உள்ளூர் செய்திகள்

அன்னாசிப்பழம்!

தென் அமெரிக்காவைப் பூர்வீகமாக உடையது அன்னாசி. பராகுவே, பிரேசில் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. புரோமிலியேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. தமிழகத்தில், பறங்கித்தாழை, செந்தாழை, பூந்தாழம்பழம் எனவும் அழைக்கப்படுகிறது.இதை ஐரோப்பா கண்டத்தில், 15ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்தினார் இந்தாலிய மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ். பின், ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு பரவியது. ஆசிய நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் இதை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கின்றன. நம் நாட்டில், கேரளா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநில பகுதிகளில் பயிரிடப்படுகிறது. வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப காலநிலையில் செழித்து வளரும். ஒரு அன்னாசி செடி முழுமையாக வளர்ந்து பலன் தர, மூன்று ஆண்டுகள் ஆகும். நுாற்றுக்கணக்கான சிறு பழங்களின் கூட்டாக உள்ளது அன்னாசிப்பழம். இதிலுள்ள புரோமிலைன் என்சைம், செரிமானத்திற்கு உதவுகிறது. சாறு, ஜாம், சாலட், இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவாகவும் அன்னாசி பயன்படுகிறது. வைட்டமின் சி, மாங்கனீசு, நார்ச்சத்து நிறைந்தது. அன்னாசி இலையில் நார் தயாரித்து, துணி, கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் அன்னாசியில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில், கயீன் என்ற ரகம் மிகவும் பிரபலமானது. இதன் இனிப்பு கலந்த புளிப்புச் சுவை, உலகளவில் விரும்பப்படுகிறது.- வ.முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !