உள்ளூர் செய்திகள்

பாவனையும், படிப்பும்!

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம், மார்த்தாண்டம் இந்து நடுநிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!அன்று ஊர்ப்புற நுாலகத்தில் வாரப்பத்திரிகையை விரித்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, புவியியல் ஆசிரியர் மா.செல்லத்துரை அங்கு வந்தார். அவரைக் கண்டதும் பயத்தில் லேசாக நடுக்கம் ஏற்பட்டது.தீவிரமாக படிப்பது போல் பாவனை செய்தபடி ஒன்றரை மணிநேரத்தை கடத்தினேன். இதழ்களை படித்து, ஆசிரியர் சென்ற பின் வெளியேறினேன். இப்படி பலமுறை செய்த பாவனையே, புத்தகங்கள் மீதான ஆர்வத்தை வளர்த்தது.ஒரு நாள், வகுப்பறையில் பொதுஅறிவு கேள்விகள் கேட்டார் ஆசிரியர். யாரும் பதில் சொல்லவில்லை. நான் சரியாக சொன்னதை கேட்டு பாராட்டியதோடு, நுாலகம் செல்லும் பழக்கத்தை வெகுவாக புகழ்ந்தார். அது, பெரும் ஊக்கம் தந்து, வாசிக்கும் ஆர்வத்தை துாண்டியது. தொடர்ந்து படித்து, ஆசிரியர் தேர்வு வாரிய சிறப்பு தேர்வில் மாநில அளவில் தகுதி பெற்றேன்.எனக்கு, 67 வயதாகிறது. தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இட்டமொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் என் மாணவர், 10ம் வகுப்பு பொதுதேர்வில் தமிழ் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றார். அவரை மாநில அளவில் முதலிடம் பெற வைத்ததை பெருமையாக கருதுகிறேன். இதுபோல் சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்த ஆசிரியரை மதிப்புடன் போற்றி வாழ்கிறேன்.- ஐ.சுப்பிரமணியன், திருநெல்வேலி.தொடர்புக்கு: 90800 61147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !