புரிந்து படி!
தேனி, பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2014ல் 10ம் வகுப்பு படித்த போது, கணித ஆசிரியையாக இருந்தார் வித்யா. கணித சூத்திரங்கள், வடிவியல் மற்றும் அளவீடுகளை பகுதி வாரியாக பிரித்து எளிதில் மனதில் பதியும் படி கற்பிப்பார். வகுப்பு முடியும் போது, அன்று நடத்திய சூத்திரங்களை வரிசைப்படி ஒவ்வொருவராக கூற செல்வார். மாணவியரை தனித்தனிக் குழுக்களாக பிரித்து சூத்திரங்களை திரும்பத் திரும்ப எழுதும்படி அறிவுறுத்துவார். எப்போதும் போல அன்றைய வகுப்பின் முடிவில் மனப்பாடம் செய்திருந்த சூத்திரங்களை ஒப்பிக்க சொன்னார். கூட்டத்துடன் கூட்டமாக எதையோ கூறிக்கொண்டிருந்தேன். திடீரென, 'அனைவரும் நிறுத்துங்க... நீ மட்டும் தனியே கூறு...' என கேட்டதும் திடுக்கிட்டேன். தனியே உளறியபடி முழித்தேன். காதை திருகி, 'எதையும் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்தால் இப்படித்தான் ஆகும்...' என கடிந்து, 'புரிந்து படித்து, எழுதி பார்...' என அறிவுறுத்தினார்.சொற்படி கேட்டு தெளிவாக படித்தேன். பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். அதை அறிந்து முகமலர்ச்சியுடன், 'இதேபோல் கல்லுாரியிலும் முன்னேறு...' என வாழ்த்தினார். எனக்கு 27 வயதாகிறது. இல்லத்தரசியாக உள்ளேன். செவிலியர் பயிற்சி முடித்துள்ளேன். பள்ளியில் ஆசிரியை வித்யா வலியுறுத்திய வழிமுறைகள் என் வாழ்வில் பயன்படுகிறது. அவர் போதித்த வழியில், என் குழந்தைக்கு புரிந்து படிக்கும் வகையில் பயிற்சிகள் அளித்து மேன்மையுடன் வாழ்கிறேன். - ஏ.ஆனந்தி, கோவை. தொடர்புக்கு: 63825 67989