பத்திரமணல் தீவு!
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில், வேம்பநாடு ஏரி நடுவே அமைந்துள்ளது, பத்திரமணல் தீவு. இயற்கை அழகுடன் பறவைகள் ஒலியும் இணைந்து அமைதியாக விளங்குகிறது. முக்கிய இயற்கை பாதுகாப்புப் பகுதியாக அறியப்படுகிறது. சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது. கேரளாவில் மிகப்பெரிய ஏரி, வேம்பநாடு. இதன் நடுவில், 10 ஏக்கர் பரப்பில் பரவியுள்ளது, பத்திரமணல் தீவு. மரங்கள் அடர்ந்த சூழலால் தனித்துவம் பெற்றுள்ளது. நகர வாழ்வின் இரைச்சலை மறக்கச் செய்கிறது. இடம் பெயரும் வலசைப் பறவைகளின் தங்குமிடமாகவும் உள்ளது. ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய நாடான ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் வட ஐரோப்பிய பகுதிகளில் இருந்து பலவகை பறவைகள், குளிர்காலத்தில் இங்கு வந்து தங்குகின்றன. உள்ளூர் பறவைகளும் ஆண்டு முழுதும் காணப்படுகின்றன. பறவை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் பகுதியாக உள்ளது. ஆலப்புழை, குமரகம் போன்ற சுற்றுலா மையங்களிலிருந்து, படகில் இந்தத் தீவுக்கு செல்லலாம். வேம்பநாடு ஏரியில் படகு பயணம், சுற்றுலா பயணியருக்கு தனித்துவ அனுபவத்தை வழங்குகிறது. இயற்கையோடு ஒன்றிப்போக விரும்புவோருக்கு, மறக்க முடியாத பகுதியாக, பத்திரமணல் தீவு திகழ்கிறது. - வி.பரணிதா