நிதானம்!
பள்ளி விட்டதும் எரிச்சலோடு வீட்டிற்குள் நுழைந்தான் சுரேஷ்.பின் தொடர்ந்து, சிறு சிரிப்போடு வந்தாள் அவன் அக்கா வித்யா.''என்னாச்சுடா... ஏன் கோபமா வர்ற...'' என்று கேட்டார் அம்மா.பதில் சொல்லவில்லை. வந்த வேகத்தோடு நாற்காலியில் அமர்ந்தான் சுரேஷ்.குழப்பமாய் வித்யாவைப் பார்த்தார் அம்மா.''அது ஒண்ணுமில்லம்மா... பள்ளியில் மாவட்ட அளவில் நடக்கிற செஸ் போட்டிக்கு, மாணவர்களை தேர்வு செய்தாங்க. இவனும், ஆர்வமா பேரைக் கொடுத்தான். நிறைய பேர் இருந்ததால வடிகட்டுறதுக்காக ஒரு போட்டி நடத்துனாங்க. அதுல தோத்துப் போயிட்டான். அதான்...'' என்றாள்.''அப்படியா... விடுடா அடுத்த முறை பார்த்துக்கலாம்...''சமாதானப்படுத்தினார் அம்மா.தோற்ற ஆதங்கம் குறையாமல், ''என்னோட மோதினவனுக்கு ஓரளவுக்கு தான் விளையாட தெரியும். இன்று என்னமோ ஜெயிச்சுட்டான். எத்தனை முறை, அவன் என்னோட தோற்று போயிருக்கான் தெரியுமா...'' என்றான் சுரேஷ்.''நானும் பார்த்தேன். ரொம்ப வேகமாய் காய் நகர்த்தினான். அவனை சீக்கிரம் தோற்கடிக்கணும்ன்னு, பதற்றத்தோட விளையாடினான்...''சற்று கிண்டலாக கூறினாள் வித்யா.''உனக்கு எப்பவுமே பொறாமை. அதான் இப்படி எல்லாம் சொல்லுற...''கடுப்பைக் காட்டினான் சுரேஷ்.''சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க... முகம் கழுவிட்டு வாங்க. பால் எடுத்து வரேன்...'' கூறிய படியே சமயலறைக்குள் நுழைந்தார் அம்மா.பாலைக் குடிக்காமல், கையில் வைத்துக் கொண்டிருந்தான் சுரேஷ்.''என்னடா இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருக்கிறாயா...'' ''இல்லம்மா... பால் ரொம்ப சூடா இருக்குது. அதான் மெதுவா குடிக்கிறேன்...''''சூடான பாலைக் குடிக்கிறதுல எவ்வளவு பொறுமை கடைப்பிடிக்கிற... அதே மாதிரி நிதானமா, விளையாடியிருந்தா ஜெயிச்சுருக்கலாம்! எப்போதுமே, வேகத்தை விட, விவேகம் முக்கியம். சரி போனது போகட்டும். அடுத்தமுறை முயற்சி செய்...''கனிவுடன் அறிவுரைத்தார் அம்மா.''இனிமேல் நிதானமா விளையாடுறேன்மா...'' மலர்ந்த முகத்துடன், பாலை நிதானமாக குடிக்க துவங்கினான் சுரேஷ்!குழந்தைகளே... நிதானமான செயல்பாடு வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும்.- வே.சரஸ்வதி உமேஷ்