உள்ளூர் செய்திகள்

கலகம்!

நீண்ட நாட்களாக பேச்சு வராமல் தவித்தான் ஆதர்ஷ். அன்று - ஓவிய வகுப்பில், அவனது பேச்சு ஒரு கலகத்தை உண்டாக்கியது. தாளில் கோடு போட்டபடி, ''அப்பா சிரிப்பார்... அம்மா முறைப்பார்...'' என்றான் ஆதர்ஷ். இந்த ஒற்றை வரி பேச்சு, பள்ளி நிர்வாகத்தை யோசிக்க வைத்தது. ஆதர்ஷின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்தது நிர்வாகம். பெற்றோர் வகுப்பிற்குள் நுழைந்த போது, ஒரு காகிதத்தில் பென்சிலால் கோடுகள் போட்டுக் கொண்டிருந்தான் ஆதர்ஷ். வரவேற்ற ஆசிரியர், ''உங்க வீட்டில் ஏதேனும் பிரச்னையா...'' என்று ஆதர்ஷின் அம்மா சுமதியிடம் விசாரித்தார். பின், விபரத்தை கூறினார். உருவங்களை தத்ரூபமாக வரையும், 'போட்ரெய்ட்' ஓவியரான சுமதி, ''கணவரை மாடலாக வைத்து வீட்டில் படங்கள் வரைகிறேன். மணிக்கணக்கில் அசையாமல் சிரித்தபடி அமர்ந்திருப்பார்... ''கையில் துாரிகையை ஏந்தி, அவரின் முக நுணுக்கத்தை உன்னிப்பாக கவனிக்க, கண்களைச் சுருக்கி தீவிரத்துடன் உற்றுப் பார்ப்பேன். அதை கவனித்திருக்கிறான் ஆதர்ஷ்... சிறுவன் கண்களுக்கு, அது அப்பாவை முறைப்பது போலத் தெரிந்திருக்கிறது...'' என விவரித்தாள். பெற்றோரை கண்டதும், ''அம்மா... இப்போ அப்பாவை முறைப்பீங்களா...'' என்றபடி ஓடி வந்தான் ஆதர்ஷ். வகுப்பறையில் பதற்றம் தணிந்து, சிரிப்பொலி பரவியது. பட்டூஸ்... உண்மை அறிந்து தெளிய வேண்டும்.பாலசாண்டில்யன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !