உள்ளூர் செய்திகள்

புராஜெக்ட் ஓ (8)

முன்கதை: அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, ஐந்து மாணவ, மாணவியர் கூட்டாக உருவாக்கிய திட்டத்தை ஆய்வகத்தில் செயல்படுத்த வழிகாட்டினார், ஆசிரியை மதிவதனி. உயிரியை உருவாக்க வார இறுதியில் இன்குபேட்டரில் வைத்த பொருட்கள் திங்களன்று மாயமாய் மறைந்திருந்தது. அது பரபரப்பை ஏற்படுத்தியது. இனி - ''என்ன அஞ்சலி?'' ''இந்த புராஜெக்ட் பற்றி நான், எங்கம்மா கிட்ட சொன்னேன்...'' துாக்கி வாரிப் போட்டது மதிவதனிக்கு. ''அம்மா கிட்ட ஏன் சொன்னே?'' ''அவங்க புற்றுநோய் நிபுணர். அதனால, 'செல் மல்டிபிகேஷன்' பற்றி அவங்க கிட்ட கேட்டேன். நம்ம புராஜெக்ட் பற்றி சொல்ல வேண்டியதா போச்சு... சாரி மேம்...'' ''அவங்க வேற எதாவது கேட்டாங்களா?'' ''இல்ல, மேம். அவங்க எப்பவுமே பிசியா இருப்பாங்க...'' மதிவதனிக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டாள். ''நாம முதல் கட்ட வெற்றியை அடையறதுக்கு முன்னாடி, யாரும் யார் கிட்டேயும் எதுவும் சொல்லாதீங்க...'' எல்லாரும் தலையாட்டினர். மேலும், சில வினாடிகள் கனத்த மவுனத்தில் கடந்தது. ''மேம்... ஒரு சின்ன ஐடியா...'' ''சொல்லு அஞ்சலி...'' அவள் சொன்ன ஐடியா, சபாஷ் போட வைத்தது. ''இந்த விஷயம் எப்படி வெளியே போச்சுன்னு யோசிக்கிறதை விட, இடைப்பட்ட சமயத்துல ஆய்வகத்துக்கு உள்ளே வந்தது யாருன்னு கண்டுபிடிக்கிறது சுலபம் மேம்...'' ''சுலபமா, என்ன சொல்ற நீ?'' ''இங்கே காரிடார்ல கண்காணிப்புக் கேமரா இருக்குதே... அதை, 'செக்' பண்ணலாம்...'' ''அதைப் பார்த்தா, யாராவது இந்த ஆய்வகத்திற்குள் வந்து இருக்காங்களான்னு தெரிஞ்சிடும்...'' என்றார் மதிவதனி. அடுத்த சில நிமிடங்களில், பள்ளி கண்காணிப்பு அறையில் இருந்த, கணினி முன் நின்றிருந்தனர். ''எப்போ இருந்து பார்க்கணும் மேம்?'' என்றான் பரத் ''வெள்ளிக்கிழமை மத்தியானத்துல இருந்து, காரிடர் கேமராவை மட்டும், 'பிளே' பண்ணு...'' என்றாள், மதிவதனி. மவுசை நகர்த்தினான், பரத்; எந்த அசைவும் இல்லை. ''ச்சே... இப்ப பார்த்து மவுஸ் மக்கார் பண்ணுது...'' மவுசை தட்டிய பின் தான், அது மெதுவாக உயிர் பெற்றது. பதட்டமும், படபடப்புமாய் கண்கள், அந்த மானிட்டரில் பதிந்தன. வெ ள்ளிக்கிழமை மதியம், 1:00 மணியிலிருந்து, காட்சிப் பதிவுகள் திரையில் ஓட ஆரம்பித்தன. மதியம், 1:25க்கு மதிவதனி, ஆய்வகத்தை பூட்டிவிட்டுச் செல்வது பதிவாகி இருந்தது. அதற்குப் பின், காரிடாரில் மாணவர்கள் போவதும், வருவதுமாக இருந்தனர். சரியாக, 1:56 மணிக்கு காரிடார் வெறிச்சோடியது. வீடியோவின் வேகம் அதிகரிக்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, காரிடாரில் மாணவர் நடமாட்டம் ஆரம்பித்தது. ''வீடியோவின் வேகத்தை குறைச்சுக்கோ, பரத்... எல்லாரும் ரொம்ப கவனமா பாருங்க. ஆய்வகம் பக்கமா மாணவர் யாராவது போறாங்களான்னு நோட் பண்ணுங்க...'' 'ஓகே மேம்...' மாணவர்கள் குழு குழுவாக, காரிடார் வழியாக வெளியேறும் காட்சி நகர்ந்தது. சில ஆசிரியர்கள் பேசியபடி காரிடாரைக் கடந்தனர். பின், மெதுவாக அந்த நீண்ட வழித்தடம் வெறிச்சோடத் துவங்கியது. ''ஆய்வகப் பக்கம் கூட யாரும் திரும்பலையே...'' என்றான் சோர்வாக, கதிர். ''சரி சரி... வீடியோவோட வேகத்தை அதிகரிச்சுக்கோ, பரத்...'' வீடியோவின் வேகம் சற்று அதிகரித்தது. ஆறு பேரின் பார்வையும் திரையிலேயே உறைந்திருந்தது. மாலை, 5:42 மணி - காரிடார் காலியாக இருந்தது. திடீரென இடதுபுறத்தில் இருந்து ஒரு மாணவன் வந்தான். ''டேய், யாரோ வர்றான்...'' என்று, சட்டென நிமிர்ந்தான், குமார்; வீடியோவை நிறுத்தினான், பரத். அந்த மாணவன் 12ம் வகுப்பு யூனிபார்மில் இருந்தான். தோளில் பை இருந்தது. ''அவன், 12ம் வகுப்பு பையன் மேம்...'' என்றாள், வினோதா. ''வீடியோவை நார்மல் வேகத்தில் இயக்கு...'' வீடியோவில் காட்சி துவங்கியது. அந்த மாணவன் சற்று பதட்டமாகவே வந்தான். சுற்றிலும் யாராவது இருக்கின்றனரா என்று, அவ்வப்போது பார்த்துக் கொண்டான். ''அவனை பார்த்தால், ஆய்வகத்துக்கு வர்ற மாதிரி தான் இருக்கு...'' என்று, ஊகத்தை வெளிப்படுத்தினான், குமார். குமாரின் ஊகம் சரியாகவே இருந்தது. அவன் நேராக ஆய்வகம் நோக்கி வந்தான்; ஆய்வகக் கதவுக்கு அருகே நின்றான். ஆறு பேரும் பதற்றமாக, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ''மேம்... இவன் தான் அந்த துரோகி...'' என்று, மெதுவாக கத்தினான், பரத் . ''மவனே மாட்டுனடா...'' பற்களைக் கடித்தான், குமார். ''கதவுக்கிட்டயே நிக்கிறானே...''அஞ்சலியின் குரல் நடுங்கியது. ''கதவைத் திறப்பான் பாரு...'' பதட்டமாக சொன்னான், குமார். மதிவதனிக்கும் பதட்டம் வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக பார்த்தபடி இருந்தார். அவரது பார்வை, திரையிலேயே பதிந்து இருந்தது. - தொடரும்... - ஜாரா நரேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !