உள்ளூர் செய்திகள்

மல்கோவா மாம்பழம்!

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கிராமம் புதுக்குடி. மருது மற்றும் ஆல மரங்கள் நிறைந்தது.மரங்களில் கூட்டமாக வசித்து வந்தன குரங்குகள். விளை நிலங்களில் புகுந்து வாழை பழங்களை சாப்பிட்டு வந்தன.அன்று பெரிய மாம்பழத்தை குரங்குகளுக்கு கொடுத்தார் முதியவர். பங்கு போட்டு தின்றன. கடைசியில் விதை மட்டும் மிஞ்சியது. அதை உடைத்து, பங்குப் போட நினைத்தன. வயதில் மூத்த குரங்கு, 'மாம்பழம் ரொம்ப தித்திப்பாக இருந்தது. விதையை உடைத்து ருசிக்காமல், முளைக்க வைத்தால், மரமாக வளர்ந்து, நிறைய கனிகளை தரும். ஆசை தீர புசிக்கலாம். பிற உயிரினங்களுக்கும் வழங்கலாம்...' என்று கூறியது.அதை ஏற்று, சிறிய குழி ஒன்றை தோண்டி விதைத்தன. ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றின. இந்த செயல் அவற்றுக்குள் ஒற்றுமையை வளர்த்தது.மாவிதை முளைத்து துளிர் விட ஆரம்பித்தது. காட்டில் இருந்து முள்குச்சிகளை எடுத்து வந்து வேலி அமைத்தன சில குரங்குகள். தொடர்ந்து, மழை பொழிய, மாங்கன்று வேகமாக வளர்ந்தது. அலைந்து திரிந்து சாண உரத்தை சேகரித்து வந்து போட்டன. மாங்கன்று வளர்ந்து பெரிதானது. பூக்க துவங்கியது மாமரம். தேனை உறிஞ்ச வண்டுகளும், வண்ணத்துப்பூச்சிகளும் வர ஆரம்பித்தன.பூக்களை நெருங்க விடாமல் அவற்றை விரட்டி அடித்தன குரங்குகள்.அதைக் கண்ட மூத்த குரங்கு, 'வண்டுகளும், வண்ணத்துப்பூச்சிகளும் பூக்களில் புகுந்து தேனை உறிஞ்சிய பின், மற்ற பூக்களில் அமர்ந்தால் தான் மகரந்தசேர்க்கை நடைபெறும். அப்போது தான், பூ பிஞ்சாக மாறும். அப்படி நடக்கவில்லை என்றால், பூக்கள் உதிர்ந்து போகும். அவற்றால் பயன் எதுவும் இல்லாமல் போய் விடும்...' என்று சொன்னது. அந்த ஆலோசனைக்கு செவி சாய்த்தன குரங்குகள். பின், பூக்களில் சுதந்திரமாக அமர்ந்து தேனை உறிஞ்சின வண்டுகள். அந்த செயலை ரசித்து மகிழ்ந்தன குரங்குகள்.பூக்கள் பிஞ்சாகி, காயாகி நிறைய பழங்களை தந்தது மாமரம். அவற்றை ஆசை தீர தின்று, 'மாம்பழமாம் மாம்பழம்... மல்கோவா மாம்பழம்...' என பாடி மகிழ்ந்தன குரங்குகள். ஏராளமான பறவைகளும் ரசித்து புசித்தன. மாமரம் பல்லுயிரினங்களை மகிழ்விக்கும் கூடாரமாக மாறியது.குட்டீஸ்... கூட்டாக முயற்சி செய்தால் எதிலும் வெற்றி பெறலாம்.எஸ்.டேனியல் ஜூலியட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !