ஒற்றை செருப்பு!
மதுரை, குட்ஷெட் வீதி மீனாட்சி வித்தியாசாலை பள்ளியில், 1965ல், 8ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியையாக இருந்த கமலா மிகவும் இயல்பாக பழகுவார். கணக்கு பாடத்தை தெளிவாக கற்று கொடுப்பதுடன், 'வகுப்பறையில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; வீட்டில் பெற்றோரை எதற்காகவும் தொந்தரவு செய்யக்கூடாது. எளிமையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்...' என அறிவுரைப்பார். வீட்டிலிருந்து, 1 கி.மீ., துாரம் பள்ளிக்கு நடந்தே சென்று வருவேன். அன்று என் செருப்பில் ஒன்று அறுந்துவிட்டது. அதை கையில் துாக்கியபடி ஒற்றை காலில் செருப்புடன் நடந்து வந்தேன். இதை கண்ட தோழி வகுப்பாசிரியையிடம் கூறி விட்டாள். உடனே அழைத்து விபரம் கேட்டார். சற்று தயங்கியபடி, 'புது செருப்பு உடனே வாங்கித்தர என் அப்பாவால் இயலாது. அறுந்த செருப்பை பழுது நீக்கி அணியலாம் என துாக்கி வந்தேன். அதே நேரம் ஒற்றை செருப்பை அணிந்தால், ஒரு கால் பாதத்திலாவது கல் குத்தாமல், வெயில் சூட்டை தடுக்கலாம் அல்லவா...' என விளக்கம் சொன்னேன். உடனே, 'எளிமையை எப்படி எல்லாம் கடைபிடிக்கிறாள் பாருங்கள்...' என சொல்லி சிரித்து மறுநாளே புது செருப்பு ஒன்று வாங்கி தந்து உதவினார் ஆசிரியை. இப்போது என் வயது, 73. இல்லத்தரசியாக இருக்கிறேன். காலில் செருப்பு அணியும் போதெல்லாம் ஆசிரியை கமலா நினைவில், என் கண்களில் நீர் ததும்பிவிடுகிறது. அவரது மனம் கனிந்த உதவி எளிமையாக வாழ கற்றுத்தந்திருக்கிறது. - ஏ.வசந்தகுமாரி, மதுரை.