உள்ளூர் செய்திகள்

காற்றினிலே வரும் கீதம்!

செப்.,16 எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் அயராத உழைப்பால் இசைத்துறையில் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மதுரையில் செப்டம்பர் 16, 1916ல் பிறந்தார். தாய் வீணை இசை கலைஞர் சண்முக வடிவு. தந்தை பிரபல வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயர். சிறுவயதில், குஞ்சம்மா என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்டார். புகழ் பெற்ற கர்நாடக சங்கீத வித்வான் சீனிவாச ஐயங்காரிடம் முறையாக இசை பயிற்சி பெற்றார். மதுரை சேதுபதி பள்ளியில், தன், 9 வயதில் கச்சேரி நடத்தினார். தொழில் நுட்ப வளர்ச்சியால் கிராமபோன் என்ற இசைத்தட்டு வெளிவரத் துவங்கிய காலம் அது. அதில் பாடல் பதிவு செய்ய சென்னைக்கு அழைத்து சென்றார் அவரின் தாய். சிறுமி என வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது உருக்கம் நிறைந்த குரலை கேட்ட பின், பாடல் பதிவு செய்யப்பட்டது. இசைத்தட்டாக வெளியாகி விற்றுத் தீர்ந்தது. ஜனவரி 1, 1932ல், ஒரு திருப்பம் நேர்ந்தது. சென்னை, சங்கீத வித்வத் சபையில், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பாட இயலவில்லை. மாற்றாக, எம்.எஸ்.சுப்புலட்சுமியை அழைத்தனர் சபா நிர்வாகிகள். அவரது இசை கேட்டு, 'ஆஹா... எவ்வளவு ஞானம்... குரலில் எத்தகைய இனிமை...' என்று வியந்து பாராட்டினார், பிரபல இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர். இது இசை உலகில் மேலும் முன்னேற உதவியது. இந்தக் காலத்தில் தமிழகத்தில் திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின. வயோதிக திருமணத்தை கண்டிக்கும், சேவா சதனம் என்ற படத்தில் நடித்தார் சுப்புலட்சுமி. அமோக வெற்றி பெற்றது. பின், அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கன் உருவாக்கிய, சகுந்தலை என்ற படத்தில் நடித்தார். அதுவும், அமோக வெற்றி பெற்றது. நாரதராக ஆண் வேடம் ஏற்று, சாவித்திரி படத்தில் நடித்தார். அதுவும், அமோக வெற்றி பெற்றது. அந்த படப்பிடிப்புக்கு சென்ற வழியில் காந்திஜியை சந்தித்து ஆசி பெற்றார். பிரார்த்தனை கூட்டத்தில் பக்தி பாடல்களையும் பாடி பாராட்டை பெற்றார். ஹிந்தி மொழியில் சுப்புலட்சுமி நடித்த மீரா என்ற படம் சக்கை போடு போட்டது. இதன் சிறப்பு காட்சி டில்லியில் திரையிட்ட போது, பிரதமராக இருந்த நேரு பார்த்து பாராட்டினார்; பின், இசை நிகழ்ச்சி ஒன்றில், 'இசை உலகின் பேரரசி' என்று புகழாரம் சூட்டினார். உலகின் பலநாட்டு பிரதிநிதிகள் கூடிய ஐக்கிய நாடுகள் சபையில், 1966ல் இசை நிகழ்ச்சி நடத்தினார் சுப்புலட்சுமி. இதற்கென்றே ஆங்கிலப் பாடல் ஒன்றை எழுதித் தந்தார் மூதறிஞர் ராஜாஜி. இசை வல்லுனர் ஹாண்டல் மானுவெல் அந்த பாடலுக்கு இசை அமைத்தார். அந்த நிகழ்ச்சி அற்புதமாக அமைந்தது. சுப்புலட்சுமியின் புகழ், உலகம் முழுதும் பரவியது. பொது பணிகளுக்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி வசூல் செய்து கொடுப்பதில் முன்னிலை வகித்தார் சுப்புலட்சுமி. இசையால் இமாலயப் புகழ் பெற்ற அவருக்கு, கோல்கட்டா ரவீந்திர பாரத் பல்கலையும், டில்லி பல்கலையும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. ஆசியாவின் நோபல் என புகழப்படும், ராமன் மக்சாய் விருது, 1974ல் வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதை, 1988ல் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இசையால் புகழ்பெற்ற அவர் டிசம்பர் 11, 2004ல், 88ம் வயதில் மறைந்தார். பிரபஞ்சத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !