உள்ளூர் செய்திகள்

ஆட்டோகிராப்!

ஈரோடு மாவட்டம், பவானி நாட்டாண்மை கழக அரசு உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 11ம் வகுப்பில் பொறியியல் பாடத்தை முதன்மையான பாடமாக தேர்வு செய்து படித்தேன். அந்த பாடத்தை கற்பித்த ஆசிரியர் ரா.கல்யாணசுந்தரம் அக்கறையோடு மாணவர்களின் இயல்பறிந்து முன்னேற வழி கூறுவார்.என் வீட்டருகே தங்கியிருந்த அவரை அடிக்கடி சந்தித்து நட்பை பேணினேன். கல்வி சுற்றுலாவாக தொழிற் கூடங்களுக்கு அழைத்துச் செல்வார்.ஐ. எச்.மோரிஸ் எழுதிய, 'ஜியோமெட்ரிகல் டிராயிங்' என்ற பொறியியல் அரிச்சுவடி புத்தகத்தில் இருந்த படங்களை வரைய, நன்கு பயிற்சி அளித்தார். ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். பின், ஐ.டி.ஐ.,யில் படித்த பே ாது கட்டட வரைவாளராக பயிற்சி பெற அது உதவியது. பள்ளி ஆண்டு விழாவில் டாக்டர் மு.வரதராசனார் எழுதிய, 'மணல்வீடு' புத்தக முகப்பில், 'அடக்கம், பணிவில் முதன்மையாக திகழ்வதற்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது' என எழுதி, அப்புத்தகத்தை பரிசாக தந்தார் பொறியியல் ஆசிரியர்.என் ஆட்டோகிராப் புத்தகத்தில், 'தெற்றனவே இளையருடன் களிப்புகையில் சூழ்ந்திருந்து, சற்றனவே பிரிவாய் பிரிகின்றீர்-. உள்ளத்து அன்பையெல்லாம் கொட்டி, பண்புரையில் நனைத்தாயே என்னென்பேன் என்னென்பேன்...' என எழுதி கையெழுத்திட்டு தந்ததை போற்றி பாதுகாப்பாக பராமரிக்கிறேன்.தற்போது என் வயது, 79. தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பொறியியல் ஆசிரியர் ரா.கல்யாணசுந்தரம் கூறிய அறிவுரைகளை பின்பற்றி வாழ்கிறேன்.- க.ரவீந்திரன், ஈரோடு.தொடர்புக்கு: 99420 94042


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !