உள்ளூர் செய்திகள்

சிம்னி விளக்கு!

மதுரை மாவட்டம், எம்.சத்திரப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில், 1968ல், 6ம் வகுப்பில் படித்த போது, அரசு மாணவர் இல்லத்தில் தங்கியிருந்தேன். அதை சுற்றி, 50 ஏக்கர் பரப்பில் தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மாணவர் இல்லத்துக்கு மின் வசதி இல்லாததால், குமிழ் கண்ணாடி பொருத்திய சிம்னி விளக்கை ஒவ்வொருவரும் வைத்திருந்தோம். அதன் உதவியால் இரவில் சிரமத்துடன் படிப்போம். ஒவ்வொரு நாளும் மாலை, 6:00 மணிக்கு அறிவிப்பு மணி ஒலிக்கும். உடனடியாக படிக்க தயாராவோம். மாணவர் இல்ல பொறுப்பாளராக இருந்த வார்டன் ராசு அதை கண்காணிப்பார். இரவு உணவு முடிந்தவுடன் கட்டாயம் துாங்க வேண்டும் என்ற நடைமுறையை வகுத்திருந்தார். அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து காலை கடன்கள் முடித்து, இறை வணக்க கூட்டத்தில் பங்கேற்போம். பின், உணவை முடித்து பள்ளி செல்வோம். விடுதியில் மின் வசதி இன்மையால் போதிய வெளிச்சமின்றி படிக்க இயலாமல் திணறுவோம். இதை கவனித்து களையும் வகையில் தலைமையாசிரியர் துாசியா பிள்ளையை அணுகினார் வார்டன். பள்ளியிலே தங்கி மின் விளக்கு ஒளியில் படிக்க வகை செய்தார் தலைமை ஆசிரியர். சிரமங்களை பொருட்படுத்தாது தொடர்ந்து படித்து மதுரை யாதவர் கல்லுாரியில் பட்டம் பெற்றேன். எனக்கு 70 வயதாகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிரமப்பட்ட போது உதவி பள்ளி படிப்பை சிறப்புடன் முடித்து வளம்பெற உறுதுணையாக இருந்த வார்டன் ராசுவை, கண்கண்ட தெய்வமாக வணங்கி வாழ்கிறேன். - ஆர்.பெரியணன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !