லண்டன் இதயத் துடிப்பு!
நான்கு- பக்கங்கள் உடைய உலகின் மிகப்பெரிய நேரம் காட்டும் கடிகாரம், பிக்பென். இது ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை பகுதியில் உள்ளது. கி.பி., 1859ல், 12,500 கிலோ எடையில் உருவாக்கப்பட்டது. மணிக்கு ஒருமுறை அதிர்ந்து ஒலி எழுப்பி கவர்கிறது. இந்த கடிகாரம் உருவான வரலாற்றை பார்ப்போம்... வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில், 1834ல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பின் நடந்த மறுகட்டுமானத்தின் போது கடிகாரக்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. இதில் பொருத்த, 15,000 கிலோ எடையில் கடிகாரம் உருவாக்கப்பட்டது. சோதனையில் அது விரிசல் விட்டு தோல்வியடைந்தது. பின், பிக்பென் கடிகாரம் உருவாக்கப்பட்டது. இதை கோபுரத்தில் நிறுவ, நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 30 மணி நேரம் உழைத்தனர். முதன்முறையாக ஜூலை 11, 1859ல், பிக்பென் அதிர்ந்து ஒலித்து நேரம் காட்டி லண்டன் வாசிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. அக்டோபர் மாதத்தில் கடிகாரத்தில் விரிசல் விழுந்தது. புத்திசாலித்தனமாக அதை சரி செய்து இயங்க வைத்தனர். இன்றும் அந்த விரிசல் அப்படியே இருந்தாலும், உலகின் மிகத் துல்லியமாக நேரம் காட்டுவதாக உள்ளது. இதன் ஓசை, லண்டன் வாசிகளின் இதயத்துடிப்புடன் கலந்து இருக்கிறது. - வ.முருகன்