உள்ளூர் செய்திகள்

பயிற்சியும், முயற்சியும்!

''பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை. எல்லாரும் கேலி செய்கின்றனர்...'' சிணுங்கினான் சிபி.''என்ன ஆச்சு...''அக்கறையுடன் விசாரித்தார் தந்தை.''என் கையெழுத்து, கோழி கிண்டியது போல் கிறுக்கலாக இருக்கிறது. ஒரு புகழ் பெற்ற சினிமா இயக்குனரின் மகனுக்கு இப்படி இருக்கிறதே என்று மிகவும் கேலி செய்கின்றனர் வகுப்பு தோழியர். எவ்வளவு முயன்றும் என்னால் வடிவமாக எழுத இயலவில்லை...''பள்ளியில் நடந்ததை கூறி கண்ணீர் வடித்தான் சிபி.மகன் துன்பம் போக்கி மகிழ்விக்க எண்ணினார் தந்தை.''சரி. உன் மனக்குறையை பின்னர் சரி செய்யலாம். இப்போது நான், ஒரு விளம்பர படப்பிடிப்புக்கு செல்கிறேன்; ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிய வீரர் நடிக்கிறார்; நீயும் வா... மகிழ்ச்சியாக இருக்கும்...'' ஆர்வத்துடன் புறப்பட்டான் சிபி.படப்பிடிப்பு தளம் தயாராக இருந்தது.தயாராக நின்ற வீரரிடம், ''துப்பாக்கி சுடும் பயிற்சி செய்கிறீர். குறி தவறுகிறது; மீண்டும் முயற்சி செய்கிறீர்; ஆனால், ஒவ்வொரு முறையும் குறி தவறுகிறது. மிகவும் களைப்புடன் சோகமாக இருக்கையில் அமர்கிறீர்...''அம்மா ஒரு குளிர்பானம் கொடுக்கிறார். அதை குடித்ததும் ஆற்றல் கிடைக்கிறது. மீண்டும் இலக்கை நோக்கி சுடுகிறீர். துல்லியமாக இலக்கில் குண்டு பாய்கிறது. அடுத்தடுத்து குறி தவறாமல்... வெற்றி புன்னகையுடன் சுடுகிறீர். என் வெற்றியின் ரகசியம் இந்த குளிர்பானம் என சொல்கிறீர். இதை தான் படம் பிடிக்க போகிறோம்...'' என காட்சியை விளக்கினார் இயக்குனர்.புரிந்து நடிக்க தயார் நிலைக்கு வந்தார் வீரர். முதலில், குறி தவறாமல் சுடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.ஒவ்வொரு முறையும் துல்லியமாக இலக்கில் பாய்ந்தது துப்பாக்கி குண்டு. படப்பிடிப்பு குழு கைதட்டி பாராட்டியது. வெற்றி புன்னகையுடன் விளம்பர வசனத்தை அடுத்து பேசினார் வீரர்.''சூப்பர். இப்போ குறி தவறும் காட்சிகளை எடுக்கப் போகிறோம்...'' அதற்கு தயாரானார் வீரர். என்ன ஒரு ஏமாற்றம். எவ்வளவு தான் முயன்றும், குறி தவறும் விதமாக அவரால் சுட இயலவில்லை. எப்படி பிடித்து சுட்டாலும் இலக்கின் மீது துல்லியமாக பாய்ந்தது குண்டு.சற்று சோர்வுடன், ''குறி பார்த்து சுட பல ஆண்டுகள் தீவிரமாக பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் எவ்வளவு முயன்றும் இலக்கை எட்ட இயலவில்லை. கடும் பயிற்சியால் இலக்கை அடைந்தேன்; இப்போ, நானே நினைத்தாலும் இலக்கை விட்டு விலக இயலவில்லை. தவறாக சுட முடியவில்லை...'' என்றார் வீரர்.''பரவாயில்லை...''வீரருக்கு தேறுதல் சொல்லி, 'டூப்' நடிகரை வைத்து, குறி தவறும் காட்சியை படம் பிடித்தார் இயக்குனர்.இதைக் கண்ட சிபிக்கு, பயிற்சி மற்றும் முயற்சியின் சிறப்பு புரிந்தது.பட்டூஸ்... மென்மேலும் உயர்வு அடைய கடும் முயற்சியும், பயிற்சியும் தேவை என்பதை உணருங்கள்.- ஜனமேஜயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !