மூன்று மைகள்!
திண்டுக்கல் மாவட்டம், எம்.எஸ்.பி.,சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில், 1985ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளியின் தலைமை ஆசிரியராக, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ரத்தினபாண்டியன் பணியில் இருந்தார். ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர் ஒருவர், திருக்குறள் கூறி விளக்கம் சொல்ல வேண்டும் என பணிப்பது, அவர் வழக்கம். அதே போல, படிப்பிற்கு நிகராக விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்தார். ஒவ்வொரு முறை மேடையில் பேசும் போது, 'நாம் எந்த துறைக்கு சென்றாலும், முதன்மை, முழுமை, புதுமை ஆகிய மூன்று மைகள் இன்றியமையாதது' என்பார். மேலும், 'நன்றாக சாப்பிட வேண்டும்; விளையாட வேண்டும்; துாங்க வேண்டும்... அதே போல, படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்' என்பார். படிப்பை விட ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். ஒவ்வொரு நாளும், நான்கு முறையாவது பள்ளியைச் சுற்றி, 'ரவுண்ட்ஸ்' வந்துவிடுவார். மாணவர்களை தன் பிள்ளைகளாகவே பாவித்தவர், அவர். தற்போது எனக்கு, 51 வயது. தலைமை ஆசிரியர் ரத்தினபாண்டியனின் அறிவுரைகளை, என் குழந்தைகளுக்கும் அடிக்கடி நினைவூட்டுவேன். அவரை பெருமையுடன் நினைவு கூர்ந்து, எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். - ஆர்.ராஜசங்கரமூர்த்தி, திண்டுக்கல். தொடர்புக்கு: 94430 54594