புராஜெக்ட் ஓ (10)
முன்கதை: அறிவியல் கண்காட்சிக்காக, புதிய உயிரியை உருவாக்கும் மாணவ, மாணவியர் குழு சோதனை திட்டத்தை வகுத்தது. திட்டப்படி ஆய்வக இன்குபேட்டரில் வார இறுதியில் வைத்து சென்ற பொருட்கள் திங்களன்று மாயமாய் மறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வகத்தில் ஏதோ கூடாத விஷயம் நடந்துள்ளது என சந்தேகம் எழுப்பினார், ஆய்வு வழிகாட்டி ஆசிரியை மதிவதனி. இனி- ஆசிரியை மதிவதனியின் வார்த்தை மாணவ, மாணவியர் ஐந்து பேரின் உடலில் மெல்லிய நடுக்கத்தை ஏற்படுத்தியது. ''மேம், வெள்ளிக்கிழமை நாம போன பின், இன்று காலை வரை, முருகேசன் அண்ணா தவிர யாரும் வரலை...'' என்றாள் அஞ்சலி. ''முருகேசன் அண்ணன், 15 வருஷமா இந்த பள்ளியில் வேலை பாக்குறாரு...'' என்றார், மதிவதனி. ''அவருக்கு இந்த ஆய்வகம் பற்றி, நம்ம அளவுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா, ஒன்றுமே தெரியாதுன்னு சொல்ல முடியாதுல...'' ''இல்ல அஞ்சலி... அவருக்கு இந்த புராஜெக்ட் பற்றி எல்லாம் தெரியாது...'' ''ஒருவேளை தெரிஞ்சிருந்தா, மேம்...'' ''எப்படி தெரியும்... அவர், சாதாரண ஆய்வக உதவியாளர். அவ்ளோ தான்...'' குரலில் லேசான எரிச்சல் தெரிந்தது. ஆழமாக மூச்சை இழுத்தாள், அஞ்சலி. ''அஞ்சு வருஷம், டாக்டர் கூட இருக்கிற கம்பவுண்டர்கள், கிளினிக் திறந்து சிகிச்சை பண்ணுறது இல்லையா... அதே மாதிரி, அறிவியல் மேல ஆர்வம் இருந்தா யாரும் கத்துக்கலாம்...'' அந்த வார்த்தைகள், ஆய்வகத்திற்குள் மீண்டும் அமைதியை உண்டாக்கின. குமார், பரத், வினோதா மூவரும் அஞ்சலியை நிமிர்ந்து பார்த்தனர். அப்போது, மெதுவாக குறுக்கிட்டான், கதிர். ''அஞ்சலி சொல்றதுல கொஞ்சம், 'லாஜிக்' இருக்கு மேம்...'' அவனைப் பார்த்தார், மதிவதனி. ''நீயும், அவளோட சேர்ந்து பேசுறியா...'' ''கோபப்படாம யோசிச்சு பாருங்க. டி.என்.ஏ.,வைப் பிரித்தெடுக்க பயன்படுத்தும், 'ரேபிட் கிட்' அதற்கான ரசாயன திரவங்கள்... இதெல்லாம் நீங்க இதே ஆய்வகத்தில் தானே வச்சிருந்தீங்க... ''இப்போ, 'நெட்'ல தேடினா, அதைப் பற்றி நிறைய விஷயம் கிடைக்குது. அறிவியல் மேல ஆர்வம் இருந்தா, அடிப்படையான விஷயங்களை யார் வேண்டுமானாலும் புரிஞ்சுக்க முடியுமே, மேம்...'' ''இது, வேலிட் பாய்ன்ட்...'' என்றாள் வினோதா. இதைக் கேட்டதும் எதுவும் பேச இயலாமல் அமைதியாக நின்றார் மதிவதனி. அர்ப்பணிப்புள்ள ஊழியர், முருகேசன்... மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் எப்போதும் மரியாதையாகப் பேசுபவர். அவர் மேல் சந்தேகமா... ஆனால், இவர்கள் சொல்லும் விஷயங்களும், கண்காணிப்பு கேமரா பதிவுகளும், அவரை நோக்கி விரல் நீட்டுவதை, மதிவதனியால் மறுக்கவும் முடியவில்லை. தவித்தார், மதிவதனி. ''முருகேசன் அண்ணாவிடம் கேட்டுடலாம் மேம்...'' அஞ்சலி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, கதவருகே காலடி சத்தம் கேட்டது. ''குட்மார்னிங் டீச்சர்...'' என்றபடி, வழக்கமான சிரிப்புடன் உள்ளே வந்தார் முருகேசன். எல்லாரும் அவர் முகத்தையே பார்த்தனர். எப்போதும் போல சகஜமாகவே இருந்தது. ''என்ன டீச்சர், காலையிலேயே எல்லாரும் வந்திருக்கீங்க...'' என்று கேட்டார் முருகேசன். சற்றும் தயங்காமல், ''முருகேசன் அண்ணே... இந்த இன்குபேட்டர்ல ஒரு முட்டை வச்சிருந்தேனே... அதை பார்த்தீங்களா...'' என்றார், மதிவதனி. அடுத்த நொடி, ''ஓ... அந்த உடைஞ்ச முட்டையா...'' என்றார், சாதாரணமாக முருகேசன். ஆறு பேரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். ''உடைஞ்சிடுச்சா...'' என்று, கிட்டத்தட்ட கத்தி விட்டான், கதிர். ''ஆமாப்பா... காலைல லேபைத் திறந்து பெருக்குறப்போ, இன்குபேட்டர் பக்கத்துல ஏதோ கொழ கொழன்னு, ஈரமா இருந்தது. இன்குபேட்டரை திறந்து பார்த்தா, உள்ளே முட்டை ஓடுகள் மட்டும் கிடந்துச்சு...'' என்ற முருகேசன் தொடர்ந்து, ''ஏதோ கெட்டுப் போன கூமுட்டையை பசங்க உடைச்சு போட்டுட்டு, ஓட்டை மட்டும் இன்குபேட்டர்ல வச்சிட்டு போயிட்டாங்கன்னு நினைச்சு, எல்லாத்தையும் கூட்டி துடைச்சு குப்பைத் தொட்டில போட்டுட்டேன்...'' என்றார். கதிரின் முதுகுத்தண்டில் ஒரு ஜில்லிப்பு ஓடியது. ''முட்டை ஓடு மட்டும் இருந்துச்சா அண்ணே...'' என்று மெதுவாகக் கேட்டாள், அஞ்சலி. ''ஆமாம்மா... இன்குபேட்டர் உள்ளே வெறும் முட்டை ஓடு மட்டும் தான் இருந்துச்சு. நல்லா சுத்தம் பண்ணிட்டேம்மா... நீங்கள் இன்குபேட்டரை உபயோகப்படுத்தி கொள்ளலாம்...'' என்றார் முருகேசன். அவர்களது பதற்றத்தை கவனிக்காமல், ''நான், டீ சாப்பிட்டு வந்துடுறேன். நீங்க வேலை முடிச்சிட்டீங்கன்னா, பூட்டிட்டு போயிடுங்க, டீச்சர்...'' என்று சொல்லி நகர்ந்தார், முருகேசன். அஞ்சலிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தலையில் கை வைத்து அருகில் இருந்த மேசையில் கவிழ்ந்தான், கதிர். ஆய்வகம் முழுக்க, மீண்டும் அமைதி நிலவியது. சுதாரித்தபடி, ''கமான் ஸ்டூடண்ட்ஸ் வாங்க... அந்த குப்பைத் தொட்டியை பார்க்கலாம்...'' என்ற மதிவதனி, ஆய்வகத்தின் மூலையில் இருந்த குப்பைத் தொட்டியை நோக்கி நகர்ந்தார். மற்ற ஐவரும் அவரை முந்திக் கொண்டு பாய்ந்தனர். - தொடரும்... - ஜாரா நரேஷ்