உள்ளூர் செய்திகள்

சோம்பல்!

நீல சிறகுடைய அழகிய வானம்பாடி ஒன்று, காட்டில் ஆடி பாடி பறந்து கொண்டிருந்தது; குரலும் இனிமையாக இருந்தது.அன்று வானம்பாடிக்கு உணவு கிடைக்கவில்லை. தொப்பி அணிந்த சிறுவன், சிறு பையுடன் காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தான். சிறுவனிடம், 'பையில் என்ன வைத்திருக்கிறாய்...' என்றது, வானம்பாடி. திறந்து காட்டியபடி, 'கொண்டைக் கடலை...' என்றான் சிறுவன். வானம்பாடிக்கு நாக்கில் எச்சில் ஊறியது.'எங்கே எடுத்து போகிறாய்...' 'சந்தையில் இதை கொடுத்து மாற்றாக, வானம்பாடி இறகு பெற்று தொப்பியில் அணிந்து கொள்வேன்...' என்றான் சிறுவன். 'எனக்கு கடலைகள் தந்தால், இங்கே, இப்போதே இறகு தருவேன்...' என்றது, வானம்பாடி. சம்மதித்து கடலையை கொடுத்தான் சிறுவன். சாப்பிட்டபடி இறகு ஒன்றை கொடுத்தது, வானம்பாடி.அதை தொப்பியில் அணிந்து கொண்டான் சிறுவன். ஒவ்வொரு நாளும் வானம்பாடி, கடலையை வாங்கி, இறகு கொடுப்பது வழக்கமானது.இதனால் சோம்பேறியாகி விட்டது, வானம்பாடி. உணவிற்காக சிறுவனை எதிர்பார்த்து காத்திருந்தது. இப்போது அதனிடம் சிறகுகளே இல்லை. அவலட்சணமாக காணப்பட்டது. காட்டு விலங்குகள் அதை இகழ்ந்தன.இப்போது சிறுவன், காட்டுக்கு வருவதும் குறைந்தது. பசியால் வாட ஆரம்பித்தது வானம்பாடி. பறந்து திரிந்து உணவை தேட துவங்கியது. சிதறி கிடக்கும் தானியங்களை சாப்பிட்டு, பசி ஆறியது. சிறகுகள் வளர ஆரம்பித்தன. சுறுசுறுப்பாக மீண்டும் ஆடி பாடி திரிந்தது.ஒருநாள் ஒரு குடிசையின் மேல் பறந்து கொண்டிருந்தது வானம்பாடி. அங்கு தொப்பி அணிந்த சிறுவனை கண்டது. அவனும் பறவையை அடையாளம் கண்டு சிறிது கடலை எடுத்து வந்தான்.'வேண்டாம்... எனக்கான உணவை நானே தேடும் சுறுசுறுப்பு எனக்கு வந்து விட்டது...' எனக் கூறி, மகிழ்ச்சியுடன் பறந்தது வானம்பாடி.குழந்தைகளே... உழைத்து வாழ வேண்டும். நெ. ராமகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !