செல்லக்கிளி!
வகுப்பறையில் எப்போதும் கலகலப்பாக இருப்பாள் கீர்த்தி. அன்று விடாமல் அழுதழுது முகம் சிவந்து போயிருந்தது. ''என்னாச்சு... அம்மா உன்னை திட்டினாங்களா... உடல்நிலை சரியில்லையா...'' பரிவுடன் விசாரித்தபடி நெற்றியை தொட்டு பார்த்தாள், தோழி ரம்யா. ''விடு... என்னை எதுவும் கேட்காதே, ப்ளீஸ்...'' மீண்டும் அழத் துவங்கினாள் கீர்த்தி. நன்றாக படிக்க கூடியவள், கீர்த்தி. வகுப்பில் சுட்டியாக இருப்பாள். 'இவளுக்கு என்ன ஆயிற்று' என, கேட்டபடி இருந்தனர், மாணவர்கள். கீர்த்தி அழுதபடியே இருந்தாள். முதல் பாட வேளை துவங்கியது. வகுப்பாசிரியர் மாலா, வகுப்பறைக்குள் நுழைந்தார். அனைவரும் வணக்கம் சொல்ல எழுந்தனர். ஆனால், கீர்த்தி மட்டும் பெஞ்சில் தலை கவிழ்ந்தபடி, அழுது கொண்டு இருந்தாள். ஆசிரியையிடம், 'மிஸ்... என்னவென்று தெரியவில்லை. பள்ளி வந்ததிலிருந்து அழுதபடி இருக்கிறாள்...' என்றனர், மாணவர்கள். கீர்த்தியின் தலையை மெதுவாக நிமிர்த்தி, ''இங்க பாரு... என்னிடம் சொல்லு...'' என்றார், ஆசிரியை. அழுதபடியே, ''வீட்டில் ஒரு கிளி வளர்த்தோம். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன செய்தாலும், என் செல்லக்கிளி என் தோளில் அமர்ந்து விளையாடும். வீட்டிற்கு வரும் விருந்தினரை நல்லபடியாக பேசி வரவேற்கும். காலையில் என்னை எழுப்பும். அதை, காட்டில் விட்டு வந்துவிட்டார், அப்பா. என் கிளி இல்லாமல், என்னால் இருக்க முடியாது, மிஸ்...'' என்றாள், கீர்த்தி. ''அது இனத்தோட சுதந்திரமா பறந்து, சந்தோஷமா இருக்க வேண்டியதை, வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து வளர்ப்பது தவறில்லையா... நீ உன் அம்மா, அப்பாவை விட்டு பிரிந்து இருக்க முடியுமா... நாள் முழுதும் வீட்டுக்குள்ளே இருக்க முடியுமா...'' என்றார், ஆசிரியை. முடியாது என தலையாட்டிய கீர்த்தி, ''என் கிளி, வானத்தில் சுதந்திரமாய் பறக்கட்டும்...'' எனக்கூறி சிரித்தாள். வகுப்பில் உள்ள அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். பட்டூஸ்... எந்தவொரு பிராணிகளையும் அன்பு என்ற பெயரில் அடைத்து வைத்து துன்புறுத்தக் கூடாது. - த.கலா