உள்ளூர் செய்திகள்

கவனக்குறைவு!

திருச்சி, புத்துார் பிஷப் ஹீபர் பள்ளியில், 1974ல், 8ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக இருந்தார் துரைசாமி. வெள்ளை நிற சட்டையும், வேஷ்டியும் அணிந்திருப்பார். ஹிட்லர் மீசையுடன் கம்பீரமாக தோற்றமளிப்பார். பாடம் நடத்தும் போது, நீண்ட பிரம்பு ஒன்று கையில் இருக்கும். அதை அதிகம் பயன்படுத்த மாட்டார். ஆனால், எல்லாரும் ஏதோ காரணத்திற்காக அடி வாங்கி இருக்கிறோம்.அரையாண்டு தேர்வு முடிந்து வகுப்பு துவங்கும் முன், 'வகுப்பாசிரியரிடம் இதுவரை அடி வாங்காதது நீ ஒருவன் தான்...' என்றான் நண்பன். நினைவை துலக்கிய போது, 'அது உண்மை' என புரிந்தது. மனதில் கர்வம் தோன்றியது. மறுநாள் பகல் நேரம் கடைசி வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார் வகுப்பாசிரியர். மதிய உணவு இடைவேளையை அறிவிக்கும் மணி ஒலித்தது. ஆனாலும் பாடம் தொடர்ந்தது. சாப்பிட போகும் அவசரத்தில், பாடத்தை கவனிக்காமல், புத்தகங்களை பையில் அடுக்கி எழ தயாரானேன். அதை கவனித்து, முதுகுக்கு பின் பிரம்பை மறைத்தபடி அருகே வந்து, 'வீட்டுக்கு கிளம்பறியா...' என்றபடி, இரண்டு அடி தந்தார். அது தவறை உணரச் செய்தது.இப்போது, என் வயது, 63; தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சில நொடி கவனக்குறைவே, தண்டனை பெற போதுமானது என வகுப்பறையில் உணர்ந்த அந்த தருணம் மகத்தானது. அதை நினைவில் பதித்த ஆசிரியரை போற்றுகிறேன்.- எஸ்.உதயகுமார், பெங்களூரு.தொடர்புக்கு: 93438 27230


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !