மியாவ்... மியாவ்!
துாத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், பேரிலோவன்பட்டி, டி.வி.ஏ.நல்லழகு நாடார் உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 6ம் வகுப்பு படித்த போது, தலைமையாசிரியராக இருந்தார் எம்.மார்டின்ஜான். அன்று அவரது வகுப்பின் போது, 'மியாவ்...' என்றேன். கடும் கோபத்தில், 'பூனை போல் கத்தியது யார்...' என அதட்டினார். பயத்தில் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர் மாணவர்கள். நான் எழுந்து, 'தெரியாமல் கத்தி விட்டேன் ஐயா...' என்றேன். வகுப்பு முடியும் வரை பெஞ்ச் மீது நிற்கும் தண்டனை தந்தார். வேறு வழியின்றி வெட்கத்துடன் அனுபவித்தேன். வகுப்பு முடிந்த போது, 'இப்படி எல்லாம் இடையூறு செய்யக் கூடாது. இது, படிப்பினையாக இருக்கட்டும்...' என்று அறிவுரைத்ததை மனதில் பதித்து ஒழுக்கம் கற்றேன்.எனக்கு, 74 வயதாகிறது; திருச்சி மாநகராட்சி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சில ஆண்டுகளுக்கு முன், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்த தலைமையாசிரியரை சந்திக்க நேர்ந்தது. சுய அறிமுகம் செய்த போது, 'ஞாபகம் இல்லையே...' என்றார். பூனை கத்திய கதையை கூறி நினைவை புதுப்பித்து வணங்கினேன். மிகவும் மகிழ்ந்து வாழ்த்தினார். பள்ளி வாழ்க்கை பசுமையாய் மனதில் நிறைந்திருக்கிறது.- டி.எஸ்.மகாதேவன், கோவை.தொடர்புக்கு: 94431 77135