கள் உள்ளே செல்வர்...'' அவன் சொன்னதிலிருந்து ஆக்சிஜன் உதவியுடன் சென்று வருவதை தெரிந்து கொண்டனர். ஆழம் அதிகம் உள்ள சுரங்கம் என்பதும் புரிந்தது. ''அந்த சுரங்கம் பற்றி வேறு என்ன தெரியும்...'' ''அதன் அமைப்பு பற்றி எதுவும் தெரியாது...'' ''அங்கே வேலை செய்யும் யாரையாவது சந்திக்க முடியுமா...'' ''அது என்ன பிரமாதம்... எங்கள் இன தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்...'' ''எத்தனை பேர் அங்கே வேலை செய்கின்றனர்...'' ''ஆண்கள் எல்லாருமே அங்கே தான் வேலை செய்கின்றனர். சிறுவர்களும், பெண்களும் வீட்டில் இருப்பர். சில நேரம் காட்டுப்பகுதியில் வாசனைப் பொருட்கள் சேகரித்து வருவர். எனக்கு வீட்டில் இருக்கப் பிடிக்காது. அதனால், மரங்களில் ஏறி கடற்கரைப் பகுதிக்கு வந்து விடுவேன். எனக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும்...'' சின்னதாய் புன்னகைத்த லியோ தொடர்ந்து பேசினான். ''மாலையில் வீட்டுக்கு சென்று விடுவேன். சிறுவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர சுரங்கக்காரர்கள் அனுமதிப்பதில்லை. நான் திருட்டுத்தனமாக தான் இப்படி வருகிறேன். நான் வெளியில் வருவது எங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கும்பலுக்கு தெரியாது...'' ''அதனால் தான் நீ அவர்களைப் பார்த்து பயந்து ஓடுகிறாயா லியோ...'' ''ஆம்... அவர்கள் கண்ணில் பட்டால் பிடித்து போய் விடுவர். தவிர அடி உதை என தண்டனை தருவர்...'' பேசிக்கொண்டிருக்கும் போதே இருட்ட ஆரம்பித்தது. ''நாம் விரைந்து செயல்பட வேண்டும். இனி வரும் ஒவ்வொரு மணி நேரமும் மிக முக்கியம்...'' என்றாள் ஜான்வி. ''நாளை காலை தலைவரை அழைத்து வருகிறேன்...'' என்றான் லியோ. அடுத்த நாளுக்கான எதிர்பார்ப்புடன் விடைபெற்று படகுக்கு வந்தனர். ம றுநாள் - காலை, 9:00 மணிக்கு ரீனாவும், மாலினியும் வினோத தீவிற்கு வந்தனர். தின்பண்ட பொட்டலங்களும், நான்கு பேர் சாப்பிடும் அளவு மதிய உணவும், நான்கு பாட்டில் தண்ணீரும் வைத்திருந்தனர். கடற்கரையில் நிழல் ஏற்படுத்துவதற்கு ஏற்ற மடக்கு கூடாரத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தனர். படகிலிருந்து இறங்கி மரங்களை நோக்கி நடந்த போது, லியோவும், 40 வயது மதிக்கத்தக்க இன்னொரு குட்டி மனுஷனும் மரங்களின் மறைவில் காத்திருந்தனர். அந்த குள்ள மனுஷரும் லியோவை போலவே இருந்தார். ''இவர் பெயர் கோயா... என் உறவினர். இனக்குழுவின் தலைவரும் இவர் தான். ரத்தினச் சுரங்கத்தில் வேலை பார்க்கிறார்...'' அறிமுகப்படுத்தினான் லியோ. சில நிமிடங்கள் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு கேள்விகளை ஆரம்பித்தாள் ரீனா. ''உங்க பிரச்னை என்ன...'' ''நாங்கள் இங்குள்ள பூர்வ பழங்குடியினர். மொத்தமே 21 குடும்பம் தான் இருக்கிறோம். பெண்கள் குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து மொத்த எண்ணிக்கையே, 83 பேர் தான். இந்த தீவின் மையப்பகுதியில் கூட்டு குடியிருப்பாக வாழ்ந்து வருகிறோம்...'' ''ஆச்சரியமாக இருக்கிறது... அவ்வளவு குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறீர்களா...'' ''ஆமாம்...'' ''உணவு, மருத்துவம் எல்லாம்...'' ''எங்களுக்கு தேவையான காய்கள், கிழங்குகள் எல்லாமே இங்கே கிடைக்கும். சிறு விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவோம். இந்த காட்டில் அபூர்வ பழங்களையும், வாசனை பட்டைகளையும் சேகரித்து படகோட்டிகளிடம் கொடுத்து, அதற்கு மாற்றாக பொருட்களை வாங்கி கொள்வோம். சுரங்கக்காரர்கள் கூலியாக உணவுப் பொருட்களை கொடுப்பர்...'' ''ஓ...'' ''கலப்படமில்லாத இயற்கை உணவையே சாப்பிடும் எங்களுக்கு, பெரிதாக நோய் எல்லாம் வந்ததில்லை. அப்படி வந்தாலும், இங்குள்ள மூலிகை உதவியால் வைத்தியம் செய்து கொள்வோம்...'' விளக்கமாக சொன்னார் கோயா. - தொடரும்... நரேஷ் அருண்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !